Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் எளிதில் தொழில் துவங்கலாம்: மோடி

குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரில், வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் 7-வது மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த மாநாட்டில் குஜராத் மக்களின் ஒற்றுமை தான் 6 கோடி குஜராத் மக்களின் தொழில் ஆர்வத்தை பெருக்கி உள்ளது. 120 கோடி இந்தியர்களின் மன உறுதியை மேம்படுத்தி இருக்கிறது.

பிரதமர் பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தேன். எங்கும் நிலவுகிற ஒரே கவலை, உலகப் பொருளாதாரம் பற்றியதாகத்தான் இருக்கிறது. நாம் அனைவரும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், சீர்திருத்தப்படவும் வழிவகைகள் காண வேண்டும்.அதற்கு நாம் கடின உழைப்பை தர வேண்டும் என்று கூறினார்.

 
மேலும் மத்திய அளவிலும், மாநில அளவிலும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை கொண்டு வருவதற்காக அரசு பணியாற்றி வருகிறது. இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு நாங்கள் இந்தியாவில் தயாரிப்போம் என்ற மேக் இன் இந்தியா  திட்டத்தை கொண்டு வந்து தொழிலாளர்கள் சார்ந்த உற்பத்தி துறையை மேம்படுத்துகிறோம்.
 
இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதுதான் உங்களது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதற்காக நாங்கள் இங்கு இதற்கு முன்பு இருந்ததை விட தொழில் தொடங்குவதை மிகவும் எளிதானதாக ஆக்க விரும்புகிறோம். எதற்காக இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். இந்தியாவில் தொழில் துவங்க முக்கிய அம்சங்கள் மூன்று உள்ளன. ஜனநாயகம், மக்கள்சக்தி, தேவை இதை தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும், வேறு எந்த நாட்டிலும் நீங்கள் ஒரு சேரப் பார்க்க முடியாது. இந்தியாவில் குறைவான பணச்செலவில், தரமான மனித சக்தி கிடைக்கிறது.
 
வளர்ச்சி நடவடிக்கைகள் அனைத்தும் சாதாரண மக்களுக்கும், தொழில் துறைக்கும் பலன் தர வேண்டும். இந்தியா இன்றைக்கு வாய்ப்புகள் நிறைந்த நாடாக திகழ்கிறது. அதிவேக சாலைகள், ரயில் பாதைகளை உருவாக்குகிறோம். நகரங்களில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துகிறோம். நவீன நகரின் வசதிகள் அனைத்தையும், கிராமங்களுக்கும் கொண்டு செல்கிறோம்.
நாம் நாட்டின் முன்னேற்றத்துக்காக வளமான மற்றும் அமைதியான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
 
 
துவக்க நாளிலேயே கார்ப்பரேட்களும், எஸ்.எம்.இக்களும் 15000 ஒப்பந்தங்கள் மூலம்  10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளனர். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி முகேஷ் அம்பானி மட்டும் குஜராத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் கலந்து கொண்ட உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவிகிதம் என்ற அளவில் இருந்த வரும் இருக்கும் என்று கூறியுள்ளார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ