Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் அதிவேக ரயில் சேவை துவக்கம்!

இந்தியாவின் முதல் ஹை ஸ்பீடு ரயில் நவம்பர் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டெல்லியிலிருந்து ஆக்ரா வரை இயக்கப்பட உள்ள இந்த ரயில் மணிக்கு 160கிமீ வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பதினான்கு பெட்டிகளோடு இந்த ரயில் இயக்கப்படும் என தெரிகிறது. கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டிகள் பல பாதுகாப்பு அம்சங்களோடும், வசதிகளோடும் இருக்கும். 
 
முக்கியமாக சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களை விடவும் மேம்பட்ட பயண அனுபவத்தை இந்த ரயில்கள் கொண்டிருக்கும் என ஆர்சிஎஃப் பொது மேலாளர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒவ்வொரு பெட்டியும் சுமார் ரூ 2.25 கோடி முதல் ரூ. 2.50 கோடி வரை செலவு செய்து தயாரிக்கப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவித்தார். 
 
மோடி பதவியேற்றதும் தாக்கல் செய்த முதல் ரயில்வே பட்ஜெட்டில் விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விரைவு ரயில்களை இயக்க சாத்தியம் உள்ள ரயில் தடங்களை கண்டறிய ரயில்வே அமைச்சகம் கண்டறிந்து முதல் கட்டமான டெல்லி முதல் ஆக்ரா வரையில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மணிக்கு 200 கிமீ என வேகம் அதிகரிக்கப்படும் எனவும், இந்த விரைவு ரயில் மூலம் 200 கிலோ மீட்டர் தூரத்தை 90 நிமிடங்களில் சென்றடையலாம் எனவும் தெரிவித்துள்ளார். 
 
இந்த ரயிலில் பிரேக்கிங் சிஸ்டங்களில் புதுமை, சத்தம் குறைவு, தானியங்கி கதவுகள், ஒவ்வொரு இருக்கைக்கு பின்புறமும் தொலைகாட்சி திரை, வொய் பை வசதி என நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் எனவும் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து மணிக்கு 200 கிமீ வேகம் கொண்ட அதிவேக ரயில்கள் இயக்க திட்டம் உள்ளதாகவும் தெரிகிறது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ