Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிமனித ஆளுமையை வளர்க்கும் வழிகள்!

நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் தனிமனித ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிச் சொல்லும் ‘பவர் க்யூஸ்’ என்னும் புத்தகத்தைத்தான். நிக் மோர்கன் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் உடல்மொழி மற்றும் குறிப்பறிதல் என்ற இரண்டு விஷயங்களின் முக்கியத் துவத்தை விளக்குவதாக இருக்கிறது. முதலில் இந்தப் புத்தகத்தை எழுது வதற்கான காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர்.

தனது சிறுவயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான் இந்தப் புத்தகம் எழுதக் காரணம் என்கிறார் ஆசிரியர். அது என்ன சம்பவம்?

சிறுவயதில் ஒரு விளையாட்டின் போது மண்டையோடு உடையும் அளவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை  செய்து கொண்டபோது ஒரு பதினைந்து நிமிட நேரம் இறந்துபோனதற்கு ஒப்பான நிலைக்குச் சென்று மீண்டாராம் ஆசிரியர். இறந்துபோய் விட்டாரே என டாக்டர்களே நினைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் உயிர் திரும்பி, ‘நான் எங்கே இருக்கிறேன் என்ற டயலாக்கை உதிர்த்தேன்’ என்கிறார் ஆசிரியர்.

‘‘ஆனால் பிழைத்து வந்தேனே தவிர, கொஞ்ச நாட்களாக மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. கோபமாகப் பேசினாலும் ஜாலியாகப் பேசினாலும் பேசுவது காதில் விழுந்ததே தவிர, என்ன மாதிரியான மூடில் எதிரில் இருப்பவர் இருக்கிறார் என்பது என் மூளைக்குக் கொஞ்சநாட்கள் புரியவேயில்லை. அதைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட என் மூளையின் ஒரு பகுதி ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அதாவது, கண்ணில் தெரியும் எதிரேயிருக்கும் நபரின் எமோஷன் எதுவுமே எனக்குப் புரியாது. நாள்பட்ட ட்ரீட்மென்ட்டில் மீண்டும் மூளையின் அந்தப் பகுதி ஸ்விட்ச் ஆன் ஆனது. இந்த மூன்றும்தான் உடல்மொழி பற்றி என்னைத் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைத்தது. அதனாலேயே மனிதர்கள் எப்படி சொல் மற்றும் உடல்மொழி மூலம் பேச முயல்கிறார்கள் என்ற ஆய்வில் இறங்கி இந்தப் புத்தகத்தை எழுதினேன்’’ என்கிறார் ஆசிரியர்.

நம் மூளை, உணர்வுடன் (கான்ஷியஸ்) முடிவெடுக்கும் நிலையில் ஒரு நொடிக்கு 40 பிட் தகவல்களைக் கையாளும் வல்லமையுள்ளது. இது ஒரு சாதாரணத் தகவல்தானே என்கிறீர்களா?  சாதாரண தகவல்தான், அடுத்தத் தகவலைப் படிக்கும்வரை நம் மூளை உணர்வு அல்லாத முடிவெடுக்கும் நிலையில் (அன்கான்ஷியஸ்) ஒரு நொடிக்கு 11 மில்லியன் பிட் தகவல்களைக் கையாளும் வல்லமையுள்ளது. இதனாலேயே பெரும்பான்மையான முடிவெடுக்கும் வேலைகள்  ‘அன்கான்ஷியஸ்’ பகுதிக்குத் தள்ளப்படுகிறது என்கிறார் ஆசிரியர்.

பெரும்பான்மையான விஷயங்களை இந்தப் பகுதியே முடிவு செய்கிறது எனில், உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களுடைய ‘அன்கான்ஷியஸ்’ மூளையுடன் தகவல் பரிமாற்றம் செய்ய உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் நினைத்த விஷயங்களை உடனுக்குடன் சொல்லவும், காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும் முடியும் என்கிறார் ஆசிரியர். ‘அன்கான்ஷியஸ்’ மூளை பார்ப்பது உடல்மொழியை முடிவெடுப்பதும் அதை வைத்தே என்று சொல்லும் ஆசிரியர், அந்த முடிவுகளை மற்றவர்களின் மூளை நமக்கு சாதகமாக எடுப்பதற்கு ஏழு விதமான விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

இதில் முதல் விஷயமாக ஆசிரியர் சொல்வது, நீங்கள் ஒரு அறையினுள் நுழையும்போது எந்த விதத்தில் நுழைகிறீர்கள் என்பதைப் பற்றி. இன்டர்வியூ, மீட்டிங், பிரசன்டேஷன் என எந்த இடத்திலும் உள்ளே நுழையும் போதே உங்கள் முத்திரை பதியப்பட வேண்டும் என்கிறார். நீங்கள் எப்படிப்பட்ட பெர்சனாலிட்டி, எல்லோருக்கும் நண்பரா, சிரித்துப் பழகுபவரா, மற்றவர்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள், பயத்துடனா, இல்லை நம்பிக்கையுடனா, தவிர்க்கும் நோக்கத்துடனா, அவர்களிடம் நீங்கள் என்ன இம்ப்ரஷனை ஏற்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதானே இது நடக்கிறது. அதனாலேயேதான் மற்றவர்களைக் கவர்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது, உங்களுடைய உடல்மொழி தான் பிரதானம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

இரண்டாவதாக, உங்கள் உடல் மொழியை உங்கள் கன்ட்ரோலுக்குள் கொண்டுவந்துவிடுங்கள். முக்கியமான தருணங்களில் உங்கள் உடல்மொழி எப்படி இருக்கிறது, மீட்டிங்குகள், பேச்சு, பிரசன்டேஷன் போன்ற இடங்களில் உடல்மொழியில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களுடைய எமோஷன் எப்படியிருக்கும் என்பதில் எந்த அளவுக்கு உங்களுக்கு கன்ட்ரோல் இருக்கிறதோ, அந்த அளவுக்கே உங்களுடைய ஆளுமையின் அதிகரிப்பு இருக்கிறது என்கிறார். நம்முடைய உடல்மொழியே நம்முடைய எண்ணத்தை வெளிப்படுத்துவதாய் இதுபோன்ற தருணங்களில் இருக்கிறது என்கிறார் ஆசிரியர். எமோஷனும், உடல்மொழியும் நம்முடைய கன்ட்ரோலுக்கு வருவதற்கு நாளாகும். அதுவரையிலும் சில சமயம் நடித்துதான் ஆகவேண்டியிருக்கும் என்றும் ஒப்புக்் கொள்கிறார் ஆசிரியர்.

மூன்றாவதாக, அடுத்தவர்கள் உடல்மொழியைப் புரிந்து அவர்களுடைய மனநிலையை எடைபோடப் பழகுவதுதான். அடுத்தவர்களுடைய உடல்மொழி மூலம் அவர் உங்களைப் பற்றியும் உங்களுக்கு என்ன செய்ய நினைக்கிறார் என்று புரிந்துகொள்வதும்தான் அடுத்த ஸ்டேஜ் என்று சொல்கிறார் ஆசிரியர்.

நான்காவதாக, ஆசிரியர் சொல்வது குரல் வளத்தைக் கையாள்வது குறித்து. நம் குரல் நம் தலைமைப் பண்பை காண்பிப்பதாகத் திகழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். என்ன உங்கள் வாய்ஸ் லீடர்ஷிப் வாய்ஸாக இருக்கிறதா என்று கிண்டலடிக்கின்றார் ஆசிரியர்.

ஐந்தாவதாக, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, எப்படி குரலையும் உடல் மொழியையும் ஒன்றிணைத்து செயலாற்றுவது என்பதை. குரலும் உடல்மொழியும் ஒன்றாய் இழையும் போது மீட்டிங்கோ, சேல்ஸ்காலோ எங்கே போனாலும் வெற்றி உங்கள் வாசலைத் தேடிவரும் என்கின்றார்.

ஆறாவதாக, நம் அன்கான்ஷியஸ் மூளையை நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுப்பதற்கு உபயோகப்படுத்தப் பழகிக்கொள்வது. உங்கள் கான்ஷியஸ் மூளை எப்படி உங்கள் பாதையில் முட்டுக்கட்டை களைப் போடுகிறது என்று புரிந்துகொண்டு அன்கான்ஷியஸ் மூளைக்கு முடிவெடுக்கும் பொறுப்பை மாற்றிக்கொடுக்கப் பழகிக்கொள்வது என்கிறார் ஆசிரியர்.

ஏழாவதாக, ஒரு பெரிய கதை சொல்லும் நிபுணராக மாறுவது என்று சொல்லும் ஆசிரியர், உங்கள் மூளையில் உருவாகும் அலைகளை உடல்மொழி மூலம் மற்றவர்களுக்குப் புரியவைத்து உங்களுடைய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்று சொல்லும் ஆசிரியர், உங்களால் பவர்ஃபுல்லான கதைகளைச் சொல்ல முடியுமா? என்று கேட்கிறார். உணர்ச்சிப்பூர்வமாக கதை சொல்லும் திறமையே தலைமைப் பண்புக்கு அத்தியாவசியத் தேவை என்கின்றார் ஆசிரியர். யாருடைய பேச்சையும் கேட்க மறுத்து யூட்யூப் வீடியோக்களுக்கு அடிமையாய்த் திரியும் இந்த உலகில் தத்ரூபமாய்க் கதை சொல்லத் தெரிந்தவர்களே தலைமைப் பதவியைப் பிடிக்கத் தகுதியானவர்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

தனிமனித ஆளுமையை இன்னும் செழுமைப்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறையாவது வாசிப்பது நல்லது!

- நாணயம் டீம். 
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் 
வெப்சைட்களில்  விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்) 
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ