Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிசினஸில் ஜெயிக்க புதிய யுத்தி!

ஜவுளி உற்பத்தி தொழிலாக இருந்தாலும் சரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயார் செய்வதாக இருந்தாலும், நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னணியில் நிற்கிறார்கள் சீனர்கள். அப்படி அவர்களிடம் என்னதான் திறமை இருக்கிறது என்பதை அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எடுத்துச் சொன்னார் கெவின்கேர் நிறுவனத்தின் தலைவரான சி.கே.ரங்கநாதன். அவர் சொன்ன அந்த சம்பவம் இனி...

''நம்மூரைச் சேர்ந்த ஒரு ஜவுளி ஆலை அதிபர், அமெரிக்காவில் இருக்கும் முக்கிய கம்பெனி ஒன்றுக்கு பல ஆண்டுகளாகவே துணிகளை ஏற்றுமதி செய்துவந்தார். இவர் தந்த துணிமணிகளை அந்த நிறுவனம் மறுபேச்சு இல்லாமல் வாங்கி விற்று வந்தது.

திடீரென அந்த அமெரிக்க கம்பெனி நம்முடைய ஜவுளி ஆலை அதிபருக்கு ஆர்டர் தர மறுத்தது. அதிர்ந்து போன ஆலை அதிபர் என்ன காரணம் என்று கேட்டார்.

''உங்கள் ஆர்டரை சீனாவுக்கு மாற்றப் போகிறேன். காரணம், நான் தரும் ஆர்டரை முடித்து தர நீங்கள் 90 நாட்கள் எடுக்கிறீர்கள். ஆனால், சீனர்களோ வெறும் 50 நாளிலேயே என் ஆர்டரை முடித்துத் தந்துவிடுகிறார்கள்'' என்று சொன்னார்.

''50 நாளிலா? வாய்ப்பே இல்லை. இதில் ஏகப்பட்ட வேலை இருக்கிறது. 50 நாளில் ஆர்டரை முடித்துத் தருவதாக சொல்வார்கள். ஆனால், செய்ய மாட்டார்கள்'' என்று சொன்னார் நம்மூர் தொழிலதிபர்.

''இல்லை, சொன்ன தேதியில் சரியாக ஆர்டரை முடித்துத் தருகிறார்கள். இதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் உங்கள் ஆர்டரை சீனாவுக்கு மாற்ற முடிவு செய்தேன்'' என்றார் அமெரிக்க தொழிலதிபர்.

''எப்படி இது சாத்தியம், நீங்களே எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார் நம்மூர்க்காரர்.

''அது எனக்குத் தெரியாது. வேண்டுமென்றால், நீங்களே சீனாவுக்கு போய் பார்த்து, தெரிந்துகொள்ளுங்களேன்'' என்றார் அமெரிக்க தொழிலதிபர்.

நம்மூர் தொழிலதிபர் சீனாவில் இருக்கும் அந்த ஆலைக்குப் போனார். அவர்கள் எப்படி துணிகளை உற்பத்தி செய்கிறார்கள் என்பதை எல்லாம் கவனித்தார். நம்மூரில் துணிகளை உற்பத்தி செய்கிற மாதிரிதான் அங்கும் உற்பத்தி செய்தார்கள்.

ஆனால், துணிகள் உற்பத்தியானவுடன் அதை அமெரிக்கா செல்லும் கப்பலில் ஏற்றுவதைக் கண்டு அதிர்ந்து போனார் நம்மூர் தொழிலதிபர். சாயம் ஏற்றப்பட்ட வெறும் துணியை கப்பலில் ஏற்றுகிறார்களே, ஏன் என்று தெரியாமல் குழம்பிப் போனார்.

அவரும் அந்தக் கப்பலில் ஏறி என்னதான் நடக்கிறதென்று பார்க்க ஆரம்பித்தார்.

அமெரிக்கா செல்லும் கப்பலில் பல நூறு தொழிலாளர்கள் இருந்தார்கள். கப்பல் அமெரிக்க செல்ல ஆரம்பித்ததுமே துணிகளை சட்டைகளாக, பேண்ட்களாக என பலவகையில் தைக்க ஆரம்பித்தார்கள். பிறகு, பட்டன் தைப்பது, அயர்ன் செய்வது என ஒவ்வொரு வேலையும் கப்பலிலேயே வரிசையாக முடிந்துகொண்டிருந்ததை பார்த்து வாயடைத்துப் போனார் நம்மூர் தொழிலதிபர்.

கப்பல் அமெரிக்காவுக்கு சரியாக ஐம்பதாவது நாளில் சென்று சேரும்போது அமெரிக்க தொழிலதிபர் தந்த ஆர்டர் கனகச்சிதமாக தயாராகியிருந்தது.

கப்பலில் இருந்து இறங்கிய உடைகள் நேராக அந்த நிறுவனத்தின் பல கடைகளுக்கும், குடோனுக்கும் செல்வதைக் கண்டபிறகுதான் சீனர்களால் 50 நாளில் ஆர்டரை எப்படி முடித்துக் கொடுக்க முடிகிறது என்பதை புரிந்துகொண்டார்.

''ஒரு பொருளை முழுமையாக தயார் செய்து முடித்தபிறகு அதை அனுப்ப வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சீனர்களோ, பொருளை வாங்குகிறவர்களின் கைக்கு போய் சேரும்போது அது முழுமையாக இருந்தால் போதும் என்று நினைத்தார்கள். லாஜிஸ்ட்டிக்கை சரியாக பயன்படுத்தியதால்தான் 50 நாட்களில் அவர்களால் ஆர்டரை தர முடிந்தது'' என்று சொல்லி முடித்தார் சி.கே.ரங்கநாதன்.

மாற்றி யோசித்தால், நம்மவர்களும் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close