Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வு தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

 லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வு தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

 
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பல காரணங்களினால் எடுத்து வைத்திருப்போம். அதாவது முதலீட்டு நோக்கில் பாலிசிகளை வாங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஏஎதாவது ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வைப்பார்கள்.
 
எண்டோமென்ட் பாலிசிகள், முழு ஆயுள் காப்பீடு, யூலிப் பாலிசிகள் ஆகியவற்றுக்கு செலுத்தும்  பிரீமியம் தொகைக்கு, வருமான வரி பிரிவு 80சியின் கீழ் விலக்கு பெற முடியும். ஆனால் இந்த பாலிசிகள் முதிர்வடைந்து அதன் மூலமாக  கிடைக்கும் தொகைக்கு வரி விலக்கு பெற முடியும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அனைத்து பாலிசிகளின் முதிர்வு தொகைக்கும் வரி சலுகை கிடைத்து விடாது. அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
 
இது குறித்து சென்னையை சேர்ந்த ஆடிட்டர் சத்திய நாரயணன் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
 
வரி விலக்கு!
எண்டோமென்ட் பிளான், பரம்பரிய பாலிசிகள், யூலிப் பாலிசிகள் ஆகியவற்றில் கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வருமான வரி பிரிவு 10(10டி)யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.  
 
சரண்டர் செய்யும் பாலிசியின் மூலமாக கிடைக்கும் தொகைக்கு இந்தப் பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
 
எதற்கு எல்லாம் வரிச் சலுகை கிடையாது!
 
இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமாக கிடைக்கும் அனைத்து தொகைக்கும் வரி விலக்கு பெற முடியாது. அதாவது பென்ஷன் திட்டங்களின் மூலமாக கிடைக்கும் பென்ஷன், குறிப்பிட்ட சில பாலிசிகளில் வருடத்துக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகை, இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமாக உடல் ஊனமுற்றவர்களுக்கு கிடைக்கும் தொகை, நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எடுத்துக் கொடுக்கும் குரூப் லைஃப் பாலிசிகள் மூலமாக கிடைக்கும் முதிர்வு தொகை  ஆகியவற்றுக்கு வரி சலுகை பெற முடியாது.

 
 
மேலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல்,  2012 ஏப்ரல் 31ம் தேதிக்கு முன் எடுத்திருக்கும் பாலிசிகளின் பிரீமியம் ஆனது  கவரேஜ் தொகையில் 20%க்கு அதிகமாக இருந்தால் அந்த வகையான
 பாலிசிகளில் கிடைக்கும் முதிர்வு தொகை வரி சலுகை பெற முடியாது. இதை 10(10டி) பிரிவு 'சி'யின்  கீழ் வரும்.  இதுவே 2012 ஏப்ரல் 1 தேதிக்கு முன் எடுத்த பாலிசியில் பிரீமியம் ஆனது கவரேஜ் தொகையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் பாலிசிகளின் மூலமாக கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி சலுகை பெற முடியாது. இது 10(10டி) பிரிவு 'பி' யின் கீழ் வரும்.
 
உடல் ஊனமுற்றோர்  எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 80டிடிபி வரி சலுகை பெற முடியும். ஆனால் அவர்கள் எடுத்துள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரீமியமானது கவரேஜ் தொகையில் 15 சதவிகிதத்துக்கு அதிகமாக இருந்தால் வரி சலுகை பெற முடியாது.
 
எவ்வளவு தொகைக்கு?
 
வருமான வரி பிரிவு 10(10டி) கீழ் இன்ஷூரஸ் பாலிசி மூலமாக கிடைக்கும் தொகை  முழுவதற்கும் வரி விலக்கு பெற முடியும். இதற்கு எந்த விதமான வரையறையும் கிடையாது.
 
இரா.ரூபாவதி.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ