Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையில்... விறுவிறுப்புடன் அரங்கேறிய, மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்!


நாணயம் விகடன்,  பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தைப் பெருக்கும் முதலீடு - முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம் நெல்லையில் அக்டோபர் 26-ம் தேதி சிறப்பாக நடந்தேறியது.
 
நெல்லை, கோவில்பட்டி, ராஜபாளையம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த  நாணயம் விடன் வாசகர்கள் திரளாக  இந்த கூட்டத்தில் பங்கு கொண்டு சேமித்த பணத்தை எப்படி முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, அதன் மூலம் எப்படி லாபம் சம்பாதிப்பது என்பது குறித்து  தெளிவை பெற்றனர்.


 

பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி மற்றும் விநியோக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ், "நாம் உழைத்து சம்பாதித்த பணம் வங்கியிலோ, வீட்டின் லாக்கர் பெட்டியிலோ தூங்கிக் கொண்டிருக்காமல் அது நமக்கு நன்மையை தர வேண்டும். அப்பணத்தை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் நல்ல பயனை அடைய வேண்டும்" என்று முதலீட்டின் முக்கியத்துவத்தை சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயன், தங்கத்தின் மீதான முதலீடுகள் பெரிய அளவில் லாபத்தைக் கொடுப்பதில்லை. முதலீட்டாளர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமை. முதலீட்டு திட்டங்களில் இன்று பணத்தை முதலீடு செய்துவிட்டு இன்றே அதன் மூலம் வருமானமும் ஈட்ட முடியாது என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானத்தை நம்மால் ஈட்ட முடியும். முதலீடு சார்ந்த புத்தகங்களை தேர்வு செய்து படிப்பதன் மூலமும், இது போன்ற கருத்தரங்கங்களில் கலந்து கொள்வதன் மூலமும் தெளிவு பெற முடியும்" என்றார்.


பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் குருராஜ், மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அடிப்படை விஷயங்களைச் சொல்லி தனது உரையை ஆரம்பித்தார். "மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல வகைகள் இருக்கின்றன. உங்களின் தேவையை பொறுத்து மியூச்சுவல் திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு முன்பாக நிதி ஆலோசகர்களை கேட்டு தெரிந்து கொள்ளவது நல்லது. ஏனெனில் உங்களின் பணம், நீங்கள் செய்யும் முதலீடு நல்ல வருமானத்தை ஈட்டித்தர வேண்டும். முதலீடு செய்வது முக்கியமில்லை, சரியான நேரத்தில் சரியான முதலீட்டில் முதலீடு செய்கிறோமா என்பதுதான் முக்கியம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை முதலீட்டிற்காக ஒதுக்குங்கள். அந்த பணம் நிச்சயம் உங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கும்" என்று முடித்தார்.


இவரை தொடர்ந்து  சிறப்புரை ஆற்றினார், முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன். அவர் தனது பேச்சை சுவாரஸ்யமாக தொடங்கினார். "அரங்கத்தில் உள்ள அனைவரையும் பார்த்து திருமணமானவர்கள் ஏன் தங்களின் மனைவியையும் இந்தக் கருத்தரங்கத்திற்கு அழைத்து வரவில்லையா? என்று கேட்டார். கூட்டத்திலிருந்து ஒரு குரல், மனைவியை உடன் அழைத்து வந்தால் செலவாகுமே என்றார். அப்படியானால் செலவு செய்ய அவர்களுக்கு கற்றுத்தரும் நீங்கள் ஏன் முதலீடு செய்ய கற்றுத் தரக் கூடாது. அவர்களையும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு அழைத்து வந்து தெளிவு பெறச் செய்வது நல்லது என்றார்.
 மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு பேசிய இவர், தங்கத்தின் மீதான முதலீட்டு வளர்ச்சி, கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த லாபத்தையே  கொடுத்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு விளக்கினார். பங்குச் சந்தை குறித்த வளர்ச்சி குறித்தும், அதில் உள்ள முதலீட்டு நெழிவு சுழிவுகள் குறித்தும் வாசகர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்தும், அதன் வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கியவர், மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர்களின் அனுபவம், அந்த ஃபண்டு கொடுக்கும் வருமானம் என அனைத்தையும் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த ஃபண்ட் மூலம் லாபம் பார்க்க முடியும்" என்று முடித்தார்.
கருத்தரங்கு முடிவில், வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலீட்டு ஆலோசகர்கள் நான்கு பேரும் தெளிவான விளக்கங்களை வழங்கினர்.

-ஆ.நல்லசிவன் (மாணவ பத்திரிக்கையாளர்)
படங்கள்: எல்.ராஜேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ