Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முத்ரா வங்கி: சிறு வணிகர்களுக்குப் பயனளிக்குமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முத்ரா வங்கியை துவக்கி வைத்தார். பிரதம மந்திரியின்    ஜன் தன் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த வங்கி மூலம் 20000 கோடி ரூபாய் அளவிலான உதவி சிறிய வணிகர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
 
இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும், புதிய தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் 12 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
 

ஏற்கனவே முத்ரா வங்கி பயனளிக்குமா என்பது குறித்து நாணயம் விகடனில் வெளிவந்த கட்டுரை:

 

 முத்ரா வங்கி: சிறு வணிகர்களுக்குப் பயனளிக்குமா?

 

ந்தியா முழுக்க உள்ள சிறு வணிகர்கள் தொழில் தொடங்குவதற்கு 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகச் சமீபத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இதற்காக முத்ரா வங்கி என்கிற ஒரு புதிய வங்கியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. முத்ரா வங்கி என்றால் என்ன, இந்த வங்கியால் யாருக்கு என்ன நன்மை, இந்த நிதி ஒதுக்கீடு சிறுவணிகர்களுக்கு எப்படி உதவும் என்பது குறித்துப் பார்ப்போம்.

Micro Units Development Refinancing Agency Bank என்பதன் சுருக்கம்தான் முத்ரா வங்கி (Mudra Bank). சிறு வணிகர்களின்  மேம்பாட்டுக்கு நிதி உதவி செய்யவே இந்த வங்கியைத் தொடங்க இருக்கிறது மத்திய அரசாங்கம். இந்த முத்ரா வங்கி வணிகர்களுக்கு நேரடியாகக் கடன் எதுவும் தராது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குதன் மூலம் அது சிறுவணிகர்களைச் சென்று சேருவதற்கு உதவும் ஓர் அமைப்பாகவே இருக்கும்.

தற்போதுள்ள நிலவரப்படி, இந்தியா முழுக்க உள்ள  57.7 மில்லியன் சிறு வணிக நிறுவனங்களில் 4% பேர் மட்டுமே நிதி நிறுவனங்களின் மூலம் தொழில் கடன் பெறுகின்றனர். ஆனால், தொழில் கடன் கேட்டுவரும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, சுமார் 28 லட்சம் சிறுவணிகர்களுக்கு மேல் 31,450 கோடி ரூபாய் கடனாகத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது, கடனாகத் தரப்பட்ட தொகை சுமார் 44 சதவிகிதமும், கடன் பெறுகிற வர்கள் எண்ணிக்கை 33 சதவிகிதமாக வும் உயர்ந்திருக்கிறது.

ஆனால், சிறுவணிகர்கள் தாங்கள் தொழில் தொடங்குகிற அளவுக்குத் தேவையான நிதி இந்த நிறுவனங்கள் மூலம் கிடைப்பதில்லை. மிகக் குறைந்த அளவிலேயே இந்த நிதி நிறுவனங்களின் மூலம் சிறுவணிகர் களுக்குக் கடன் கிடைக்கிறது.

இந்தக் குறைந்த அளவு பணத்தைக் கொண்டு தொழிலை துவங்குவது பெரிய சவாலாகவே உள்ளது. தவிர, நபார்டு மற்றும் சிட்கோ வங்கிகள் சிறுவணிகர்களுக்கு ஏற்கெனவே கடன் தந்துவந்தாலும், அந்த நிறுவனங்களின் மூலம் அதிக அளவிலான சிறுவணிகர்களைச் சென்றுசேர முடியவில்லை. இதனால்தான் புதிதாக இன்னொரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் சிறுவணிகர்களைச் சென்றுசேர வேண்டிய தேவை மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

முத்ரா வங்கி பற்றி சென்னை ஐஐடியின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு பேராசிரியர் தில்லைராஜனிடம் கேட்டோம்.

‘‘சிறு வணிகர்களுக்கான மேம்பாட்டுக்காக முத்ரா வங்கிக்கு இந்த பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசாங்கம். இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த வங்கியின் மூலம் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க முன்வரும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பு சிறு வணிகர்களுக்கு உதவும் விதமாகவே அமையும். காரணம், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் தற்போது மத்திய ரிசர்வ் வங்கியின் நெறிமுறைக்கு உட்பட்டு நடப்பதால், அந்த நிறுவனங்கள் சரியான வட்டி விகிதத்தில் கடன் வழங்கும்.

ஏற்கெனவே இந்தச் சிறு வணிக நிறுவனங்களுக்குத் தொழில் துவங்க 20,000 ரூபாய்க்கும் குறைவான தொகைதான் கிடைக்கிறது. இதனை வைத்துத் தொழில் துவங்குவது கடினம் என்ற சூழல் உள்ளது. தற்போது அரசு அறிவித்திருக்கும் இந்த அறிவிப் பினால், அவரவர் தொழிலைப் பொறுத்து அவர்களது கடன்களுக்கான அளவு மாற வாய்ப்புள்ளது’’என்றார்.

முத்ரா வங்கிக்கு ஒதுக்கப்பட்ட 20,000 கோடி ரூபாய் சரியான விதத்தில் நிதி நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு, அவர்கள் அதனை எந்தக் குறுக்கீடுகளும் இன்றி சிறுவணிகர்களுக்கு வழங்கினால், சிறுவணிகர்களின் நிதித் தேவை நிறைவேறி, மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் நிறைவேறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ