Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலக்கரி சுரங்கங்களின் உரிமம் ரத்து: உச்ச நீதிமன்றம்

நிலக்கரி சுரங்கங்களின் உரிமம் ரத்து: உச்ச நீதிமன்றம்
 
சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த வழக்கின் விசாரணை இன்று (24ஆம் தேதி) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி, 214 சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 
மொத்தமுள்ள 218 நிலக்கரி சுரங்கங்களில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் 4 சுரங்கங்களின் உரிமம் மட்டுமே செல்லும் எனவும், மீதமுள்ள 214 சுரங்கங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 
உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள 4 உரிமங்களில் கோல் இண்டியாவின் 2 சுரங்கங்களும், என்.டி.பி.சி., சி.ஐ.எல்.லின் தலா ஒரு சுரங்கமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து ஏற்கெனவே நாணயம் விகடம் வெளியிட்டுள்ள சிறப்பு பகிர்வு ஒரு பார்வைக்கு....
 
 
நிலக்கரி பற்றாக்குறை... இந்தியா இருள்கிறது !
 
இந்தியா ஒளிர்கிறது - பத்து ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க இந்த வாசகத்தைச் சொல்லித்தான் மக்களிடம் ஓட்டு கேட்டது. ஆனால், அப்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க ஜெயிக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின் இப்போது பா.ஜ.க மீண்டும் ஜெயித்திருக்கிறது. இந்தியாவைப் பிரகாசமாக ஒளிரவைப்பார் நரேந்திர மோடி என்கிற நம்பிக்கையில் மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனால், இன்றைக்கு இந்தியா இருளில் மூழ்கும் அபாயத்தில் சிக்கி இருக்கிறது.

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், இந்தியாவில் 100 அனல் மின் நிலையங் களில் 56 நிலையங்களில் வெறும் ஒரு வார காலத்துக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. அதுவும் தீர்ந்துவிட்டால், சில மாநிலங்கள் இருளில் மூழ்க வேண்டியிருக்கும் என்கிற செய்தி வெளியாகி அனைவரையும் கதிகலங்க செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் முறையே 7,200 மற்றும் 2,300 மெகாவாட் மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த மத்திய அரசாங்கம் போர்க்கால அடிப்படை யில் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, 56 மின் நிலையங்களில் இருந்த நிலக்கரி பற்றாக்குறை தற்போது 53 மின் நிலையங்களாக குறைந்திருக் கின்றன. அதாவது, மூன்று மின் நிலையங் களில் நிலக்கரி இருப்பு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. இந்த மின் நிலையங் களுக்கு நிலக்கரியை விநியோகம் செய்துவரும் கோல் இந்தியா நிறுவனம், பல்வேறு இடங்களில் கையிருப்பாக வைத்திருக்கும் நிலக்கரியை இந்த மின் நிலையங்களுக்கு அளித்ததன் விளைவாக மிகப் பெரிய அபாயம் இன்னும் சில வாரங்களுக்கு தள்ளிவைப்பட்டுள்ளது.

இந்த நிலக்கரி பற்றாக்குறை பெரிய அளவில் உருவானதற்கு காரணங்கள் பல. அந்தக் காரணங்களைப் பார்ப்பதற்குமுன் சில அடிப்படை புள்ளிவிவரங்களை முதலில் பார்த்துவிடலாம்.

குறைந்தது நிலக்கரி உற்பத்தி!

உலக அளவில் நிலக்கரியை அதிக அளவில் கையிருப்பில் வைத்துள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. என்றாலும்கூட தேவைக்குத்தக்க நிலக்கரியை நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்த ஆண்டில் மட்டும் நமக்குத் தேவையான நிலக்கரியின் அளவு சுமார் 787 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நமது நிலக்கரி உற்பத்தி வெறும் 590 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கிறது. அதாவது, தேவையைக் காட்டிலும் நம் நிலக்கரி உற்பத்தி ஏறக்குறைய 197 மில்லியன் டன்களுக்கு குறைவாக இருப்பது தற்போது ஏற்பட்டிருக்கும் நிலக்கரி பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணம். இத்தனைக்கும் இந்தியாவில் ஒரு நபரது மின்சாரத் தேவை அமெரிக்காவில் வாழும் ஒருவரின் மின்சாரத் தேவையைக் காட்டிலும் 17-ல் ஒரு பங்குதான்!

கவனிக்கத் தவறிய கையிருப்பு!

இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்கள் மூலம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு ஏறக்குறைய 50,842 கிகாவாட். ஆனால், இந்த ஆண்டு இதே ஆகஸ்ட் வரை உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 62,310 கிகாவாட். அதாவது, கடந்த ஆண்டைவிட சுமார் 5% அளவுக்கு மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியைத் திறமையாகப் பெருக்கிய இந்த அனல் மின் நிலையங்கள் தங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதா என்று கண்காணிக்கத் தவறிவிட்டன. உதாரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் அனல்மின் நிலையங்களுக்கு தினசரி தேவைக்கு 3,52,700 டன் நிலக்கரி தேவைப்பட்டது எனில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தினசரி தேவைக்கு 4,47,000 டன் நிலக்கரி தேவைப்பட்டது. இப்படி அதிகம் தேவைப்படும் நிலக்கரியை கையிருப்பில் வைத்துக்கொள்ள அனல்மின் நிலையங்கள் தவறிவிட்டன. இப்போது நிலைமை கைமீறிப் போனபின் என்ன செய்து நிலைமையை சமாளிப்பது எப்படி  என்று தெரியாமல் தவிக்கின்றன.

கோல் இந்தியா காரணமா?

அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் விநியோகம் செய்வ தில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், கோல் இந்தியா நிறுவனமோ இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்கிறது. புதிதாக உருவாக்கப் பட்ட அனல் மின் நிலையங்களின் 65 சதவிகித தேவையையும் பழைய அனல் மின் நிலையங்களின் 90 சதவிகித தேவையையும் கோல் இந்தியாதான் அளிக்கிறது. மின் உற்பத்தியைப் பெருக்கிய அளவுக்கு நிலக்கரியை கையிருப்பில் வைத்துக்கொள்ளாததற்கு நாங்கள் காரணம் அல்ல என்கிறது கோல் இந்தியா.

கைமீறிப் போன கடன்!

நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்  தங்கள் உற்பத்தியை அதிகமாக்கிக்கொள்ள முடியாதபடி அதிகமாக கடன் வாங்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கி தரும் தகவல்படி, நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வங்கிக் கடன் ரூ.5.04 லட்சம் கோடியாக  உள்ளது. இதில் விற்பனையாளர்களது கடன் மட்டும் 18 பில்லியன் டாலராக (ரூ.1.08 லட்சம் கோடி) உள்ளது.

இப்படி இருக்கும்போது, கோல் இந்தியாவுக்கு வர வேண்டிய பாக்கி வெறும் 1.4 பில்லியன் டாலராக (8,400 கோடி ரூபாய்) உள்ளது. உலக வங்கி கணிப்பின்படி, 2017-ம் ஆண்டு 27 பில்லியன் டாலர் (1.62 லட்சம் கோடி) மானியம் எந்தவித நடவடிக்கையும் இன்றி, வீணாகச் செலவழிக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு!

1993-2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அரசு அனுமதி அளிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் முறைகேடு நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றம் சொல்லி, இந்த அனுமதியை ரத்து செய்தது. இதனால் நிலக்கரி உற்பத்தி குறைந்து, பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டு மெனில், இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்.  இதற்காக  ரூ.17,000-க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஏற்கெனவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிமாக இருக்க, இந்த செலவும் கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.

மின்வெட்டு அபாயம்!

தற்போது ஏற்பட்டிருக்கும் நிலக்கரி பற்றாக்குறையினால், மும்பை உள்பட பல வட மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் இந்த மின்வெட்டினால் நாடு முழுவதும் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) அளவுக்கு  இழப்பு ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

என்ன செய்தார் மோடி?

2005-ல் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய மின்சாரத் தட்டுப்பாட்டைக் குஜராத் அரசு சந்தித்தது. அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடி, மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு சரியாக வைத்திருந்ததன் மூலம் மின் தட்டுப்பாட்டைக் குறைத்து, அந்த மாநிலத்தை மின்மிகை மாநிலமாக ஆக்கினார். அதுபோல, இப்போது ஏதாவது நடவடிக்கை எடுக்கமாட்டாரா என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் முகத்தில் கரி பூசியது இந்த நிலக்கரி பிரச்னைதான். இந்த ஆட்சியில் பிரதமர் மோடியின் முகத்தில் கரி பூசாமல் இருக்க வேண்டும் எனில், அவர் நிலக்கரி பற்றாக்குறையைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


‘‘அரசாங்கம் தீர்வு காண வேண்டும்!''

ஆர்.வெங்கடேசன், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், பிஎஸ்ஆர். அண்ட் கம்பெனி.

‘‘இந்தியாவில் உள்ள நிலக்கரி நிறுவனங்கள் தடுமாற்றமான நிலையைச் சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அடையும் நஷ்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலக்கரி நிறுவனங்களின் உற்பத்தி கணிசமான அளவில் குறைந்து வருவதும், நிலக்கரியை உற்பத்தி செய்ய ஆகும் செலவு நிலக்கரியை விற்பனை செய்யும் செலவைவிட அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

நிலக்கரியை நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்குக் குறைவாக விற்பதும் நஷ்டத்துக்கு வழிவகைச் செய்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரி சப்ளை ஒப்பந்தங்களை மறுமதிப்பீடு செய்து விலையில் மாற்றம் கொண்டு வராததே என நிலக்கரி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சரியான நடவடிக்கைகளும் நிர்வாகத் தரப்பில் எடுக்கப்படவில்லை என்கின்றன அந்த நிறுவனங்கள்.  அதுமட்டுமின்றி, அதிகத் திறனில் உற்பத்தி செய்யும் உற்பத்தி இயந்திரங்களை வாங்கியதாலும் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனை நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததும், உற்பத்திக்கு அதிக செலவு என்ற அடிப்படையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சில நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுரங்கங்களில் உற்பத்தி பணியைத் துவங்காமல், இதர பணிகளில் ஈடுபட்டு வருவதால், அந்தப் பகுதிகளில் உற்பத்திப் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அந்த இடத்துக்கான கட்டணம், கட்டுமானத் துக்கான கட்டணம் போன்றவற்றினாலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்கள் எல்லாம் நிலக்கரி உற்பத்தியைப் பாதித்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 200-க்கும் மேற்பட்ட நிலக்கரி உற்பத்தி செய்யும் பிளாக்குகளில் முறைகேடு உள்ளதாகவும், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிகிறது. இதனால் நிலக்கரி உற்பத்தி கணிசமாக குறையும். இது இந்தியாவின் மின் உற்பத்தியைக் கட்டாயம் பாதிக்கும். அதேபோல் இங்கு பணி செய்யும் ஆட்களின் வேலைவாய்ப்பு, நிலையங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது போன்றவை மின் உற்பத்தியைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது. அரசாங்கம் உரிய நேரத்தில் இதற்கு தீர்வு காணாவிட்டால் சிக்கல்கள் எழும். எனவே, இந்தப் பிரச்னையில் அரசாங்கம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.’’


ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ