Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் முதலீடு செய்யலாமா?

 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் முதலீடு செய்யலாமா?

 


குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகையை எந்த வகையான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்,முதலீடு செய்துள்ள பங்குகளை ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தெல்லாம் கவனிப்பதற்கு ஃபண்ட் மேனேஜர் தனியாக இருப்பார். இதனால் முதலீட்டாளர்கள் முதலீடு குறித்து பெரிதாக கவலை இல்லாமல் இருக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
 
 
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதனுடைய வேறு ஃபண்ட் அல்லது வேறு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் வசதியை வைத்துள்ளது. இது ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் யாருக்கு ஏற்றது, இதன் வருமானம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வாளர் சத்தியமூர்த்தி விளக்குகிறார்.
 
ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?
 
ஃபண்ட் ஆஃப் பண்ட்ஸ் என்பது முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்தை ஏற்கெனவே உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஆகும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் வழக்கமாக முதலீடு செய்யும் பணத்தை பங்குகள் மற்றும் பாண்டுகள் அல்லது இதர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வேறு திட்டங்களிலே முதலீடு செய்வார்கள். இன்னும் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் அல்லது இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யும். இப்படி செய்யும்போது ரிஸ்க்கை குறைக்க முடியும். மேலும், பன்முகத்தன்மை அதிகரிக்கும்.

ஏன் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்?
 
முதலீட்டாளர்களின் ரிஸ்க்கை குறைப்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை வைத்துள்ளன. மேலும், கலவையான முதலீடு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸை நிர்வகிப்பதற்கு தனியாக ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பார்கள். இந்த ஃபண்டுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
 
யாருக்கு ஏற்றது?
 
வரி வரம்புக்கு உட்படாதவர்கள், குறைவான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டம் ஏற்றதாக இருக்கும். அதிக வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இந்த ஃபண்டுகள் உகந்ததாக இருக்காது.
 
வரி:
 
ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும்போது முதலீடு செய்யும் திட்டம் எந்தவகையான திட்டமாக இருந்தாலும் வரி செலுத்தும்போது அது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.குறுகிய காலத்துக்குள் (36 மாதங்கள்) வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியிருக்கும். அதுவே, நீண்ட கால முதலீட்டுக்கு பணவிகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும்.
 
வருமானம்:
நேரடியாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிட குறைவான வருமானம்தான் இதில் கிடைக்கும். அதிக வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது. அசெட் அலோகேஷனுக்காக இதில் முதலீடு செய்யலாம். ரிஸ் குறைவு.
 
- இரா.ரூபாவதி.
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ