Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் சதுரங்க வேட்டை!

மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள். 


இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக்  கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும்  ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது. 

இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம்.  இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது  போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.

இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும். 
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.  

மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன் 
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.

 

மோசடிக்காரர்கள் அனுப்பிய மின்னஞ்சல் புகைப்படம்:



நீரை.மகேந்திரன். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ