Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்தும் செய்யும் பத்தாத பணம் - 2

அன்று ஓணம் பண்டிகை என்பதால் சாமியின் ஹைடெக் குடிசைக்குள் நுழைந்தவுடன் அடைப்பிரதமன் பாயசம் கொடுத்து உபசரித்தார். தடபுடல் கவனிப்புகள் முடிந்ததும் வந்த வேலையை ஆரம்பித்தோம்...

''சாமி, பணத்தைப் பத்தி விலாவாரியா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி யார் யாரால பணம் சம்பாதிக்க முடியுமுன்னு சொல்ல முடியுமா'' என்றேன்.

''யார் யாரால முடியாதுன்னு வேணுமின்னா சுலபமா சொல்லலாம்!'' -வழக்கம் போல தனது ஸ்டைலில் பதிலைச் சொன்னார் சாமி...

''சரி, சொல்லுங்க சாமி...'' என்றேன்.

''முக்கியமா ரெண்டு பேரால முடியாது. 'பணம் சம்பாதிக்கிறதைப் பத்தியோ சேர்க்கிறதைப் பத்தியோ யோசிக்கவே எனக்கு நேரமில்லை'-னு சொல்றவனாலயும், 'எனக்கு பணம் சம்பாதிச்சவன் எல்லாரைப் பத்தியும் நல்லாத் தெரியும். அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்'னு நினைக்கிறவனாலயும் பணத்தை சம்பாதிக்கவே முடியாது'' என்றார்.

''அதாவது என்னாலயும், கன்னாலயும் முடியாதுங்கிறீங்க!'' என்றேன்.

''ரொம்ப சரியாச் சொன்னே'' என்று சிரித்தார் சாமி.

''பணம்ங்கிறது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். முறையா கட்டுப்படுத்த தெரிஞ்சவனாலதான் அதை வெற்றி கொள்ள முடியும்!''

''புரியலியே சாமி...'' என்றான் கன்.

''உனக்கு என்னதான் புரியும்'' என்று வழக்கம் போல வசவு வைத்துவிட்டு, ''சரி கேட்டுக்கோ... ரிட்டையர் ஆன ஒரு தாத்தா தன் பேரனோட பேசிக்கிட்டிருக்கார்... அப்போ பேச்சு அவரோட இளமை நாட்களைப் பற்றி திரும்புது... அப்போ ஒரு விஷயம் சொல்றார்... 'சின்ன வயசுல என் மனசுக்குள்ள ரெண்டு விதமான ஓநாய்கள் எப்பவுமே சண்டை போட்டுகிட்டு இருக்கும்; ஒண்ணு அமைதி, அன்பு மற்றும் இரக்க குணம் கொண்டது. இன்னொண்ணு பயம், பேராசை மற்றும் வன்மம் உள்ளது' என்றார்.

'எது ஜெயிச்சுது தாத்தா' என்றான் பேரன்.

தன் குணத்தை வெளிப்படுத்த விரும்பாத தாத்தா, 'எதுக்கு நான் சாப்பாடு போட்டு வளர்த்தேனோ அது' என்று சாதுர்யமா சொல்லித் தப்பிச்சார். இது ஒரு அமெரிக்கப் பழங்கதை. அதுதான் நீ கேட்டதுக்கு பதில். மறுபடியும் புரியலியேன்னு சொல்லாதே. நானே விளக்கமா சொல்றேன்'' என்று கிண்டலடித்தார் சாமி.

''ஒருத்தன் பணம் சம்பாதிக்கிறானா இல்லையாங் கிறது அவன்கிட்ட இருக்கிற ரெண்டு விஷயத்தின் அளவான கலவையாலதான் நிர்ணயிக்கப்படுது. பெரும்பயம்-டூ-பேராசை அப்படிங்கிற ஒரு லைனில அவன் பேராசைக்குப் பக்கத்தில குடியிருந்தான்னா அவனுக்கு பயமே இருக்காது. பெரும்பயத்துக்கு பக்கத்தில குடியிருந்தான்னா அவனால ஒரு துளிகூட ஆசைப்படவே முடியாது!

பயத்தின் எல்லையில இருக்கின்றவனால எந்தத் தொழிலும் செய்ய முடியாது. வேலைக்குத்தான் போய் சம்பாதிக்க வேண்டியிருக்கும். வேணுமின்னா சம்பளத்துக்குத் ஏத்தபடி சேமிச்சு அவனைச் சுத்தியிருக்கிற குரூப்பில பெரிய பிஸ்த்தாவா தன்னைக் காண்பிச்சுக்கலாம், அவ்வளவுதான்!''

''அப்ப பேராசைங்கிறது சாமி?''

''அதை விளக்கி மாளாது டோய்! ரொம்ப சீக்கிரமா, ரொம்ப அதிகமா சம்பாதிக்க நினைக்கிறது ஒருவகை பேராசை... இதனால அதிக ரிஸ்க் எடுத்து மாட்டிக்கிடறாங்க. அதே மாதிரி நல்லா போய்க்கிட்டி ருக்கிற தொழிலை தொடர்ந்து நடத்துறதை விட்டுட்டு, இன்னும் அதிகமா முதலீடு செஞ்சிருந்தா எப்பவோ பெரிய ஆளா ஆயிருக்கலாமேன்னு நினைச்சு குமைஞ்சு போய் தொழிலைக் கவனிக்காம போறது இன்னொரு வகை. இப்போ சுமாரா போய்க்கிட்டிருந்தாலும் எதிர்காலத்துல சூப்பர் பலனைத் தரக்கூடிய ஒரு தொழிலை தன்னோட பேராசைக்கு இப்போதைக்கு ஒத்துவராததால வித்துட்டு வேற தொழிலுக்குப் போறதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம்!''

''இந்த குணமெல்லாம் பிறவிக்குணமால்ல தெரியுது. அப்ப பிறப்பிலேயே பிஸினஸ் கிளாஸ், எக்கானமி கிளாஸ்னு ரெண்டு டைப்பாத்தான் ஆளுங்க உருவா கிறாங்களா?'' என்றான் செல். இந்த கமெண்ட்டைக் கண்டுகொள்ளாத சாமி மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

''ஆசை, பயம் ரெண்டும் வெற்றி-தோல்விங்கிற உரத்தினால மனுசன் மனசில வேகமா வளர்ற பயிருங்க. பண ரீதியான வெற்றி அதிகமாவும் வேகமாவும் வரவர ஆசை பயங்கரமா வளர்ச்சியடையும். அதே மாதிரி பண ரீதியான தோல்வி அதிகமாகவும் வேகமாகவும் வரவர பயம் பயங்கர வளர்ச்சியடையும். இந்த ரெண்டையும் அதிகமா வளர விடாம நிதானமா போறவன்தான் நிலைச்சு நிக்கறான். இப்ப புரிஞ்சுதா'' என்றார்.

''வெற்றியோ தோல்வியோ எப்பவும் நிதானம் தவறாம இருக்கணுமின்னு தெளிவாப் புரிஞ்சு போச்சு சாமி'' என்றோம் கோரஸாக. ''ஆனாலும் ஒரு உதாரணம் சொன்னீங்கன்னா இன்னும் சுலபமா புரிஞ்சுக்கலாமுன்னு பாக்கோம்'' என்றோம்.

''உதாரணத்துக்கு இரண்டு ஸ்டாக் மார்க்கெட் புரொஃபஷனல் பத்தி சொல்றேன். பாலா, பத்மா கதையைச் சொன்னா சுலபமா புரிஞ்சுக்கிடுவீங்க'' என்று ஆரம்பித்தார்.

''பாலா (பாலகிருஷ்ணன்) ஒரு அமெரிக்கன் எம்.பி.ஏ., பத்மா (பத்மநாபன்) ஒரு எம்.காம். கிராஜூவேட். பாலாவைவிட பத்மா அஞ்சு வயசு சின்னவன். ரெண்டு பேரும் ஒரு மியூச்சுவல் பண்டுல வேலை பாத்துட்டு இருந்தாங்க. பாலா பண்ட் மேனேஜர். பத்மா அலுவலக அட்மின் மேனேஜர். ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸ். திடீருன்னு பாலா வேலையை விட்டுட்டு ஷேர் டிரேடிங் பண்ணப் போறேன்னு போனான். அப்ப ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்ல ஃப்ளோர் டிரேடிங்தான் (ஆள் கூடி வாங்கி விற்கும் வியாபார முறை) இருந்துச்சு. சந்தைக்குள்ளே இருக்கிற நடைமுறையைப் பழகுறதுக்கு ஒரு வருஷம் ஆச்சு. அவன் புரோக்கர் பொறுமையா அவனுக்கு அத்தனையும் சொல்லிக் கொடுத்தான். பாலா பெரிய அளவு ரிஸ்க் எடுக்க மாட்டான்.

அப்படி இப்படின்னு பத்து வருஷம் ஓடிப் போச்சு. கொஞ்சம் கொஞ்சமா நல்லா பணம் பண்ணிட்டான். பணம் சம்பாதிக்க ஸ்டாக் மார்க்கெட், சேமிப்புக்கு ரியல் எஸ்டேட், பேங்க் அப்படிங்கிறது அவனோட கன்சர்வேட்டிவ் பாலிசி.

யாராவது, 'எப்படி பாலா வெற்றிகரமா டிரேட் பண்றீங்க' என்றால் 'என் நஷ்டத்தை சின்னதா இருக்கறப்பவே கட் பண்ணிக் கொள்ள தெரிஞ்ச தால்தான்' என்று பெருமைப்படுவான். கட்டுப்பாடான சம்பாத்தியம். ஹாபிக்கு கர்நாடக மியூசிக், ஆள் பழக்க வழக்கத்துக்கு இரண்டு மூன்று வெல்பேர் அசோசியேஷன்னு திருப்தியா வாழ்ந்திட்டுருந்தான்.

இதைப் பார்த்து ஆசைப்பட்ட பத்மாவும் பாலா வேலையை விட்ட மூணு வருஷத்துல தன்னோட வேலையை விட்டுட்டு மார்க்கெட்டுக்குள்ள வந்து ஹைரிஸ்க் டிரேடிங் பண்ணி பயங்கரமா சம்பாதிச் சுட்டான்.

பாலா வேலையை விடும்போது எதிர்பார்த்து வந்த சம்பாத்தியத்தின் அளவைவிட அதிகமா சம்பாதிச்சுட்டு இருந்தாலும் அப்பப்ப பத்மாவை பத்தின பொறாமை வந்துவந்து போகும். நாம ஃபண்ட் மேனேஜரா இருந்து ரிசைன் பண்ணிட்டு வந்து சம்பாதிச்சதைவிட ஆபீஸ் மேனேஜரா இருந்துட்டு வந்தவன் பல மடங்கு சம்பாதிச்சுட்டானேன்னு!

இதோட மொத்த எஃபெக்ட், பாலா தன் கன்ஸர்வேட்டிவ் ஸ்டைலை மாற்றிக்கிட்டான்! அதுவும் எப்போ? 2007-ல சந்தை தாறுமாறா மேலே போனப்ப! பேங்க் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடுன்னு எல்லாத்தையும் காசா மாத்தி மார்க்கெட்டுல போட்டு பத்மாவோட ஹைரிஸ்க் ஸ்டைலுக்கு போனான். 2008 ஜனவரில சந்தை சரியவும் ரெண்டு பேருமே அட்ரஸ் இல்லாம ஆயிட்டாங்க! இதுல இருந்து என்ன தெரியுது? பணம் அப்படிங்கிறது மனநிலை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஒருத்தனால என்ன முடியுமோ அதை மட்டுமே தெளிவா செய்யணும்!''

சாமியின் மொபைல் ஒரு முறை சிணுங்கவே சட்டென எழுந்து, ''நேரம் போனதே தெரியல்லே பாரு. ஒரு மீட்டிங்கிற்கு போகணும். அடுத்த வாரம் பார்ப்போம்'' என்று முடித்தார் சாமி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ