Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்போதும் ஜெயிக்க எளிமையான டிப்ஸ்!

வாழ்வில் ஜெயித்துவிட வேண்டும் என்கிற எண்ணமும், பெரும் வெற்றியை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் போற்றி புகழ வேண்டும் என்கிற ஆசையும் நம் எல்லோரின் மனதிலும் நிச்சயம் இருக்கும். அந்த புகழ் தரும் வெற்றியை ருசிப்பதற்காக இன்று நாம் எல்லோரும் இயந்திர யுகத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சிலர் மட்டுமே வெற்றி எனும் கனியை விரைவில் ருசித்துவிடுகிறார்கள். பலர் வாழ்நாள் வரையிலும் அதை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

வெற்றியளார்கள் கையாளும் வாழ்வின் யுக்திகளை, எளிமையான நடைமுறை விஷயங்களை கூட சாதாரணமானவர்கள் செய்யாததால் முயற்சியை மட்டுமே தனதாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கீழே உள்ள சில டிப்ஸ்களை படியுங்கள்... உங்களுக்குள் நிச்சயம் ஒரு உத்வேகம் பிறக்கும்!

* புத்தகங்கள் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். அதனால் மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

* உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் நிச்சயம் கூடாது.

* கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். அது அன்பை மட்டுமல்ல வாழ்வை நிம்மதியில்லாமல் செய்துவிடும். அதனால் முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

* விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். எழுந்ததும் உடற்பயிற்சி அவசியம். பின்னர் அந்நாளின் அலுவலக வேலைகளை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

* எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை உணவுதான் அந்நாளின் நமது பணிகளுக்கான பூஸ்ட்.

* நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். எந்நேரமும் இன்முகத்துடனேயே இருங்கள். இதமான பேச்சே உங்கள் இயல்புகளாக இருக்கட்டும்.

* தமிழோ, ஆங்கிலமோ இந்தியோ எந்த மொழியாக இருந்தாலும் அதில் சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். இச்செயல் அந்த மொழியிலுள்ள நமது திறமையை நமக்கு உணர்த்துவதாக இருக்கும்.

* ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள். அரட்டைப் பேச்சுக்களை ஊக்குவிக்காதீர்கள். நாம் செய்யும் தவ்றுகளிலிருந்து மட்டுமல்ல, மற்றவர்கள் செய்யும் தவறுகளிலிருந்தும் கற்றுக் கொள்ள முயற்சியுங்கள். அதே சமயம் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க பழகுங்கள்.

* உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும். குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

* மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள். மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள். வெற்றியாளர்கள் என்றைக்கும் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தன்னைச் சார்ந்து இருப்பவர்களும் தன்னால் பயனடைய வேண்டும் என்று சிந்தித்தே செயல்படுவார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ