Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை ஏஐ என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஏற்றுமதி விருது...!

சென்னை ஏஐ என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஏற்றுமதி விருது...!

சிறந்த ஏற்றுமதி செயல்பாட்டுக்கான மத்திய அரசின் நிர்யாத் ஸ்ரீ விருது பெற்றிருக்கிறார், சென்னை ஏஐ என்டர்பிரைசஸ் ( A.I. Enterprises Pvt. Ltd.) நிறுவனத்தின் தலைவர் அப்துல் அஜீஸ். இவரின் நிறுவனம், ரெடிமேட் ஆடைத் தொழிலில் இருக்கிறது. இந்த நிறுவனம் இந்த விருதை பெறுவது இது நான்காவது முறையாகும். அண்மையில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் இந்த விருதை அப்துல் அஜீஸ்-க்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். 
 
“கடந்த சுமார் 35 ஆண்டுகளாக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து  ஏற்றுமதி செய்து வருகிறேன். சென்னையில் அம்பத்தூர், வானகரம், ஆலப்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலையும், ஈரோடு பெருந்துறையில் சாயமிடும் தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன. எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், ஏற்றுமதியில் இருந்த தொழில் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதும், தரமான பொருட்களை உற்பத்தி செய்ததும்தான்.'' என்ற அப்துல் அஜீஸ் சற்று நிறுத்தி ஆயத்த ஆடை தொழிலில் வெற்றி பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கி சொன்னார்.
''பொதுவாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித் தொழிலில் சவால்கள் அதிகம் இருக்கும். அதைச் சமாளிக்கும் திறனை ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானதாக இருந்தால், அதற்கான வரவேற்பு எப்போதும் இருக்கும். ஆயத்த ஆடைகளைப் பொறுத்தவரை, ஏற்றுமதிக்குத் தேர்வு செய்திருக்கும் நாடுகளில் எந்த மாதிரியான ஆடைகளை மக்கள் விரும்புகிறார்கள், அங்கு பிரபலமாகிவரும் புதிய டிசைன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப ஆடைகளைத் தயாரிக்க வேண்டும். எனவே, உலக நாடுகளின் சந்தைகளை எப்போதும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதைத் தெரிந்துகொண்டு, உடனே அந்த வகை ஆடைகளுக்கான ஆர்டர்களைப் பெற்று, அதை அங்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்றுமதி தொழிலில் இறங்குபவர்கள் சொன்ன நேரத்துக்குள் டெலிவரி செய்யும்படி செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும். இதில் ஒருமுறை தவறு செய்துவிட்டால், நம் மீதான மதிப்பு குறைவதுடன், அடுத்தடுத்த ஆர்டர்களையும் இழக்க நேரலாம்.
ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்பவர்கள் தேசிய தொழிலாளர்கள் நலச் சட்ட விதிமுறைகளைக் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும். வெளிநாட்டவர்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு செயல்பாடுகளை, அதற்கான
                                                                                                                                                              அப்துல் அஜீஸ்
செலவினங்களைக் கவனித்து, அதன்பிறகே அதற்கான ஆர்டர்களை வழங்குவார்கள். ஆடைகள் தயாரிக்கும் இடம் சுகாதாரமாக  இல்லாவிட்டாலோ, தொழிலாளர்கள் நலனில் குறைபாடுகள் காணப்பட்டாலோ ஆர்டர்கள் கிடைப்பதில் சிரமம் உண்டாகும்” என்றார் அப்துல் அஜீஸ்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ