Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலை பளுவைக் குறைக்க 10 வழிகள்!

வேலை பளுவைக் குறைக்க 10 வழிகள்!

மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் சரி, பிசினஸ் செய்தாலும் சரி.. வேலை பளு என்பது அனைவருக்கும் இருக்கும். இதைக் குறைப்பதற்கான வழி என்ன என்பது தெரியாமல் பலரும் தவித்துக் கொண்டிருப்போம். அதாவது, இந்த வேலை முடித்துவிட்டால் பிரச்னை தீரும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், புதிதாக ஏதாவது வேலை வந்துகொண்டே இருக்கும். இதனால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாமல் நிம்மதி இல்லாமல் அலைந்துகொண்டு இருப்போம். இந்த வேலை பளுவை குறைத்து, நிம்மதியாக இருப்பதற்கான வழிகளைச் சொல்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் பாலமுருகன்.


" வேலை பளுவை குறைப்பது மிகவும் எளிது. சின்னச் சின்ன காரியங்களைச் சரியாகச் செய்தாலே இதை எளிதாகக் குறைத்துவிட முடியும்.

1. வேலை பளு என்பது எல்லா அலுவலகங்களிலும் இருக்கும். இதற்குத் தீர்வுகாண வேண்டும் எனில், உங்களை நீங்கள் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் சோர்ந்துவிடாமல் வேலையைச் செய்வது நல்லது.


2. சின்ன வேலை, பெரிய வேலை என்றில்லாமல் எல்லா வேலையையும் திட்டமிட்டுச் செய்வது அவசியம். இந்த வேலைக்கு அடுத்து எந்த வேலையைச் செய்ய வேண்டும். அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்வது அவசியம்.


3. எல்லைகளை நிர்ணயித்துக் கொண்டு வேலையைச் செய்ய வேண்டும். அதாவது, நம்மால் எந்த வேலையைச் செய்ய முடியும், அதை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க முடியும் என்பதற்காக ஓர் எல்லை வரையறை செய்வது முக்கியம். எல்லா வேலைகளையும் என்னால் செய்ய முடியும் என இழுத்து போட்டுக்கொண்டு செய்யக் கூடாது.


4. உயர் அதிகாரிகளிடம் தைரியமாகப் பேசுவது முக்கியம். அதாவது, உங்களிடம் வழங்கப்படும் வேலை அதற்கான நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வேலையை முடிக்க முடியுமா, இல்லையா என்பதை அதிகாரியிடம் தெரிவிக்கலாம். இதை வேலையைக் கொடுத்த உடனே தெரிவிக்கக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில்தெரிவிப்பது அவசியம்.


5. அலுவலக வேலைகள் என்பது எப்போதுமே குழுவாகச் செய்வதாகத்தான் இருக்க வேண்டும். என்னால் முடியும், என்னால் முடியும் என்று தனியாக வேலைகளைச் செய்துமுடிக்க நினைக்கக் கூடாது. வேலையை உடன் வேலை பார்ப்பவர்களுடன் பகிர்ந்து செய்வது அவசியம். மேலும், சில வேலைகள் உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான உதவியை உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


6. சக ஊழியர்களை ஊக்குவிப்பது முக்கியம். அதாவது, உடன் வேலை பார்ப்பவர்கள்

 சின்ன ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்தால்கூட, அவரை ஊக்கும்விக்கும் வகையில் பேசுவது நல்ல பழக்கம். இப்படிச் செய்யும்போது அவருடைய வேலை பளுவை மறந்து சந்தோஷப்படுவார். மேலும், உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் நேரத்தில் அவராக வந்து உதவி செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.


7. எந்த வேலையையும் கடமைக்காகச் செய்யக்கூடாது. எல்லா வேலைகளையும் பிடித்த வேலையாக மாற்றிக்கொண்டு அதைச் செய்யப் பழகுவது நல்லது. அதாவது, எனக்கு மட்டும் ஒரே வேலையைக் கொடுக்கிறார்கள். இந்த வேலையை நான் மட்டும்தான் செய்ய வேண்டுமா என நினைப்பதை விட்டுவிட்டு இந்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை, இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைத்து செய்தாலே பாதிச் சுமை குறைந்துவிடும்.


8. காலவரையறை வைத்து வேலையை முடிக்க வேண்டும். அதாவது, அலுவலக வேலைகளை அலுவலகத்திலேயே முடிப்பது நல்லது. எந்த வேலையையும் வீட்டுக்குப் போய் முடித்துவிடலாம் என நினைக்கக் கூடாது. ஏனெனில், சில வேலைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது அதைச் செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் மன அழுத்தம்தான் உருவாகும்.


9.
வேலையில் தவறு ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அந்தத் தவறை ஏற்று, திருத்திக்கொண்டு இனிவரும் காலத்தில் அந்தத் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


10. வேலை நேரத்தில் எந்தவிதமான கவலையும் இல்லாமல் இருப்பது நல்லது. நமக்கு இருக்கும் கவலையையெல்லாம் நினைத்துக் கொண்டு வேலை பார்க்கும்போது குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாது. இதனால் தேவையில்லாதப் பிரச்னைகள் உருவாகி கவலை அதிகமாகும். எனவே வேலை நேரத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் வேலையில் மட்டும் முழுக் கவனமும் செலுத்தி வேலையைச் செய்வது நல்லது.


- இரா. ரூபாவதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close