Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதார் வில்லன்கள்!

 

சினிமாவில் ஓர் உத்தியைக் கையாள்வதுண்டு. அதாவது, சமூக விரோத விஷயங்களை சில சமயங்களில் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டுவது, இல்லைன்னா வில்லன்களை உக்கிரமாகக் காட்டுவது; அப்போது, காட்சியில ஒருத்தர் கேட்பார், “இதையெல்லாம் தட்டிக்கேட்கிறதுக்கு ஆளே இல்லையா?” உடனே ஹீரோ அறிமுகமாவார்; வில்லன்களை ஜெயிப்பார்; மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்.
 
இப்போ நிஜ வாழ்க்கையிலேயே அப்படிதாங்க இருக்கு எனக்கு. யாராவது ஒரு ஹீரோ எங்கிருந்தாவது வந்து  இங்க நடக்கிற அநியாயங்களைத் தட்டிக்கேட்க மாட்டாறான்னு தோணுது. என்னுடைய ஆதார் அட்டை வாங்குகிற அனுபவம்தான் என்னை இப்படி சிந்திக்க வைத்தது.

125 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்குறதுங்கறது இமாலய விஷயம்னு நிச்சயம் எனக்கு தெரியும். பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் கடமையைச் செய்து முடிக்க வேண்டிய விஷயம் அது. ஆனா, சில பேர் பொறுப்பில்லாம கடமையைத் தட்டிக்கழிக்கும்போதுதான் மக்கள் வெறுப்படையறாங்க.

இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆதார் அட்டைக்கு குடும்ப உறுப்பினர்களோட பெயரெல்லாம்
 
 கொடுத்துட்டு காத்திருந்தோம். ஒரு வழியா, கைரேகை, போட்டோ, கருவிழி பதிவுன்னு சான்று எடுக்கும் பணி துவங்கிடுச்சுன்னு எங்க ஏரியாவுல விஷயம் பரவிச்சு. குடும்ப சகிதமா மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு (போட்டோவுல முகம் நல்லா வரணும்ல) புறப்பட்டோம். “நீ மட்டும் ஒரே தடவைல போட்டோவை எடுத்துக்கிட்டு வந்திடுடா பார்ப்போம்”னு யாராவது நிச்சயம் சவால் விட்டிருக்கணும், இல்லைன்னா அன்னைக்கு அந்தமாதிரி நடந்திருக்காது.

போட்டோ எடுக்குற அரசு பள்ளியில கும்பல் கும்பலா மக்கள் நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க. பக்கத்துலப் போய் விசாரிச்சதுல வார்டு வாரியாதான் போட்டோ எடுக்குறாங்களாம், அதுக்கு முன்னாடி டோக்கன் வாங்கணும்னு தெரிஞ்சுது.
 
சரி, டோக்கன் எங்க கிடைக்கும்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள “அந்த ஆள்தான் இன்னும் வரலையே”ன்னு கும்பல்ல ஒருத்தர் கோவிந்தா போட்டார். “அப்போ போட்டோ...”ன்னு, அடுத்த வார்த்தையைச் சொல்லி முடிக்கலைங்க அதுக்குள்ள “என்னைய்யா கேக்குற, அதான் டோக்கனே கொடுக்க ஆள் வரலையே அப்புறம் எங்க போட்டோ எடுக்கறது?”ன்னு லாஜிக்கல் பதில் இன்னொரு பக்கம். நியாயம்தானே. நான்தான் சுதாரிச்சிருக்கணும்னு காத்திருக்கத் தொடங்கினோம்.

சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின் ஒருவர் புல்லட்டில் வந்து இறங்கினார். “எல்லாரும் போயிட்டு நாளைக்கு வாங்க. டோக்கன் கொடுக்க வர வேண்டியவருக்கு வழியில ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. இன்னைக்கு யாரும் வரமாட்டாங்க.” ஆனா, ஜனங்க இதை நம்ப தயாரா இல்ல. ஏன்? அவர் ஒருத்தர்தான் ஆளா. வேற ஆளே கிடையாதா? அப்படின்னா போட்டோ எடுக்குறவரு எங்கன்னு கேள்வி கேட்டாங்க. எதுக்கும் அசராம இன்னைக்குக் கிடையாது நாளைக்கு வாங்கன்னுட்டு புல்லட்  வண்டியில் புறப்பட்டார். ஆக்சிடென்டெல்லாம் பொய்ப்பா... இல்லைன்னா போட்டோ எடுக்குற ஆளாவது வந்துருக்கணும் இல்ல... அப்படின்னு புலம்பிக்கிட்டே மக்களும் கலைந்தனர்.

அப்பதான் எனக்கு ஒரு கிரிமினல் யோசனை. ஒரு ஆபீஸ் நாள்ல ஏன் லீவு போட்டுட்டு வந்து இந்த வேலையை முடிக்கக்கூடாது. இவ்வளவு கூட்டமும் இருக்காது. வாரத்தின் நடுவே ஒரு நாளை தேர்வு செஞ்சுடணும்ங்கிறதுதான் அது. ஆபீஸுக்கு உண்மையான காரணத்தையும் சொல்லி லீவும் வாங்கியாச்சு. “இன்னைக்கு ஆதார் கன்ஃபார்முங்கோ”ன்னு நினைச்சுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போனேன். என்ன ஆச்சர்யம்? என் திட்டம் சரிதான். கூட்டமே இல்ல. டோக்கன் குடுக்கறவரும் தயாரா, வாங்க உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்கிற மாதிரி உட்கார்ந்திருந்தாரு.

ஏம்பா தம்பி, பேப்பர் படிக்கிறதில்லையா? என டோக்கன்காரர் கேட்க, “ஏன் பார்த்தேனே” என்றேன். ''அப்ப பவர் ஷட்-டவுனுன்னு தெரிஞ்சுதான் வந்தியா?''ன்னு அப்பாவியா கேட்டார். அடப்பாவிகளா? பவர் ஷட்-டவுனா? உங்களுக்குன்னு எப்படியா வந்து மாட்டுது. பவர் இருந்தா இவனுங்க இருக்கறதுல்ல, இவனுங்க இருந்தா பவர் இருக்கறதுல்ல. ச்சே. பவர் இல்லாட்டாலும், ஆளில்லாத கடைக்கு டீ ஆத்த கரெக்ட்டா வந்துடறீங்கன்னு நொந்துக்கிட்டு புறப்பட்டேன்.
 
பவர் இல்லாதது அவங்க தப்பில்லைங்க. ஆனா? செவ்வாய்க்கிழமை பவர் இருக்கப் போவதில்லைன்னு முன்னாடியே அவங்களுக்குத் தெரியும். தெரிஞ்சும் ஞாயித்துக்கிழமை வேலை செஞ்சதுக்காக திங்கட்கிழமை வார விடுமுறை எடுத்துக்கறீங்க. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா சிந்திச்சு திங்கட்கிழமைக்கு பதிலா வார விடுமுறையை பவர் ஷட்-டவுன் நாளான செவ்வாய்க்கிழமை எடுத்திருக்கலாமே. ஆனா, யாருக்குமே பயன்படாம திங்கட்கிழமையும் லீவு எடுத்துக்கிட்டு, செவ்வாய்க்கிழமை பவர் ஷட்-டவுன் நான் என்ன செய்யட்டும்னு ஒரு நாளை வீணாக்கினதுதான் மிச்சம்.

அடுத்ததா, இந்தமுறை சனிக்கிழமை பவர் நிச்சயமா இருக்கு எந்த காரணமும் சொல்லக்கூடாதுன்னு கிளம்பிப் போனேங்க. பத்து மணிக்கு வர வேண்டியவர் 10.45-க்கு வந்தார்.  என் கிரகம். கூட்டம் நகர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அமளி ஆரம்பிச்சிடுச்சு. இந்தமுறை, கம்ப்யூட்டர் மெதுவா வேலை செய்யுதாம். போட்டோ எடுக்க ஓர் ஆள்தான் இருக்காராம். அவரே, கைரேகை, கருவிழி அடையாளம், பெயர் விலாசம்னு எல்லாம் சரி பாக்கறதுக்கு நேரமாகுதுன்னு 25 டோக்கனோட நிறுத்திக்கிட்டாங்க. இந்த மாசத்துக்கான டோக்கன கொடுத்து முடிச்சாச்சு. இத்தோட அடுத்த மாசம் 22-ம் தேதிக்கு மேல வந்து டோக்கன் வாங்கிக்கங்கனு நோட்டீஸ் போட்டுட்டாங்க.

அப்போ இவ்ளோ நேரம் க்யூவில நின்னவங்க கதி? இவங்களுக்கெல்லாம் ஜனங்களைப் பத்திக் கவலையே இல்லையா? இவங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையா? 25 டோக்கன்தான் கொடுப்போம்னு முன்னாடியே சொல்லியிருந்தா, இவ்வளவு பேர் பல மணி நேரம் க்யூவில நின்னிருக்க வேண்டாமில்லையா? எல்லாத்துலேயும் அலட்சியம். சாதாரண ஜனங்கதானே. இவங்களால என்ன செஞ்சிட முடியும்ங்கிற  தைரியத்துல எதையும் முறையா செய்ய முனையறதில்ல.

இப்ப சொல்லுங்க. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தர் வரமாட்டாரான்னு ஜனங்க நினைக்கிறதுல்ல என்ன தப்பு இருக்கு?

 

 

வ.மாதவன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ