Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணையதளங்களை மூடும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்!ஆப்ஸுக்கு மாறுமா ஆன்லைன் வர்த்தகம்!

ஒரு விஷயத்துக்கு ஒருவரை பழக்கப்படுத்திவிட்டால் அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது என்பதைதான் இன்றைய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மையமாக கொண்டு செயல்படுகின்றன. ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் கடைகளுக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கிப் பொருட்களை வாங்கியவர்களை ஒரே கடையில் பொருட்களை வாங்க பழக்கப்படுத்தின சூப்பர் மார்க்கெட்டுகள். பின்னர் நீங்கள் ஆர்டர் செய்தால் போதும்; உங்கள் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்துவிடுவோம். பொருளை வாங்கியவுடன் பணம் தந்தால் போதும் என்ற அளவுக்கு இறங்கி வந்தன இ-காமர்ஸ் நிறுவனங்கள். அதோடு சராசரியாக 40 முதல் 60 சதவிகிதம் வரை ஆஃபர்களை அள்ளி வழங்கின. மக்களும் ஆஃபர்களுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவித்தனர்.

 
பிக் பில்லியன் டே, ஆப்ஸ் டே என பல சிறப்பு ஆஃபர்களில் மக்களை கவரவும் செய்தன சில இ-காமர்ஸ் நிறுவனங்கள். இப்போது உள்ள நிலையில் நீங்கள் வாங்கும் காலணிகள் துவங்கி விலை உயர்ந்த கணினிகள் வரை விரல்நுனியில் வாங்கப் பழகிவிட்டனர் மக்கள்.இந்த நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய உத்தியை கையாள துவங்கியுள்ளன. அதாவது, தனது இணையதளத்தை மூடிவிட்டு, புதிய ஆப்ஸ்களை அறிமுகம் செய்யத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில்தான் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ராவின் இணையதளம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தனது இணையதளத்தை மூடவுள்ளதாக கூறியுள்ளது.
 
உலக அளவில் 4வது மிகப் பெரிய ஷாப்பிங் இணையதளமாக உள்ள ஃப்ளிப்கார்ட்டுக்கு 4 கோடிக்கும் அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மொபைல் ஆப்ஸ் வழியாக இதுவரை 20-கோடிக்கும் அதிகமான பொருட்களை 30 ஆயிரம் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். இதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் ஊடுருவியதே.
 
இந்தியாவில் மட்டும் 24 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஃப்ளிப்கார்ட்டை கணினி திரைகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட செல்போன் ஆப்ஸ்களில் பார்ப்பவர்களே அதிகம்.

இதனால் ஷாப்பிங் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது. இந்த சவாலை சமாளிக்க மொபைல் ஆப்ஸ் வழியாக பிரத்யேக பிளாட்பார்மில் இனி வர்த்தகத்தை வழங்க முடிவு எடுத்துள்ளது. இதனால் இணையதளங்களை மூடிவருகின்றன சில இ-காமர்ஸ் நிறுவனங்கள். 

ஏன் இந்த முடிவு?

இந்தியாவில் 300 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் வளர்ச்சி வரும் வருடங்களில் அதிகரித்து 2020-ம் ஆண்டுக்குள் 650 மில்லியன் என்ற அளவை எட்டும். அப்படி எட்டும்போது இணையதளங்களில் பொருட்களை வாங்கக்கூடிய அனைவருமே ஆன்லைன் வர்த்தகத்தை ஆப்ஸ் மூலமாக செய்ய பழகி இருப்பார்கள். அதனால் இந்தத் திட்டம் அப்போது பயனளிக்கும் என்ற நோக்கில் செயல்படுகின்றன.

அனைவரும் ஆப்ஸ் பயன்படுத்துவார்களா?

இந்த நிறுவனங்கள் ஆப்ஸ் கொண்டு வருகிறார்களே, இது அனைவருக்கும் சென்று சேருமா, இல்லையா என்ற கேள்வி சிலருக்கு உள்ளது. ஆனால், அதற்காக சில புதிய  உத்திகளைக் கையாண்டுள்ளன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். ஏற்கெனவே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து ஆஃபர்களை வழங்கி மக்களை பயன்படுத்த பழக்கியுள்ளன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். இதனால் அனைவரும் எளிதாக ஆப்ஸ்ஸை பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள்.

மக்களை பாதிக்குமா?

மக்களை பொறுத்தவரை, பெரிய லாபம் என்று எதுவும் இல்லை, ஏற்கெனவே கணினியில் செய்த அதே வேலையைத்தான் இனி செல்போனில் செய்ய போகிறார்கள். ஆனால், முன்பு எப்போதாவது ஆன்லைன் பர்சேஸ் செய்தவர்கள் இனி அடிக்கடி செய்ய வாய்ப்புள்ளது. 2ஜி சேவையிலும் செயல்படுமாறு ஆப்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளதால், குறைந்த வேகத்திலும் பர்சேஸ் செய்யலாம். இந்த நிறுவனங்கள் நோட்டிஃபிகேஷன்கள் மூலம் எண்ணற்ற அறிவிப்புகளை அளிக்கும் அதில் எதாவது ஒருகணத்தில் இம்பல்சிவாக தேவையற்ற பொருளை வாங்க நேரிடும். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ்கள் கட்டணமாகும்போது மக்கள் அவதிக்குள்ளாக வாய்ப்புண்டு.
 

நிறுவனங்களுக்கு லாபமா?
 

நிறுவனங்களுக்கு இதன் மூலம் தினசரி பொருட்களை வாங்கும் விகிதம் அதிகரிக்கும். அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். சில நாட்களுக்கு பிறகு ஆப்ஸை வைத்திருக்க கட்டணம் என்று விதித்துவிட்டால், அனைத்து வாடிக்கையாளரும் 20 ரூபாய் செலுத்தினாலே கோடிக் கணக்கில் வருமானம் பார்க்க முடியும் இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். இது தவிர,  ஆப்ஸ் நோட்டிஃபிகேஷனில் இம்பல்சிவ் பர்சேஸை அதிகரித்து வருமானம் பார்ப்பதால், இது ஆப்ஸ் நிறுவனகளுக்கு லாபகரமான ஒன்றாகவே உள்ளது.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

 

தொழில்நுட்ப மாறுதலுக்கு ஏற்றவாறு உங்களை அப்டேட் செய்துகொள்வது நல்ல விஷயம்தான். அப்படி மாறும்போது ஆப்ஸ் பர்சேஸ் செய்யலாம். ஆனால், நோட்டிஃபிகேஷனை பார்த்து தேவையற்ற பொருளை வாங்குவது அல்லது சமூக வலைதளங்கள் போல தினமும் இந்த ஆப்ஸ் தளங்களில் இயங்குவது போன்ற செயல்களை தவிர்த்தாலே உங்கள் தேவையற்ற செலவு குறையும்.

திரையில் இருந்த பொருட்கள் இப்போது விரல்நுனிக்கு வந்துவிட்டன. இன்னும் இந்த நிறுவனங்கள் சிந்தித்தால் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் தனித்தனியாக கடைகள் திறக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ