Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜன் தன் யோஜனா : இரண்டு மாதங்களில் 7 கோடி வங்கிக் கணக்கு!

 
பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம்  ரூ.5,000 கோடி டெபாசிட் திரட்டப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் வங்கிக்கணக்கு இல்லாத மக்களுக்கு விபத்துக் காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கக்கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்படும் என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதாவது வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு என்பதுதான் ஜன் தன் யோஜனா திட்டத்தின் இலக்கு. இந்த அறிவிப்பின்படி ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  தொடங்கிய இரண்டே மாதங்களில்  7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 
 
 
இந்த வங்கிக்கணக்கு மூலம் சுமார் ரூ. 5,300 கோடி திரட்டப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் 4 கோடி பேருக்கு ரூபே கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நிதி அமைச்சக அதிகாரிகள், ஆகஸ்ட் 28 அன்று மோடி இந்த திட்டத்தை துவக்கிவைத்தபோது , 2015 ஜனவரி 26 ஆம் தேதிக்குள் 7.5 கோடி கணக்குகள் என்கிற இலக்கு வைத்தது  மத்திய அரசு.  ஆனால் வங்கித்துறையின் தீவிர ஒத்துழைப்பு மூலம் குறுகிய காலத்திற்குள் இந்த இலக்கு எட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
மத்திய மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களின் பயன்கள், மானியங்கள் போன்றவை இந்த கணக்கின் மூலம் பயனாளிகளுக்கு கொண்டு சேரும்.   இந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு  ஒரு லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஓய்வூதிய பலன்கள், சிறு வியாபாரிகளுக்கான கடனுதவி கிடைக்கும்.  இந்த வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை சராசரியாக 500 என்பதாக இருக்கிறது.  தவிர டெபாசிட்டுகளுக்கான சராசரி  ரூ. 250 முதல் ரூ. 500 என்பதாக உள்ளது. இதை ரூ.700 வரை உயர்த்துவதுதான் தற்போதைய இலக்கு என்கிறார்கள் வங்கித்துறை அதிகாரிகள். 
 

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகளும்  இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ