Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

 உலகமெங்கும் ஊறுகாய்!


இந்தியாவில் தயாராகும் ஊறுகாய், அதிலும் நம் தமிழகத்தில் தயாராகும் ஊறுகாய்க்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உண்டு. எந்தெந்த நாடுகள் ஊறுகாயை அதிகமாக இறக்குமதி செய்கின்றன, ஊறுகாய்க்கான புதிய சந்தை எது என்கிற கேள்விகளை சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமான FIEOவின் (Federation of Indian Export Organisations), தென்மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டோம்.

மாங்காய் ஊறுகாய்க்கே அதிகக் கிராக்கி!

“இந்தியாவில் தயாராகும் ஊறுகாய் மற்றும் சட்னி வகைகளுக்கு உலக அளவில் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இங்கிருந்து எலுமிச்சை, மாங்காய், மிளகாய் ஊறுகாய் என பலவகைகளில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஊறுகாய் ஏற்றுமதியில் 40 சதவிகிதத்துக்குமேல் மாங்காய் ஊறுகாய்தான். 

இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, ஊறுகாய்க்கு அதிகச் சந்தை வாய்ப்புகள் உள்ள நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகள் விளங்குகின்றன. சமீப காலமாக, வெஜிடபிள் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பச்சை மிளகு ஊறுகாய் போன்ற இன்னும் பலவகையான ஊறுகாய்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

 ஏற்றுமதி சந்தைகள் அதிகமுள்ள நாடுகள்!

நாடுகள் வாரியாகப் பார்க்கும் போது, இங்கிலாந்தில் வெஜிடபிள் ஊறுகாய் மற்றும் ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஊறுகாயையும், ஆஸ்திரேலியா வில் மாங்காய் ஊறுகாய்களையும், ஐக்கிய அரபு நாடுகளில் மீன் ஊறுகாய் களையும் அதிகமாக விரும்புகிறார்கள். ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் ஊறுகாய்க் கான சந்தை வளர்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது.

ஜப்பான், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜோர்டான், லிதுவேனியா, போலந்து, சவுதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஊறுகாய்க்கான சந்தைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் உணவு விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். உலக நாடுகள் அனைத்துமே உணவுப் பொருட்கள் வழியாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு நோய்கள் பரவக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது. அதனால் நாம் அனுப்பும் ஊறுகாயின் தரத்தில் மிகுந்த கவனமும், அதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்களின் மீது அக்கறையும் இருக்க வேண்டியது அவசியம். கடந்த 2013-14-ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி இருக்கும் ஊறுகாயின் மதிப்பு 860 கோடி ரூபாய்” என்றனர்.

பிராண்ட் மதிப்பும், தரத்தில் நம்பிக்கையும்!

வீட்டுச் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள், ஊறுகாய், சாப்பாட்டு மிக்ஸ் என எல்லா விதமான பொருட்களையும் தயாரிக் கிறது ஆச்சி நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏகப் பிரபலம். இந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.பத்மசிங் ஐசக்கிடம் ஊறுகாய் ஏற்றுமதி பற்றிப் பேசினோம்.

“என் நிறுவனத்தின் பிராண்ட் மீதான மதிப்பும், அதன் தரத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையுமே உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் நிலைபெறச் செய்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பதை ஒருசிலர் சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது, ஊறுகாய் உற்பத்தியிலும் அதிகப்படியான அக்கறை தேவை. புதிதாக ஊறுகாய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் களம் இறங்குபவர்கள் கட்டாயம் அவரவர்களின் பிராண்டுகளை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யுங்கள். அதற்கான அனைத்து ஈடுபாட்டையும் தாங்கள் உற்பத்தி செய்யும் ஊறுகாயின் தரத்தில் காட்டுங்கள்” என்கிற வழிகாட்டுதலோடு பேசத் தொடங்கியவர், ஏற்றுமதி குறித்த அடிப்படை விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

“இன்றைய நிலையில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நம்மவர்களுக்கு இருக்கும் குறைபாடு, அதன் தரத்தைப் பரிசோதிக்க வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். ஊறுகாயின் தரம், சுவை என எல்லாவற்றையும் பரிசோதித்து ஏற்றுமதி செய்யும்போது, நம் பொருளின் மீதான மதிப்பும், அதன் தேவையும் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் எங்கள் நிறுவனம் சென்னை அண்ணா நகரில் சயின்டிஃபிக்  ஃபுட் டெஸ்டிங் லேப் (பரிசோதனைக் கூடம்) ஒன்றை அமைத்துள்ளது. இதன்மூலமாக நாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு, அதன்பிறகு ஏற்றுமதி செய்யப் படுகிறது. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், தங்களின் உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க விரும்பினால், எங்கள் பரிசோதனைக் கூடத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றவர், புதிய ஏற்றுமதியாளர் களுக்கான சில டிப்ஸ்களையும் தந்தார்.

“ஊறுகாய்களை ஏற்றுமதி செய்யும்போது அவை பெரும்பாலும் கண்ணாடி பாட்டில் களில்தான் அடைக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் தரமானது பல மாதங்கள் வரை நீடித்து இருக்கும். எந்தமாதிரியான ஊறுகாய்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துவைத்துக் கொண்டு, அதன்படி ஏற்றுமதி செய்வது புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு, இங்கிலாந்தில் மீன்கள் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் நாங்கள் அந்த நாட்டுக்கு மீன் ஊறுகாய்களை அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம்.

அசைவ ஊறுகாய்களையும் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே எங்கள் நிறுவனம் ட்வின்பேர்டு என்கிற பெயரில் அசைவ ஊறுகாய்களை ஏற்றுமதி செய்து வருகிறது” என்றார் தெளிவாக.

தரம் நிரந்தரம்!

ஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் ஸ்வாதி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி சூரிசெட்டியிடம் பேசினோம்.

“1990-களிலிருந்து நான் இந்தியாவில் உற்பத்தி யாகும் பல பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். குறிப்பாக, ஊறுகாயைத் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் லண்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

நான் ஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும்போது அதன் தரம் மற்றும் பேக்கிங் மீது அதிகமான கவனத்தைச் செலுத்துவேன். காரணம், தரமாக இருந்தால்தான் நாம் ஏற்றுமதி செய்யும் ஊறுகாயைத் தொடர்ந்து விரும்புவார்கள். பேக்கிங் சரியாக இருந்தால்தான், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட் களின் தரம் கெடாமல், அதே சுவையுடன் நுகர்வோர்களின் கைகளுக்குச் சென்று சேரும்.
என் ஊறுகாய் ஏற்றுமதியில் லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் என்கிற ஏரியாவுக்குத்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. என் சொந்த நிறுவனம் ஒன்று அங்கே இருந்து ஏற்றுமதிக்கான வேலைகளைச் செய்வதால், என்னால் அந்த ஏரியாவில் அதிகமான ஆர்டர்களைப் பிடிக்க முடிகிறது.

மேலும், அந்த ஏரியாவில் தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். தரமான பொருள், சரியான நேரத்தில், சரியான மக்களுக்குச் சென்று சேரும்போது கண்டிப்பாக நமது ஏற்றுமதி ஆர்டர்கள் பெருகும்” என்றார்.
 

ஊறுகாயை யார் வேண்டு மானாலும் தயாரிக்கலாம் என்பதால் பலரும் இந்தத் தொழிலில் இறங்கி லாபம் பார்க்கலாமே!


நாங்கள் இனிப்புகளைத் தயாரித்து தமிழ்நாட்டில் உள்ள பல கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறோம். எங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்திய இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இனிப்பை ஏற்றுமதி செய்வது குறித்து கொஞ்சம் விளக்கமாக வழி காட்டுங்கள்.

- ராகேஷ், தூத்துக்குடி.

- உன்னி கிருஷ்ணன், இணை துணை பொது இயக்குநர், FIEO

‘‘நீங்கள் தயாரிக்கும் இனிப்பு வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஆனால், நீங்கள் தயாரிக்கும் இனிப்பின் தரம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். சில இனிப்பு வகைகள் சில நாட்கள் மட்டுமே கெடாமல் இருக்கும். சில இனிப்பு வகைகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை தன்மை மாறாமல் இருக்கும். இனிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


அதேபோல, இனிப்புகளை பேக்கிங் செய்யும்போது, அது வெளிநாட்டவர்களைக் கவர்வதாகவும், அந்த பேக்கிங்கின் உள்ளே இருக்கும் இனிப்பின் குணநலன்கள் குறித்து ஆங்கிலத்தில் அல்லது அந்தந்த நாட்டு மொழியிலும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் என்பதால் ஒவ்வொரு நாடும் தனித்தனியான விதிமுறைகளை வைத்திருக்கின்றன. அதனால், ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு முன்னர், அந்தந்த நாட்டின் உணவுக் கட்டுப்பாட்டு விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். உதாரணமாக, அரபு நாடுகளுக்கு இனிப்புகளை ஏற்றுமதி செய்வதாக இருந்தால், அந்த நாட்டின் உணவுத் துறைக்கு இனிப்பு சேம்பிள்களை அனுப்பி பதிவு செய்து, அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.’’


வளைகுடா உணவுத் திருவிழா!

உலகின் மிகப் பெரிய மற்றும் சிறந்த உணவுத் திருவிழாக்களில் வளைகுடா உணவுத் திருவிழாவுக்குத்  தனிச் சிறப்பு உண்டு. இதன் இருபதாம் ஆண்டுத் திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 8 - 12 தேதிகளில் துபாயின் உலக வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

இந்த உணவுத் திருவிழாவில் இந்த ஆண்டு 120 நாடுகளைச் சேர்ந்த 4,800 சர்வதேச நிறுவனங்களையும், 170 நாடுகளில் இருந்து 85,000 பார்வையாளர்களையும் கவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். 1,27,000 சதுர மீட்டர் பரப்பு கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் இந்திய நிறுவனங்களும், முகவர்களும் பங்கெடுக்க இருக்கிறார்கள். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இந்தியாவின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைக் கண்காட்சியில் வைக்க ஸ்டால்களைத் தயார் செய்து வருகிறது.
 

இந்தியாவின் தூய்மையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களான ஊறுகாய், சட்னிகள், ஜாம்கள், (Ready to eat foods) உண்பதற்குத் தயார் நிலையில் உள்ள உணவு பொருட்கள், தானியங்கள் மற்றும் தானியங்கள் சார்ந்த பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

___________________________________________________________________________________________________

லாபம் தரும் அப்பளம் ஏற்றுமதி!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்களில் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது அப்பளம். இன்றைய நிலையில் அப்பளத்தின் ஏற்றுமதி எப்படி இருக்கிறது, அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள நாடு எது, எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் (FIEO - Federation of Indian Export Organisations), தென்மண்டல அலுவலகத்தின் இணை, துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

பல நாடுகளில் வரவேற்பு!

“2012-13ம் நிதியாண்டைவிட, கடந்த 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் அப்பளம் ஏற்றுமதி வளர்ச்சி 14 %-ஆக உள்ளது. வரும் காலங்களிலும் அதிகமான ஏற்றுமதி ஆர்டர்கள் இருக்கும். இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 103 நாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி ஆகிறது.|

வட இந்தியாவிலிருந்து அப்பளம் ஏற்றுமதி செய்தாலும், மெட்ராஸ் அப்பளத்துக்கு வரவேற்பு அதிகம். முக்கியமாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவின் மொத்த அப்பள ஏற்றுமதியில் 80% ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தற்போது, ஆப்பிரிக்க நாடுகள் அப்பள ஏற்றுமதிக்கு புதுச் சந்தையாகத் திகழ்கிறது.  அப்பளம் தரமானதாகவும், சுவை நிலையானதாகவும் இருப்பின் ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்றார் அவர்.

அதிகரிக்கும் உற்பத்தி!

அப்பளம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் மதுரை அனகாமஸ் மேனுஃபேக்சரிங் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.மீனாட்சி சுந்தரேஸ்வரர் இந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகள் பற்றி எடுத்துச் சொன்னார்.

“உலக நாடுகளில் அப்பளத்தின் தேவையானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதனால் இந்தியாவில், குறிப்பாக, மதுரையில் 15-20% வரை அப்பளத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்களும் நன்றாகக் கிடைத்து வருகின்றன.

நாங்கள் மூன்று தலைமுறைகளாகவே அப்பளம் உற்பத்தி செய்து வருகிறோம். என் தந்தைக்குப் பிறகு, அப்பளம் உற்பத்தி என் கைக்கு வந்தபோது, உள்நாட்டில் மட்டும் அப்பளத்தை விநியோகம் செய்யாமல், ஏற்றுமதியில் ஈடுபட்டால் இன்னும் நம்மால் அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்று தோன்றியது. அதன் பிறகே கடந்த 2007-ல்  அனகாமஸ் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து, மீனாஸ் என்கிற பிராண்ட் பெயரில் வகை வகையான அப்பளங்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன்.

தரமான தயாரிப்பு!

1970-களிலெல்லாம் மதுரையில் சிந்தாமணி, ஜெயந்திபுரம் மற்றும் சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில்தான் அப்பளமானது உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்று தமிழகத்தில் பல இடங்களில் அப்பளம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலானது காணப்படுகிறது. அதேபோல, முன்பு கைகளால் தயாரிக்கப்பட்டுவந்த அப்பளமானது, இன்று 80% இயந்திரங்களின் உதவியுடன் வேகமாகவும், தரமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டவர் விருப்பம்!

பொதுவாக, கறுப்பு உளுந்தினால் தயாரிக்கப்படும் அப்பளம்தான் தமிழகத்தின் சிறப்பு. இதை மெட்ராஸ் அப்பளம் என்கிற பெயரிலேயே வெளிநாட்டவர்கள்  அழைக்கிறார்கள். இதற்கே அதிகமான மவுசு பல நாடு களில் இருக்கிறது. நாங்கள் ஹெர்பல், வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் என வெளிநாட்டவர்  விரும்பும் 72 வகை யில் அப்பளங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம். 

ஹலால் சான்றிதழ்!

அரபு நாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள், அதற்கு ஹலால் சான்றிதழ் பெறுவது  அவசியம். இந்தச் சான்றிதழின் அர்த்தம், நாம் தயாரிக்கப்படும் அப்பளம் சுத்தமானது என்பதுதான். இந்தச் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு அப்பளங்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தச் சான்றிதழ் பெற்றிருந்தால்,  ஏற்றுமதி  ஆர்டர்கள் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு அதிகம்''  என்றவர், அப்பளம் தயாரிப்பில் உள்ள நடைமுறை விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூன்று மாதங்கள் வரை!

“அப்பளத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் பெறுவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகிவிடும். அதை அவர்கள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 90 நாட்கள் வரை நாம் தயாரிக்கும் அப்பளங்கள் கெடாமல் இருக்க வேண்டும். சுத்தமான உளுந்தில் அப்பளங்களைத் தயாரிக்கும்போது அந்த அப்பளம் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அப்பளங்களை உற்பத்தியாளர்களிடம் வாங்கி ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியது சுத்தமான, தரமான முறையில் அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதைத்தான்.

சுவை, வடிவம், நிறம்!

அப்பளத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்கள் எதிர்பார்க்கும் விஷயம், அதன் வடிவம் ஒரேமாதிரி இருக்க வேண்டும்; அதன் நிறம் வெண்மை யாகவும், எண்ணெய்யில் பொரிக்கும்போது அதிகமாக விரிவடையும் தன்மையுடனும் இருக்க வேண்டும். முக்கியமாக, சுவையுடன் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே.  இந்த எதிர்பார்ப்புகளை உற்பத்தியாளர்கள் பூர்த்திசெய்ய வேண்டுமெனில், தரமான உளுந்தைப் பயன்படுத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் கூடாது. மாவு பிசையும் தன்மை மற்றும் வேலைபாடுகள் சிறப்பான தாக இருக்க வேண்டும்” என்றவர், வெளிநாடுகளில் அப்பளத்தின் நுகர்வு எப்படி இருக்கிறது என்றும் சொன்னார்.

அதிகரிக்கும் நுகர்வு!

“உலக நாடெங்கிலும் அப்பளத்தின் நுகர்வு அதிகமாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு, மலேசியாவில் வாழும் மக்கள்தொகையில் சுமார் 9% பேர் தமிழர்கள், 30% பேர் சீனர்கள், 60% பேர் மலேசியர்கள். முதலில் தமிழர்கள் மட்டுமே அப்பளத்தை உணவுகளில் சேர்த்து வந்தார்கள். ஆனால், தற்போது சீனர்கள் மற்றும் மலேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் அப்பளத்தைத் தங்களது உணவுகளில் சேர்ப்பதால், அங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல, மியான்மரில் அப்பளம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது அவர்களும் அப்பளத்தைத் தங்களது உணவுகளில் சேர்த்து வருகிறார்கள். இப்படியாக நாளுக்கு நாள் அப்பளத்தின் நுகர்வு உள்நாட்டில் மட்டுமல்லாது, அயல்நாட்டிலும் அதிகரித்து வருவதால் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகி வருகிறது” என்றார்.

சுத்தமும் தரமும் முக்கியம்!

உற்பத்தியாளர்களிடமிருந்து அப்பளங்களை வாங்கி ஏற்றுமதி செய்துவரும் மதுரையைச் சேர்ந்த ஏ.சம்பத்குமாருடன் பேசினோம். 
“நான் கடந்த 18 ஆண்டுகளாகவே உற்பத்தியாளர் களிடமிருந்து வகை வகையான அப்பளங்களை வாங்கி சிங்கப்பூர், மலேசியா, குவைத், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். அப்பளத்தின் சுவையும், தரமும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்பதால், மதுரையில் உள்ள இரண்டு அப்பள உற்பத்தியாளர்களிடம் மட்டுமே தொடர்ந்து அப்பளங்களை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். மாதத்துக்கு 10 - 20 டன் அப்பளங்களை வாங்கி, ஓவியம் மற்றும் மம்மி-டாடி என்கிற பிராண்ட் பெயரில் ஏற்றுமதி செய்து வருகிறேன்.

அப்பளத்தை சொந்தமாகத் தயாரிக்காமல், பிறர் தயாரித்ததை வாங்கி ஏற்றுமதி செய்பவர்கள், அது தரமாகவும் சுவையாகவும் இருக்கிறதா என்று பார்ப்பது மிக அவசியம். தவிர, அதன் மொறு மொறுப்பு 2 மணி நேரம் வரை நீடிக்க வேண்டும்.

முதலில் இறக்குமதியாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பலமுறை பேசி, அவர்களது நாடு களுக்குச் சென்று சந்தித்து நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதன்பிறகே அவர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கும்.  உற்பத்தியாளர்களிடம் இருந்து அப்பளங்களைப் பெற்று, அதன் தரத்தைக் கூட்டி உங்களுக்கு வழங்குகிறோம் என்கிற உத்தரவாதத்தையும் தந்தால் ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான விஷயம், அப்பளத்துக்கான தரச் சான்றிதழ். இதுவே, நமது ஏற்றுமதி ஆர்டர்களுக்கு உறுதுணையாகும்” என்றார்.

அதிக முதலீடும், பெரிய அளவில் இயந்திரங் களும் தேவை இல்லை என்பதால், பலரும் அப்பளம் ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கலாமே!        
 
படங்கள்: சி.தினேஷ்குமார், மீ.நிவேதன்.


நான் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் சொந்தமாக ஏற்றுமதி தொழில் செய்ய நீங்கள் வழிகாட்ட முடியுமா?

- மகேந்திர பிரபு, பொள்ளாச்சி.

‘‘நீங்கள் ஏற்றுமதி துறைக்கு புதியவர் என்பதால், முதலில் அதுபற்றி தெரிந்துகொள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நடத்தப்படும் பிராக்டிக்கல் வகுப்புகளில் கலந்துகொண்டு, அது குறித்த அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் ஆவது எப்படி என்கிற ரீதியில் FIEO பல்வேறு வகுப்புகளை ஏற்றுமதியாளர்களுக்காக நடத்தி வருகிறது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு 09894521718 என்கிற அலைபேசி எண்ணிலோ அல்லது jjjaykumar@fieo.org என்கிற மெயில் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.’’


அனுபவம் சொல்லித் தந்த பாடம்!

மதுரையைச் சேர்ந்த ஏ.சம்பத்குமார் தனக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவத்தை நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

‘‘15 ஆண்டுகளுக்குமுன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு .12 லட்சம் மதிப்புள்ள அப்பளங்களை ஏற்றுமதி செய்தேன். ஏற்றுமதி செய்த இரண்டு வாரங்களில் அப்பளங்களானது இறக்குமதியாளருக்கு கிடைத்துவிட வேண்டும் என்பதே இலக்கு. ஆனால், மூன்று வாரங்களாகியும் அப்பளங்கள் இறக்குமதியாளருக்கு கிடைக்கவில்லை. காரணம், என்ன வென்று எனக்குப் புரியவில்லை.

நான் அந்த நாட்டு சுங்கத்துறை அதிகாரியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, நீங்கள் அப்பளம் அனுப்பிய அட்டைப் பெட்டியில், எங்கள் நாட்டு மொழி தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தைத் தவறான அர்த்தம் தரக்கூடியது. எனவேதான், உங்கள்  வாடிக்கை யாளருக்குப் பொருட்களை வழங்காமல் இருக்கிறோம்.  இறக்குமதியாளர் அட்டைப் பெட்டியில் அச்சிடச் சொல்லி தந்த அரபு வார்த்தைகளை, நான் அச்சடிக்கக் கொடுத்த அச்சாளர் தவறாக அச்சடித்துவிட்டார் என்று எனக்குப் புரிந்தது. அதன்பிறகு அந்த நாட்டு சுங்கத் துறைக்கு மெயில் மூலமாக மன்னிப்புக் கடிதத்தை அனுப்பிய பிறகே அப்பளங்களை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்தார்கள்.

பொதுவாக, ஏற்றுமதி செய்யும் நாட்டின் மொழியை முழுமையாகத் தெரிந்துகொள்ளாவிட்டாலும், சிறிதள வேணும் கற்றுக்கொள்வது இதுபோன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க உதவும்’’ என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ