Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு திருவிழா!

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய " மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தை பெருக்கும் முதலீடு" முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் 07.09.14 அன்று நடைபெற்றது. முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன், நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பன் பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலீட்டாளர்களிடம் உரையாற்றினர். 
 
 
 காலை ஒன்பது மணிமுதலே அரங்கிற்கு வாசகர்கள் வர தொடங்கியிருந்தனர், நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே முழு அரங்கமும்  வாசகர்களால் நிரம்பி விட்டது. சிறப்பு அழைப்பாளர்களுக்கான வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் கல்வி மற்றும் விநியோக வளர்ச்சி பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ் மியூச்சுவல் ஃபண்ட் தரும் பலன்கள், முதலீட்டின் அவசியம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். தவிர ஒவ்வொரு தேவைகளுக்கும் ஏற்ப திட்டங்கள் இருக்கிறது. நமது குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்பதை படக்காட்சிகளுடன் விளக்கினார்.  
 
அவரைத்தொடர்ந்து பேசிய முதலீட்டு ஆலோசகர் நாகப்பன், ‘‘ நான் முக்கியமாக நமது நிதி ஆலோசனை சார்ந்த விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். அதன் ஒரு அங்கமாக பங்குச்சந்தை முதலீடு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முக்கிய அம்சங்களை குறிப்பிட விரும்புகிறேன். பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அதை எப்படி முதலீடு செய்கிறோம் என்பதுதான் முக்கியமானது. பணத்தின் வளர்ச்சி குறித்து நமக்கு தெரிந்ததுதான்.
 
1981 ஆண்டில் 100 ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்கியிருந்தோம் என்றால், இன்றைக்கு அதை 900 ரூபாய்க்கு மேல் கொடுத்தால்தான் கிடைக்கும். இதற்கு ஏற்ப இன்பிளேஷனை தாண்டி வருமானம் கொடுக்கும் வெகு சில முதலீடுகளில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முக்கியமானது. 1980ல் விப்ரோ பங்கு ஒன்றில் விலை 100 ரூபாய். நூறு பங்குகளை வாங்கியிந்தால் அதன் மதிப்பு இன்று ரூ. 475 கோடி.  ஒருவேளை இது போன்ற பங்குகளை எத்தனை வருடம் கையில் வைத்திருப்போம் என்றால் தெரியாது. ஒரு போனஸ் கிடைத்ததும் விற்பனை செய்திருப்போம். அதனால்தான் பங்குச் சந்தை முதலீடுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறேன். அதாவது நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கிறபோது நஷ்டத்துக்கான வாய்ப்பு குறைவு. இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவென்றால் நமது முதலீட்டுத் தயக்கங்களை களைய வேண்டும்,
 
குறிப்பாக முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருக்கவும் என்று எச்சரிக்கை வாசகத்தை சொன்னால் அந்த முதலீட்டு பக்கமே திரும்பி பார்ப்பதில்லை. விண்ணப்பத்தை படித்து பார்த்துவிட்டு முதலீடு செய்யவும் என்றால் அது ஏதோ ரிஸ்க் அதிகமான முதலீடு என்று தவிர்த்து விடுகின்றனர். உண்மையில் இப்படி சொல்வதுதான் சரியானது. எங்களிடம் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லை என்பதை நம்பக்கூடாது" என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்கிற கேள்வியிலிருந்து ஆரம்பித்த சொக்கலிங்கம் பழனியப்பன், ‘‘ முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? நமது தேவை என்ன? எவ்வளவு காலம் உள்ளது? திட்டங்கள் என்ன மார்க்கெட்டில் உள்ளது என்பதை ஒளிகாட்சி வடிவில் விளக்கினார். முதலீட்டை, குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட காலத் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நமது முதல் செலவு என்பது சேமிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக இளமையிலிலேயே முதலீட்டை தொடங்குங்கள்’’ என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் ‘‘ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறோம் என்றால் தினசரி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பார்த்தால் போதும். மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலிருந்து பலனை எடுக்க பத்து வருடங்களாவது காத்திருக்க வேண்டும்’’ 
என்றார். 
 
அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன், ‘‘ நமது முதலீட்டு பழக்கங்களில்  மாற்றங்கள் வேண்டும். நாம் முதலீடு செய்கிறோம். 

அதற்கான பலனை நாமே அனுபவிக்க வேண்டும் என்கிற மனநிலையில் மாற்றம் வேண்டும். 
இப்போதைய
 முதலீடு என்பது நமக்கான முதலீடு கிடையாது. அது நமது சந்ததிக்கான முதலீடு என்று யோசிக்க வேண்டும். முதலீட்டாளர்கள் நிகழ்ச்சிகளில் நான் பேசுகிறபோது எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் என்று
 எங்கும் பேசுவதில்லை. எங்களுடைய வலிமையை பற்றி மட்டும்தான் 
குறிப்பிடுவேன். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எவ்வளவு சொத்து மதிப்பை கையாளுகிறது என்பதை மட்டும் பாருங்கள் என்பேன். அதுதான் முதலீடாளர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும். நான் இந்த நிறுவனத்தில் 1994 ல் டிரேடராக சேர்ந்தேன். இன்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளேன். தவிர நான் இந்த நிறுவனத்தின் சேர்ந்தபோது நிறுவனம் கையாளும் சொத்து மதிப்பு ஸ்ட்ராடஜிபடி ஜீரோ. இன்று சுமார் 
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பை கையாளுகிறது. இதை எதற்கு நான் குறிப்பிடுகிறேன் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சியை கொடுக்கும் தன்மை கொண்டது. நான் இந்த துறைக்கு வரும்போது செபி அமைப்பு கூட கிடையாது. பல நேரங்களில் இழப்புகளிலிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டோம். பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களைப் பற்றி கூறிக்கொள்கிறபோது தங்களது நிறுவனம் அவ்வளவு லாபம் கொடுக்கிறது, இவ்வளவு லாபம் கொடுக்கிறது என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்கள். எந்த இடத்தில் நஷ்டமடைந்தோம் என்பதை சொல்லுவதில்லை. ஆனால், லாப நஷ்டம்தான் சந்தையின் நிரந்தரம். இதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் லாபகரமாக இயங்குவதற்கு பின்னணியில் அவ்வளவு நஷ்டபட்ட பாடம் இருக்கிறது. நாங்கள் அந்த பாடத்தை எடுத்துக் கொள்கிறோம். அந்த பயம்தான் லாபகரமாக இயங்க வைக்கிறது. ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். அந்த ஏற்ற இறக்கத்தில் பயத்தோடுதான் பயணம் செய்ய வேண்டும். அந்த வகையில் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான வகையில் வழிகாட்டும்’’ என்று முடித்தார். 
 
நிகழ்ச்சியின் முடிவில் வாசகர்கள் தங்களுடைய சந்தேகங்கங்களை கேட்டு தெளிவு பெற்றனர். 
 
 
- நீரை.மகேந்திரன்
படம்: இரா.யோகேஷ்வரன்(மாணவப் பத்திரிக்கையாளர்) 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ