Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

 நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் நேரத்தில் வருமான வரி தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார் என்.எஸ்.ஸ்ரீனிவாசன்

உங்கள் கேள்விகளை @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று ட்விட் செய்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

 

 நாணயம் விகடன் ட்விட்டர் வருமான வரி கேள்வி பதில்


1. என் மாதச் சம்பளம் ரூ. 15,200. மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய பான் கார்ட் எடுத்தேன். பான் கார்ட் இருப்பதால் நான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
@subramani
பான் கார்ட் இருக்கிறது அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததால் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. வரிச் சலுகை முதலீடுகள்  மற்றும் செலவுகளான பிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், மெடிக்கிளைம் பிரீமியம் போன்றவை கழிக்கப்படுவதற்கு முன், ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம், அடிப்படை வருமான வரி விலக்கை தாண்டும் போது வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். உதாரணமாக, நடப்பு 2015-16 ம் நிதி ஆண்டில் ஒருவரின் மொத்த வருமானம் ரூ.2.5 லட்சம் தாண்டும் போது, வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டி வரும்.  இங்கே சந்தேகம் கேட்டிருக்கும் வாசகருக்கு வேறு வருமானம் இல்லாத நிலையில் அவரின்  நிதி ஆண்டு வருமானம் ரூ. 1,82,400 என்பதால் அவர் வருமான வரி கணக்கு எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை. 
 
 
2. வருமான வரி முதலீட்டுக்கான ஆவணங்களை எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்?
 
@raghuvaranraja
 வருமானம் எப்படி வந்தது, முதலீட்டுக்கான ஆதாரம் என்பது குறித்து கேள்வி எழுப்ப வருமான வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. வரி கணக்குக்கான பரிசீலனை (assessment year) ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரையில் வருமான வரி அதிகாரிகள், இவ்விதம் கேள்வி எழுப்பக் கூடும். வழக்கமாக நிதி ஆண்டை அடுத்து பரிசீலனை ஆண்டு வரும். அந்த வகையில் ஒருவர் நிதி ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரைக்கும் வருமானம் மற்றும் வரிச் சலுகை முதலீட்டுக்கான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருபப்து நல்லது. இது தவிர, வருமான வரித் துறையிலிருந்து மேற்கூறிய 6 வருடங்களுக்கு முற்பட்ட வருடங்கள் தொடர்பாக ஏதாவது நோட்டீஸ் அனுப்பி இருந்தால், அந்த ஆண்டுகளுக்கான ஆவணங்களை கொடுக்க வேண்டி இருக்கும்.  

3. வரி கணக்கை சரியான தேதியில் தாக்கல் செய்யவில்லை என்றால் என பாதிப்பு ஏற்படும்?
@mahendran
கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. அதேநேரத்தில் வரி பாக்கியும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் வருமான வரி பாக்கியை  மாதத்துக்கு 1% அபராத வட்டியுடன்  கணக்கிட்டு கட்ட வேண்டும். கெடுதேதி கடந்தும் வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை, செலுத்த வேண்டிய வரி, அபராத வட்டியுடன் ரூ. 3,000 தாண்டும் போது வரி ஏய்ப்புக்கான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூட விதிக்க வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு 2013-14 ம் நிதி ஆண்டுக்கு வரி கணக்கு பரிசீலனை ஆண்டு 2014-15. வரி கணக்கு கெடுதேதி மார்ச் 31, 2105 ஆகும். இதனை தாண்டி வரி பாக்கி, அபராத வட்டியுடன் ரூ.3,000 தாண்டும் போது வரி ஏய்ப்புக்கான அபராதம் அல்லது ஜெயில் தண்டனை கூட விதிக்கப்படலாம். அல்லது அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை  இரண்டும் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்புடைய வருமான வரி அதிகாரியை சார்ந்துள்ளது.  
 
 
4. நான் குடும்பத் தலைவி. பகுதி நேரமாக வீட்டில் இருந்தபடியே அவ்வவ்போது பங்குகளை வாங்கி விற்று வருகிறேன். கடந்த ஆண்டில் அந்த வகையில் ரூ. 2 லட்சம் லாபம் கிடைத்திருக்கிறது. எனக்கு வேறு வருமானம் கிடையாது. நான் வருமான வரி கட்ட வேண்டுமா?
 
உங்களுக்கு வேறு வருமானம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், நீங்கள் வருமான வரி கட்டத் தேவை இல்லை. கூடவே வரி கணக்கும் தாக்கல் செய்ய தேவை இல்லை. அதேநேரத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. பங்கு முதலீட்டுக்கு பயன்படுத்திய தொகை அவரின் சொந்தப் பணமாக இருக்க வேண்டும். இந்தப் பணத்தை அவரின் கணவர் அன்பளிப்பாக கொடுத்திருந்தால், இந்த வருமானம் கணவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அவர் வருமான வரி கட்ட வேண்டும். 
 
5.நேஷனல் பென்ஷன் ஸ்கீம் முதலீட்டில் கடைசியாக கிடைக்கும் தொகை மற்றும் பென்சன் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா?
 
நேஷனல் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தில் முதலீடு செய்யும்  தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த கணக்கை முடிக்கும் போது அதிலிருந்து பெறப்படும் தொகைக்கும் அல்லது பென்ஷன் பெறும் போதும் அந்த பென்சன் தொகை மீதும் வரி விதிக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு ஏதாவது நேர்ந்து நாமினி அந்தப் பணத்தை பெற்றால் அதன் மீதும் வரி விதிக்கப்படும். 
 
6. நான் வீட்டுக் கடன் மூலம் வீடு ஒன்று வாங்கினேன். இந்த வீட்டை இரண்டு ஆண்டுகள் கழித்து விற்று வீட்டுக் கடனை அடைத்துவிட்டேன். இரண்டு ஆண்டுகள் நான் பெற்ற வரிச் சலுகையை அரசுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிறான் என் நண்பன். அது சரியா? விளக்கம் தேவை?
 
இரண்டு ஆண்டுகளில் பெற்ற வரிச் சலுகையை திரும்ப அளிக்கத் தேவை இல்லை. அதேநேரத்தில், வீட்டை விற்கும் விலை வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் குறுகிய கால மூலதன வரி கட்ட வேண்டி வரும். 

7.  என் அம்மாவின் பெயரில் கடந்த 6 ஆண்டுகளாக இரண்டு மியுச்சுவல் ஃபண்டுகளில் (இரண்டுமே ஈக்விட்டி ஃபண்டுகள்) நான் சம்பாதித்த பணத்தில் முதலீடு செய்திருந்தேன். அதன் மதிப்பு தற்போது 5 லட்சம் ரூபாய். என் அம்மா கடந்த 2015 ஜனவரி மாதம் காலமாகிவிட்டார்கள். இந்த 5 லட்சம் மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்டு எனக்கு உயில் மூலம் கிடைத்திருக்கிறது. என் ஆண்டு வருமானம் 4.8 லட்சம் ரூபாய். தற்போது என் வயது 35.  இப்போது எனக்கு  வருமான வரி  எப்படி கணக்கிடப்படும்.?
 
இவருடைய சம்பாத்தியத்திலிருந்து அம்மாவின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும், அந்தத் தொகை இவர் அம்மாவுக்கு அளித்த நன்கொடையாக கருதப்பட்டு, அம்மாவின் சொத்தாகிவிடும். அந்தத் தொகை அம்மாவின் உயில் மூலம், இவருக்கு கிடைக்கும்போது, அதற்கு எந்த வரியும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால், அந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை இவர் விற்று, அதன் மூலம் குறுகிய கால மூலதன ஆதாயம் கிடைத்தால் அதன் மீது வரி விதிக்கப்படும்.   

8. நான் என்ஆர்இ வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் எத்தகைய வரி கட்ட வேண்டி இருக்கும்? இந்தியாவில் வரி கணக்கு தாக்கல் செய்யாமல் எந்த விதமான முதலீடுகளை செய்யலாம்?
 
உங்களுக்கு என்ஆர்இ கணக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஒரு என்ஆர்ஐ. என்ஆர்இ வங்கி கணக்கு மூலம் வரும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வருமானம் தவிர, இந்தியாவில் வீட்டு வாடகை, என்.ஆர்.ஓ டெபாசிட் வட்டி போன்ற வருமானம் வந்தால், அதற்கு வரி கட்ட வேண்டி இருக்கும். மேலும், இந்த வரி கட்டிய விவரத்தை இந்தியாவில் தாக்கல் செய்ய வேண்டும். 
கீழ்க்கண்ட முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ளும்பட்சத்தில் அதன் வட்டிக்கு / வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்பதோடு வரி கணக்கும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.    
 * வங்கிகளின் என்ஆர்இ ஃபிக்ஸட் டெபாசிட்கள்
* வங்கிகளின் எஃப்சிஎன்ஆர்  ஃபிக்ஸட் டெபாசிட்கள்
* ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (ஓராண்டுக்கு மேல் யூனிட்களை விற்றால்)
* டிவிடெண்ட் ஆப்ஷனில் கீழ் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகள்
* இந்தியாவுக்குள் தனக்கு அல்லது குடும்ப உறுப்பினர்கள் வசிப்பதற்கான வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு
* அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளில் முதலீடு
கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலோ அல்லது வீடு அல்லது வீட்டு மனைகளையோ விற்று மூலதன ஆதாய வருமானம் வந்தால், அந்த வருடம் வரி கட்டுவதுடன், வருமான வரிக் கணக்கும் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். 
 
9. எனக்கு டீமேட் கணக்கு இருக்கிறது. பான் கார்டு இருக்கிறது. இரு வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறேன். நான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
பதில்: நீங்கள் டீமேட்  கணக்கு வைத்திருப்பதாலோ அல்லது பான் கார்டு வைத்திருப்பதாலோ வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவசியம் இல்லை. அந்த டீமேட் கணக்கில் உள்ள முதலீடுகளை  விற்று மூலதன ஆதாயம் கிடைத்து அது அடிப்படை வருமான வரி வரம்புக்கு அதிகமாக இருந்தால் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு விற்ற முதலீடுகள் நிறுவனப் பங்குகள் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளாக இருந்து நீண்ட கால மூலதன ஆதாயம் வந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவை இல்லை. ஆனால், ஒரு நிதி ஆண்டில் அதிகத் தொகையை அந்த டீமேட் கணக்கின் மூலம் முதலீடு செய்தால் (உதாரணமாக ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக) சில தருணங்களில் வரி கணக்கு தாக்கல் செய்யும்படி வருமான வரி அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வரக் கூடும்.  
 
10 .
பான் கார்டு தொலைந்து விட்டது. அந்த எண் நினைவில் இல்லை. என்ன செய்வது?
முதலில் நீங்கள் https://incometaxindiaefiling.gov.in/ என்கிற இணைய தளத்துக்குள் செல்ல வேண்டும். ஸ்கிரீனின் இடது பக்கத்தில் Know your PAN என்று தோன்றும். அங்கு க்ளிக் செய்தால் உங்களின் பிறந்த தேதியை பூர்த்தி செய்ய சொல்லும். அந்த விவரத்தை கொடுத்தால் உங்களின் பெயரை நிரப்ப சொல்வார்கள். நீங்கள் கொடுத்த இரு விவரங்களும் வருமான வரித் துறையில் இருக்கும் விவரங்களுடன் ஒத்திருந்தால், உங்கள் பான் நம்பர் திரையில் தெரியும்.
அவ்வாறு தெரிந்தால் அதனை வைத்து, பழைய பான் எண்ணிலே  டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

11. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் வழங்கப்படும் போனஸ் யூனிட்களை விற்கும் போது, மூலதன ஆதாயம் எப்படி கணக்கிடப்படும்?

பதில்: அந்த போனஸ் யூனிட்கள் உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து 36 மாதங்களுக்குள் விற்றால், அதன்  மூலமான லாபம்  குறுகிய கால மூலதன ஆதாயமாக கொள்ளப்படும். 
36 மாதங்களுக்கு பிறகு விற்றால், அதன் மூலமான லாபம் நீண்ட கால மூலதன ஆதாயமாக கொள்ளப்படும். இந்த யூனிட்கள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதால் இவற்றை விற்று வரும் மொத்த தொகையும் மூலதன ஆதாயமாக கொள்ளப்படும். 
தவிர, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 20.6% வரி விதிக்கப்படும். குறுகிய கால மூலதன ஆதாயம், உங்களின் இதர வருமானத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டு, மொத்த வருமானத்தின் அடிப்படை வருமான வரி விகிதத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். 
 
12. நான் ஒரு என்ஆர்ஐ. என் மனைவி இல்லதரசி. அவர்கள் பெயரில் நிறுவனப் பங்குகளையும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் டீமேட் கணக்கு மூலம் வாங்கி விற்று வருகிறார். இதற்கு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
 
உங்கள் கேள்வியில் மனைவி என்ஆர்ஐ -யா இல்லையா? என்பது தெரியவில்லை. என்ஆர்ஐ என்று வைத்துக் கொண்டால், பங்குகளை வாங்கி விற்பதால் குறுகிய கால மூலதன ஆதாயம் வந்தால் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயம் மட்டும் ஒரு நிதி ஆண்டில் வந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அவ்வாறு வாங்கி விற்கும் தொகை, அதிகமாக இருந்தால் சில தருணங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரலாம். 

13 நான் ஒரு என்ஆர்இ வங்கி கணக்கு வைத்துள்ளேன். அதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். நான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

நீங்கள் முதலீடு மட்டுமே செய்து கொண்டு, எந்தப் பங்கு அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை விற்கவில்லை என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். 
 பங்கு அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை  விற்று குறுகிய கால மூலதன ஆதாயம் கிடைத்தால் வருமான வரி செலுத்தி, வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை விற்று நீண்ட கால மூலதன ஆதாயம் வந்தாலும் வரி செலுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். தவிர, ஒரு வருடத்தில் முதலீடு மட்டுமே செய்திருந்தாலும் அவ்வாறு முதலீடு செய்த தொகை ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும் போது, சில தருணங்களில் வரி கணக்கு ஏன் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறையிடமிருந்து வரலாம். அப்போது அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும். 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ