Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: வெளிநாட்டிலிருந்து செய்ய முடியுமா?

 ?என் சகோதரர் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். 15 வருடங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். 2007-08-ல் அவர் இங்கு இருந்தபோது  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். அவருக்கு வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டு இருக்கிறது. தற்போது அவர் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்வதால் வரி சம்பந்தமான பிரச்னை வர வாய்ப்புள்ளதா?

@& சீனிவாசன், சென்னை.

பி.ஆர்.வி. வெங்கடேஷ், இயக்குநர், வேல்யூ இன்வெஸ்டிங் வெல்த் மேனேஜ்மென்ட்.

“உங்கள் சகோதரர் 2007-08-ம் ஆண்டுகளில் முதலீடு செய்த முதலீட்டை தேவைப்பட்டால் மாற்றி அமைக்கலாம். தற்போது என்ஆர்ஐயாக முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கு தனியாக கேஒய்சி படிவம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி, பிர்லா, ரிலையன்ஸ், டாடா போன்றவை அமெரிக்கா, கனடா போன்ற நாட்டில் இருக்கும் என்ஆர்ஐகளிடம் முதலீடு வாங்குவதைத் தவிர்த்துவிட்டது. சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்துவருகின்றன. அந்த நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

வரியைப் பொறுத்தவரை, முதலீட்டைக் குறுகிய காலத்தில் திரும்ப எடுக்கும்போது 15 சதவிகிதம் வரிச் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட கால முதலீட்டுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது.’’


?ஏற்கெனவே 50 ஆயிரம் ரூபாய் கவரேஜுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்திருக் கிறேன். இப்போது கூடுதல் கவரேஜ் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

& சுரேஷ், திருச்செந்தூர்.

ராமகிருஷ்ணன் வி. நாயக், இயக்குநர், தக்‌ஷின் கேப்பிட்டல்.

“உங்களின் ஹெல்த் கவரேஜை இரண்டு வகையில் அதிகரித்துக் கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள பாலிசியைப் புதுப்பிக்கும் போது கூடுதல் கவரேஜ் கேட்டுப் பெறலாம்.

அடுத்தது, ஏற்கெனவே வைத்துள்ள பாலிசியை அடிப்படையாக வைத்து டாப்-அப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பாலிசியில் உள்ள கவரேஜ் தொகை முழுவதையும் பயன்படுத்திய பிறகுதான் டாப்-அப் பாலிசியில் க்ளைம் செய்ய முடியும்.”

?ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ஸ்மார்ட் கிட் யூனிட் லிங்க்டு (ரெகுலர் பிளான்) திட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் மாதம் 1,500 ரூபாய் பிரீமியம் செலுத்தி வருகிறேன். 2 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட இந்த பாலிசி 2021-ல் முதிர்வடைகிறது. மேலும், ஹெச்டிஎஃப்சி எஸ்எல்ஐ யூனிட் லிங்க்டு யங் ஸ்டார் திட்டத்தில் மாதம் 1,500 ரூபாய் பிரீமியம் செலுத்தி வருகிறேன். இதில் 3.6 லட்சம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.


2026-ம் ஆண்டு பாலிசி முதிர்வடைகிறது. இவற்றைத்  தொடரலாமா?

@& அன்பு,

ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஸ்மார்ட் கிட் பாரம்பரிய பாலிசியாகும். இந்த பாலிசிக்கு ஏற்கெனவே நீங்கள் எட்டு வருடம் பிரீமியம் செலுத்தியுள்ளீர்கள். எனவே, இந்த பாலிசியைத் தொடர்வது நல்லது. பணம் தேவைப்பட்டால் பாலிசியின் சரண்டர் மதிப்பு என்ன என்பதைப் பார்த்து முடிவு எடுப்பது நல்லது.

ஹெச்டிஎஃப்சி யூனிட் லிங்க்டு யங் ஸ்டார் பிளான் என்பது ஒரு யூலிப் திட்டம். இவை பெரும்பாலும் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியது. சமீபத்தில் எடுத்திருந்த பாலிசி எனில், கட்டணங்கள் அதிகமாக இருக்கும். மேலும், குரோத் ஆப்ஷன், ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து பாலிசியைத் தொடர்வது நல்லது.”

 


?தற்போது எனக்கு 45 வயதாகிறது. ஹெச்டிஎஃப்சி டாப் 200 (குரோத்), ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ் (குரோத்), பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி குரோத் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஸ் டாப் 200 குரோத் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் மாதம் மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டை அடுத்த 15 வருடங் களுக்குத் தொடரலாம் என நினைக்கிறேன். மேலும், ஈக்விட்டி பங்குகளில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வைத்திருக்கிறேன். இந்த முதலீட்டை தொடரலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு முதலீட்டை மாற்றிக் கொள்ளலாமா? ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த முதலீடுகள் போதுமா? இப்போது மாதத்துக்கு எனக்கு முப்பது ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

@& சுந்தர், மும்பை.

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட், சென்னை.

“நீங்கள் முதலீடு செய்துவைத்திருக்கும் அனைத்து ஃபண்டுகளும் லார்ஜ் கேப்-ஆக இருக்கின்றன. அந்தவகையில் இந்த ஃபண்டுகளில் சிறிது மாற்றம் செய்வது நல்லது. அப்போதுதான் சந்தையின் ஏற்ற இறக்கத்திலும் வருமானத்தில் பாதிப்பு இருக்காது. 
அதாவது, ஹெச்டிஎஃப்சி டாப் 200 ஃபண்டுக்கு பதிலாக ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிலும், ஐசிஐசிஐ புரூடென்ஸ் 200 ஃபண்டுக்கு பதிலாக ஐசிஐசிஐ புரூ டிஸ்கவரி ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.

பங்குகளில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். பங்குச் சந்தை குறித்த அறிவு, சரியான நேரத்தில் முடிவு எடுக்கும் தன்மை ஆகியவை இருந்தால் உங்களின் முதலீட்டை லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் வகை பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. இல்லையெனில் உங்களின் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களுக்கு மாற்றிக்கொள்வது நல்லது.

இந்த முதலீட்டின் மூலமாக உங்களின் ஓய்வுக்கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள (அடுத்த 15 வருடங்களில்) சுமார் 1.25 கோடி ரூபாய் தேவை.

இப்போது மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருவதன் மூலமாக சுமார் 53 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும், பங்கு சந்தை முதலீடு மூலமாக சுமார் 55 லட்சம் ரூபாய் கிடைக்கக்கூடும். ஆக மொத்தமாக, 1.07 கோடி ரூபாய் உங்களின் 60 வயதில் கிடைக்கும்.

உங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள 17 லட்சம் ரூபாய் தேவை. இந்தத் தொகையைப் பெற, இன்னும் கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.”


?ரிலையன்ஸ் ஸ்மால் கேப்  ஃபண்டில் (குரோத்) முதலீடு செய்து வருகிறேன்.  இந்த ஃபண்ட் முதலீட்டை தொடரலாமா?

@& ராஜு கோபால்சாமி,

டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்

“ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் நல்ல அக்ரஸிவ் ஃபண்ட் வகைச் சார்ந்ததாகும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆனால், அதே நேரத்தில் அதிக ரிஸ்க் நிறைந்தது. நீங்கள் அக்ரஸிவ் முதலீட்டாளர், அதே நேரத்தில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர் எனில் இதில் முதலீட்டைத் தொடரலாம்.

இல்லையெனில், மிட் கேப் வகை ஃபண்டு களில் உங்களின் முதலீட்டை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.”

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ