Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்வெஸ்ட் எக்ஸ்போ - 2015 : சென்னையைக் கலக்கிய முதலீட்டுக் கண்காட்சி!

இன்வெஸ்ட் எக்ஸ்போ - 2015

 

சென்னையைக் கலக்கிய முதலீட்டுக் கண்காட்சி!

சென்னையைச் சேர்ந்த டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ் ((TEAM and Trade Expos) நிறுவனம், நாணயம் விகடனுடன் இணைந்து முதலீட்டுக் கண்காட்சி 2015 (INVEST XPO’15) என்கிற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை அண்மையில் சென்னையில் நடத்தியது. இந்தக் கண்காட்சியை ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் (சென்னை) ஹரிகிரிஷ்ணன் மற்றும் செபியின் மண்டல இயக்குநர் சுரேஷ் பி.மேனன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் ஹரிகிரிஷ்ணன் பேசும்போது, ''இந்தியர்களின் சேமிப்பு, நாட்டின் ஜிடிபியில் 38 சதவிகிதமாக இருந்தது, இப்போது 28 சதவிகிதமாகக் குறைந்திருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. பிசிக்கல் சேமிப்பிலிருந்து ஃபைனான்ஷியல் சேமிப்புக்கு இந்தியர்கள் மாறவேண்டிய காலம் இது' என்று குறிப்பிட்டார்.

செபியின் சுரேஷ் பி.மேனன் பேசும்போது, ''இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாம். அதுவும், எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும். முதலீட்டை பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், கடன் பத்திரங்கள் எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்' என்றார். டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜெய் கோபாலன், இயக்குநர் வெ.ராமு வரவேற்று பேசினர்.

ரிசர்வ் வங்கி, செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், பிஎஸ்இ, சிடிஎஸ்எஸ்ஐஎல், என்எஸ்டிஎல், எம்சிஎக்ஸ் போன்ற நிறுவனங்கள் அரங்கு அமைத்திருந்தன. கண்காட்சி நடந்த இருதினங்களும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், கமாடிட்டி, நிதி ஆலோசனை, கரன்சி டிரேடிங் குறித்த நிபுணர்களின் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங் கில் பேசிய ஃபெடரேஷன் ஆஃப் ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கர், மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலீட்டுக்காக வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கினார்.  சிடிஎஸ்ஐஎல் மண்டல மேலாளர் ஏ.ஆர்.வாசுதேவன், டீமேட் கணக்கைத் தொடங்குவதினால் ஏற்படும் பயன்கள் பற்றியும், நிதி ஆலோசகர் பி.பத்மநாபன், நிதித் திட்டமிடல் குறித்தும் பேசினர். யுனிஃபை கேப்பிட்டல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன், வாரன் பஃபெட் வழியில் பங்கு முதலீடு என்ற தலைப்பில் பேசினார். பங்குச் சந்தையில் சொத்துச் சேர்ப்பது குறித்து மான்டே ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வசந்த் மான்டே பேசினார்.

கமாடிட்டி முதலீடு பற்றி எம்சிஎக்ஸ் தென்மண்டல மேலாளர் டி.ஜி.செந்தில்வேலன், ''கமாடிட்டி டிரேடிங் செய்யும்போது உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும்'' என்றார். பங்குச் சந்தையும் உலகப் பொருளாதாரமும் என்ற தலைப்பில் பேசிய  ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் ஜி.சொக்கலிங்கம், ''டாப் 10 பொருளாதார நாடுகள், அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்'' என்றார். வேல்யூ இன்வெஸ்டிங் குறித்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ''பங்கின் விலையும் மதிப்பும் வேறுவேறானவை. விலையை விட மதிப்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார். இன்ஷூரன்ஸ் குறித்து ஆர்.கோபிநாத் உள்ளிட்டோர் பேசினார்கள்.

இந்தக் கண்காட்சியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து முதலீட்டா ளர்கள் வந்திருந்தனர். நாணயம் விகடன் இதழ் சார்பாக சேமிப்பு, முதலீடு, முன்னேற்றம் என்கிற தலைப்பில் சிறிய முதலீட்டு கையேடு ஒன்று முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படிக்கhttp://nanayam.vikatan.com/index.php?aid=9290 செல்லவும்.

இதுபோன்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளைத் தமிழகம் முழுக்க நடத்துங்கள் என்ற கோரிக்கையை முதலீட்டாளர்கள் வைத்தனர். இந்த எக்ஸ்போவின் பிரதான ஸ்பான்ஸராக இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனம் இருந்தது. புதிய தலைமுறை தொலைக்காட்சி டிவி பார்ட்னராக இருந்தது.

- சி.சரவணன்

படங்கள்: எம்.உசேன், தி.குமரகுருபரன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ