Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதியாண்டுக்கான பட்ஜெட் பாக்கி....

கடந்த 2014 – 2015-ம்  நிதியாண்டுக்கான பட்ஜெட் பாக்கி....
2014 – 2015-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 170 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் 54 திட்டங்கள் மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 26 திட்டங்கள் பகுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 90 திட்டங்களுக்கான பணி நடந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல் கிடப்பில் இருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 7,060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. செயல்பாடு அறிக்கையில், இதுவரை கருத்து குறிப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தத் திட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் மூலம் 2019-க்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சுகாதாரம் உறுதி செய்யப்படுவதாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. இந்தத் திட்டமும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டமாகும். இந்தத் திட்டம் அக்டோபர் 2 2014 அன்று தொடங்கப்பட்டு, டிசம்பர் 28 2014 அன்றுதான் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
யாராலும் உரிமை கோரப்படாத பிபிஎஃப் மற்றும் அஞ்சலகங்களில் இருக்கும் பணத்தை என்ன செய்வது என்பதைப் பற்றி அறிய ஒரு குழு அமைத்து அதற்கு டிசம்பர் 2014-க்கு முன் தீர்வு காணப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் 29 2014 அன்றுதான் அந்தக் குழு இரண்டாவது முறையாக கூடியது என்பது வேடிக்கையானது. இந்தத் திட்டம் பொருளாதார விவகாரங்கள் துறைக்கு கீழ் வருகிறது.
இந்திய உனவுக் கழகம் மறுசீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு தகவல்கள்படி இந்திய உணவுக் கழகம் முழுக்க முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வருவதாகவும், பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் துறைக்கு ஒரு நிதி கட்டமைப்பை உருவாக்க ஜூலை மாதம் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தன்  உறுதியான பரிந்துறைகளை வழங்கக் கோரி இருந்தார் நிதி அமைச்சர். இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்தத் திட்டங்கள் எல்லாம் நீண்ட கால திட்டங்களாக இருந்தாலும், திட்டத்துக்கான நடவடிக்கைகள் ஆறஅமர, சோம்பேறித்தனமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா போல அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும் அப்போதுதான் அடுத்த நான்கு ஐந்து வருடத்துக்குள் இந்தப் பணிகளை எல்லாம் நிறைவு செய்ய முடியும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ