Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாசிட்டிவ், நெகட்டிவ்: உங்கள் ஆட்டிட்யூட் எப்படி?

நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் 'தி டாப் பர்ஃபார்மர்’ஸ் கைடு டு ஆட்டிட்யூட்’ என்னும் டிம் உர்ஸினி, கேரி டிமோஸ் மற்றும் மார்க் ஏ.யாபன் என்ற மூவர் சேர்ந்து எழுதியது. நம் ஆட்டிட்யூடை மாற்றிக்கொள்வதன் மூலம் நாம் நம்முடைய பணியிடத்தில் எப்படி முன்னேறலாம் என்று சொல்லும் புத்தகம் இது.

தன்னுறுதியே (பாசிட்டிவிட்டி) உலகை வெல்லத் தேவையான அடிப்படை மந்திரம். இந்தத் தன்னுறுதியையும் மனப்பாங்கையும் (ஆட்டிட்யூட்) செப்பனிட்டு சீர்செய்து வெற்றி பெறுவது எப்படி என்பதைச் சொல்லித்தருவதே இந்தப் புத்தகத்தின் பணி என்கிறார்கள் ஆசிரியர்கள்.

ஆட்டிட்யூட் என்றால் என்ன என்று சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள். விற்பனை பிரதிநிதிகளுக்கான ஒருபயிற்சி வகுப்பின் இறுதியில் வகுப்புகள் எப்படி அவர்களுடைய வேலைக்கு உதவிகரமாக இருந்தது என்று பயின்றவர் களிடம் கேட்டபோது, பலரும் பல விஷயங்களைச் சொன்னார்களாம். இறுதியில் ஒருவர், 'என் வேலையை மொத்தமாக நான் கரைத்துக் குடித்துவிட்டேன். இந்தமாதிரி பயிற்சி வகுப்புகளெல்லாம் எந்த விதத்திலும் எனக்கு பிரயோஜனமில்லை’ என்றாராம். அட, திறமையான ஆளா இருப்பாரு போலிருக்கே என்று நினைத்து அவருடைய பாஸிடம் பேசினால் அவரோ, 'அவன் நல்ல சேல்ஸ்மேன்தான். ஆனால், அவன் நல்ல என்ற இடத்திலேயே இருக்கிறான். தலைசிறந்த சேல்ஸ்மேனாகக் கூடிய அருகதை அவனுக்கு இல்லை. ஏனென்றால், அவன் ஆட்டிட்யூட் சரியில்லை. கொடுத்த டார்கெட்டுக்கு வித்துத்தொலைச்சுடறான். அதனால அவனை வேலையை விட்டு அனுப்பாம விட்டுவச்சிருக்கேன்’ என்றாராம். இப்படி வேலைக்கான திறமையைத் தன்வசம் வைத்திருப்பவர்கள்கூட முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஆட்டிட்யூட் குறைபாட்டினால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆட்டிட்யூட் என்பது நீங்கள் உங்களை எப்படி எடுத்துச் செல்கிறீர்கள்; நீங்கள் மற்றவர்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்;  நீங்கள் உலகத்தை உங்களுடன் எப்படி அவ்வப்போது ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள் என்கிற  மூன்று வகை விஷயங்களை நன்றாகப் புரிந்துகொண்டால்தான் ஆட்டிட்யூடை வெற்றிகரமாகக் கையாள முடியும்.

ஆட்டிட்யூடில் அப்படி என்ன இருக்கிறது?, அது எவற்றால் ஆனது? ஆட்டிட்யூட் என்பது மூளை, மனது மற்றும் உடல் என்ற மூன்றின் கலவையைக் கொண்டது. மனத்தின் நினைப்பு மூளைக்குள் சென்று உடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. எகத்தாளமான பார்வை, உடல் மொழி யெல்லாம் வேறெங்கிருந்து வருகிறது? மனத்திலிருந்து மூளைக்குச் சென்று உடல்வழியாக வெளிப்படுகிறதுதானே என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பாசிட்டிவ் மனப்பாங்கு எப்படி முன்னேற்றும் என்பதை மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ள ஆசிரியர்கள், ஒரு காரியத்தைச் செய்ய முயலும்போது கற்பனைத் தடங்கல்கள் எக்கச்சக்கமாக இருக்கும். ஆனால், நிஜத் தடங்கல்களோ எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும். பாசிட்டிவ் ஆட்டிட்யூட் உள்ள நபரோ காரியத்தைச் செய்ய முயல்வார். தடங்கல்கள் குறைவாக இருப்பதால் எளிதில் காரியத்தை முடித்தும்விடுவார். நெகட்டிவ் ஆட்டிட்யூட் நபரோ கற்பனைத் தடங்கல்களைக் கண்டு பயந்து காரியத்தை ஆரம்பிக்கவே மாட்டார் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை மகிழ்ச்சிகரமான மற்றும் துக்ககரமான விஷயங்களை எதிர்கொள்கிறான் என்பது அவன் கொண்டுள்ள ஆட்டிட்யூடை  வைத்தே நிர்ணயமாகிறது என்கின்றன ஆய்வுகள். தனிமனித வெற்றி மட்டும் ஆட்டிட்யூடால் பாதிப்படைவதில்லை, குழுவின் வெற்றியுமே ஆட்டிட்யூடால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு மட்டரகமான ஆட்டிட்யூட் = மோசமான டீம்.

நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு சுமார் ஆட்டிட்யூட் = ஆவரேஜ் டீம்.

நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு ஆவரேஜ் ஆட்டிட்யூட் = நல்ல டீம்.

நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு சூப்பர் ஆட்டிட்யூட் = சூப்பரான டீம் என்ற ஃபார்முலாவையும் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.

திறமையானவர்கள்கூட சில சமயம் கஷ்டப்படுவதற்கு காரணம் ஆட்டிட்யூட்தான். திடீரென அவர்கள் திக்கற்றவர் களாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுவதுதான் குழப்பத்தின் ஆரம்பம். மாறாக, அவர்கள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஆட்டிட்யூடுக்கு  மாறிய மறுநிமிடமே அவர்களுடைய செயல்பாட்டில் மாறுதல்களைக் காணலாம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆட்டிட்யூடை மாற்றிக்கொள்ள கொஞ்சம் எண்ணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்கின்றனர். ஒரு தவறு செய்கிறீர்கள். நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்று நினைப்பது குற்ற உணர்ச்சி. இந்தத் தப்பை பண்ணிய நானெல்லாம் ஒரு மனுச ஜென்மமா என்று நினைப்பது தன்னிரக்கம். இதை நான் சரி பண்ணிக்கொள்வேன் என்று நினைப்பது மீண்டுவருவதற்கான பற்றுகோல். இதில் சராசரி மனிதனுக்கு எது உதவும்? இறுதியாகச் சொன்னதுதானே  புதியதொரு எதிர்காலத்தை உருவாக்க வழிவகை செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இறுதி அத்தியாயத்தில் நல்ல ஆட்டிட்யூடை வளர்த்துக் கொள்வது எப்படி என்று விளக்கமாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், நல்ல ஆட்டிட்யூடைக் கொண்ட ஒரு நிஜ மனிதரைப் பற்றியும் விவரித்துள்ளார்கள். ஜெர்ரி எனும் ரெஸ்டாரன்ட் மேனேஜர், தனது வேலையைவிட்டு இன்னொரு ஹோட்டலுக்குப் போனால், அவரோடு வேலை பார்த்த பலரும் அவருடனே போய்விடுவார்களாம். இதைக் கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்தனர் ஆசிரியர்கள். 'நீங்கள் எப்படி எப்போதும் நல்ல ஆட்டிட்யூடுடன் இருக்கிறீர்கள்’ என்று கேட்டனர். 'காலையில் எழுந்தவுடன் நான் என்னிடம் ஒரே கேள்வி கேட்டுக்கொள்வேன். என் முன்னால் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. நல்லது, கெட்டது. நான் எதை எடுக்கவேண்டும். நல்லதைத்தானே? அதனால் நல்ல ஆட்டிட்யூடை நான் எடுக்கிறேன்’ என்றாராம்.

நீண்டநாள் கழித்து ஒருநாள் அவர் வேலை பார்த்த ரெஸ்டாரன்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடக்க, அதில் அவருக்கும் குண்டுகாயம் ஏற்பட்டது. 18 மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் பிழைத்த அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து,  'குண்டு காயத்திலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'என் முன்னால் இப்பவும் இரண்டு சாய்ஸ்தான் இருந்தது. வாழ்வதா, செத்துப்போவதா என்பதுதான். நான் வாழ்வது என்ற சாய்ஸை எடுத்தேன்’ என்றாராம்.

இறுதியாக, 'ஆட்டிட்யூட் பற்றி படித்தீர்கள். படித்தால் மட்டும் போதாது. அன்றாடம் ஒவ்வொரு நிமிடமும் இதன்படி நடக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கலை உங்களுக்கு வரவே வராது’ என்கின்றனர் ஆசிரியர்கள். முன்னேற விரும்பும் அனைவரும் படித்தேயாக வேண்டிய  புத்தகம் இது.

 - நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் 
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ