Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை உயர்வு தொடருமா?


சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்ததால், உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டன. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ததே தங்கம் விலை உயர்ந்ததற்குக் காரணம்.

இந்தியாவிலும் கடந்த ஒரு வாரமாக பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுவருகின்றன. இதன் விளைவாகவும் இந்தியாவில் தங்கத்தின் முதலீடு சற்று அதிகமாகி உள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால்தான் இந்தியாவில் தங்கத்தின் விலை அபாரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (17.12.2014) ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை (8 கிராம், 22 காரட்) ரூ.20,424-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,553-க்கும் வர்த்தகமாகி வருகிறது.

ஆனால், கடந்த இரு தினங்களாக உலக அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியாண்டின் (ஜனவரி - டிசம்பர்) இறுதியில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இப்போது பிராஃபிட் புக்கிங் செய்துவருகிறார்கள்.

மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை இன்று (17.12.2014) அறிவிக்க உள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கத்தின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 1,196 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

அதிக பிராஃபிட் புக்கிங்கினால் வெள்ளியின் விலையும் சரிய ஆரம்பித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 15.82 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இதுவே, இந்திய சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.36,405-ஆகவும், ஒரு கிராம்  வெள்ளியின் விலையானது ரூ.39க்கும் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ