Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி மற்றும் நிதித்துறைகளில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

வங்கி மற்றும் நிதித்துறை சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நெஸ்டோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைனான்ஸ் கல்வி நிறுவனம் சென்னையில் கருத்தரங்கை நடத்தியது.  

மைன்ட் பிஸ் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் ட்ரெய்னிங் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.சுப்ரமணியன்  "நிதி மற்றும் வங்கித் துறை என்பது புராண காலத்திலிருந்தே இருக்கிறது. திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி பெருமாள், பத்மாவதியை திருமணம் செய்து கொள்ள குபேரனிடமிருந்து கடன் வாங்கினார். அதை இன்று வரை அடைத்துக் கொண்டிருக்கிறார். அன்றைய புராண காலங்களிலிருந்து இன்று வரை நிதி மற்றும் வங்கித் துறை எவ்வளவோ மாற்றமடைந்துவிட்டது. இருப்பினும் இதன் வளர்ச்சிக்கும், வாய்ப்புக்கும் எப்போதும் பஞ்சமில்லாமல் தான் இருந்திருக்கிறது.  தற்போது உலக அளவில் டாப் வங்கிச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஜிடிபி (purchasing power parity) சுமார் 6 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. இதில் வங்கித்துறை மட்டும் 1.31 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கிறது என்றால் வங்கி மற்றும் நிதித்துறையின் முக்கியத்துவத்தை நீங்களே புரிந்து கொள்ளலாம். 
 
உலகின் மக்கள் தொகையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பாதிக்கும் மேலான மக்கள் தொகையை ண்டிருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்தி, அனைவரின் வாழ்க்கையும் வளமாக்கிக் கொள்ளுங்கள்" என்று பேசி முடித்தார்.
 
அவரைத் தொடர்ந்து குருநானக் கல்லூரியின் இயக்குநர், டாக்டர் குனிதா அருண் சந்தோக் "வரும் 2020ல் இந்திய வங்கித் துறை உலகின் ஐந்தாவது பெரிய வங்கித் துறையாக உருவெடுக்க உள்ளது. (இப்போது எத்தனையாவது இடம்? சி.சரவணன்) அதோடு 2025ல் உலகின் மூன்றாவது பெரிய வங்கித் துறையாக உருவெடுக்கும் அளவுக்கு இனி வரும் காலங்களில் இதன் வளர்ச்சி இருக்கும் என கேபிஎம்ஜி மற்றும்சிஐஐ கணித்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு தகுந்தாற்போல அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 லட்சத்திற்க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் நிதி மற்றும் வங்கித் துறையில் உருவாக இருக்கிறது. 
 
இந்தியாவில் 26 பொதுத்துறை வங்கிகள், 20 தனியார் வங்கிகள், 43 வெளிநாட்டு வங்கிகள், 61 பிராந்திய கிராம வங்கிகள் மற்றும் 90,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன்  நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வங்கிகளுக்கு மட்டும் தோராயமாக 1,10,000க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கிகளில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் அ டுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கின்றனர். வங்கித் துறையில் மட்டும் இவ்வளவு கிளைகள் என்றால் இந்தியா முழுவதும் இருக்கின்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவைகளை கணக்கிட்டு பாருங்கள் எவ்வளவு வேலை வாய்ப்பு இருக்கிறது என்று புரிய வரும்.
 
கடந்த சில  ஆண்டுகளில் வங்கித் துறையின் வளர்ச்சி அதிக வளர்ச்சி பெற்ற துறைகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் வங்கி மற்றும் நிதித் துறையின் வளர்ச்சி 24% ஆக உயர்ந்திருக்கிறது. 
 
கல்வியாளர்களாக எங்களுடைய பெரிய சவாலே மாணவர்களை வேலைக்கு தகுந்தவர்களாக மாற்ற வேண்டியது தான். அதாவது  மாணவர்கள் படிப்பை முடித்த உடன் அப்படியே வேலைக்கு செல்வது "இண்டஸ்ட்ரி ரெடி" யாக மாற்ற வேண்டும். என்று பேசி முடித்தார். 
 
அவரைத் தொடர்ந்து பேசிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின், எம்பிஏ துறை பேராசிரியர் டாக்டர் வி.எம்.பொன்னையா " தற்போது நாம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள நாடாக இருக்கிறோம். இருப்பினும் வேலை தெரிந்த, வேலை செய்வதற்ககான திறமை அல்லது தகுதியுள்ள, ஸ்கில்டு லேபர் என்று அழைக்கப்படும் திறமையான ஆள்கள் நம் நாட்டில் குறைவாக இருக்கிறார்கள். இந்த திறமையான பணியாளர்களின் தேவை உலக அளவில் அதிகரித்து வந்தாலும், குறிப்பாக பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், வங்கி ஆகிய நிதித் துறைகளில் மிக அதிகமாக இருக்கிறது. காரணம் இந்த துறைகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே ஆள்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கும் போது, லேபர் டேர்ன் ஓவர் என்று சொல்லப்படும் அதிக பணியாளர்களின் மாறுதல்கள், இந்த துறையில் மிக அதிகமாக இருக்கிறது. ஒருவரை தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து ஒரு முழு பணியாளராக மாற்றுவதற்கு முன்பே ஏதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டு நிறுவனத்தை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் நிறுவனத்திற்கு நேரம் மற்றும் பணம் விரயம், அதோடு மாணவர்களுக்கு தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளும் பொன்னான காலம் விரையமாகிறது. 
 
இன்றையை தேதிக்கு பணம் கொடுப்பது, வாங்குவது போன்ற வேலைகளை எல்லாம் எந்திரங்களே மிகச் சிறப்பாக, பிழையில்லாமல் செய்யத் தொடங்கிவிட்டது. எனவே அதை தாண்டி ஒரு விஷயத்தை நாமே அனுமானித்து, சுயமாக சிந்தித்து முடிவு செய்யும் பணிகளை செய்யத் தான் நிதி மற்ரும் வங்கித் துறைகளில் மனிதவளம் தேவைப்படுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அப்படிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவில் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என்று கூறி முடித்தார்.
இவரைத் தொடர்ந்து அப்ஸோதேர்ம் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஐயப்பன் ராமமூர்த்தி " இந்தியாவில் என்ன இல்லை, பொருளாதார வளர்ச்சி இரண்டு இலக்கத்தை தொட இருக்கிறது, வங்கிக் கடன் அதிகரிப்பு, மத்திய ரிசர்வ் வங்கி குறைத்திருக்கும் வட்டி விகிதம், எக்கச்செக்கமாக இந்தியாவில் இருக்கும் பணப்புழக்கம், வெறித்தனமாக போட்டியிட்டுக் கொண்டு வழங்கப்படும் சேவைகள், அசுர வளர்ச்சியில் எட்டு கால் பாய்ச்சலில் முன்னேறும் டெக்னாலஜி, பல மடங்குகளாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிதி சார்ந்த நிறுவனங்களான வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை. என்று எல்லாம் கலந்த கலவையாக இந்தியாவே கலைகட்டுகிறது.  
 
எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கிறதோ அதே அளவுக்கு வாய்ப்புகள் பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தேதியில் இந்திய நிதி நிறுவனங்களை பயமுறுத்தும் வாராக் கடன்கள், அதிகரிக்கும் பண பரிவர்த்தனை கட்டணங்கள், தொழில்நுட்ப போட்டிகள், நாளுக்கு நாள் சேவைகளின் தரம் உயர்தல். என்று சவால்கள் உள்ளன. 
 
இப்படி இந்தியா போன்ற வளரும் நாடுகளில், என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் சந்தையில் இருக்கும் சவால்களை சந்திப்பவருக்குதான், வேலை கொடுப்பார்கள் நிறுவனங்கள். அதிலும் குறிப்பாக நிதி சேவைகள் வழங்கும் நிறுவனங்களில்ஐ.டி துறைக்கு இணையாக டார்கெட் வைத்து அதிக போட்டியில் முன்னேறுகிறது.   
 
 ஒரு காலத்தில் நம் இந்திய வங்கிகளுக்கு போட்டி என்பதே கிடையாது. ஆனால் தற்போது 43 வெளிநாட்டு வங்கிகள் நம் இந்தியாவில் உள்ள மொத்த இந்திய வங்கிகளுக்கும் சவால்விட்டு நிற்கிறது. இன்றைய சூழலில் யாருக்கு யார் போட்டி என்று சொல்லமுடியாத அளவுக்குச் சந்தை விரிந்து கிடக்கிறது. 
 
 இன்றைய தேதிக்கு நீங்கள் வேலை வாய்ப்பு சந்தையில் ஃபிட் ஆகவில்லை என்றால் உங்களை தூக்கி எறிந்துவிட்டு மற்றொருவரை பணிக்கு அமர்த்தும் சூழலும் அதிகரித்து வருகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் "மார்க்கெட் இஸ் மெர்சிலெஸ்" என்று  யதார்த்தை சொல்லி முடித்தார்.
 
 க்ரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் பேராசிரியர் நாராயணன் ஶ்ரீதர் " ரஜினியை தெரியுமா (அரங்கம் அதிர்கிறது). அவர் வயது 64, இன்று வரை கேமரா முன்பு வந்தால் 25 வயது கதாநாயகியோடு ரொமான்ஸ் சீன் நடிக்கிறார், வில்லன்களை புரட்டி எடுக்கிறார், தன் 100% உழைப்பை கொடுத்து நடிக்கிறர். அது தான் விஷயம். அதனால் தான் ரஜினி, இன்று வரை ரஜினியாக இருக்கிறார். அவரைப் போலத் தான் நாமும் இருக்க வேண்டும், நம் சொந்த விஷயங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் கறாராக என்ன செய்ய வேண்டுமோ அதை, குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும். 
 
இன்றைய தலைமுறையிடம் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து வேலையை கற்றுக் கோள்வது, திறமையை வளர்த்துக் கொள்வது என்பது குறைந்து வருகிறது. திறமையை வெளிப்படுத்தாதது, பொறுமை என்பது சுத்தமாக இல்லாதது போன்ற அடிப்படை மனநிலைகளை சரி செய்தாலே போதும், கற்க வேண்டியதை கற்றுக் கொள்ளலாம், பெற வேன்டியதை பெற்றுக் கொள்ளலாம்.  
 
இன்று இன்னொரு பெரிய சிக்கல் என்னவென்றால் கல்லூரிகள் வெறும் ஏட்டுச் சுரக்காய்களையே கொடுக்கின்றன. இந்த ஏட்டுச் சுரக்காயை கறிக்கு உதவுவது போல் மாற்றுவது தான் உங்கள் ஆரம்ப கால வேலை நாட்களில் நடக்கும். இந்தக் காலத்தில் சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரும், அவைகளை தைரியத்துடன் எதிர் கொண்டு முன்னேறுங்கள், வாழ்க்கை சொர்க்கமாகும். என்று வாழ்த்தி முடித்தார்.
 
அவருக்குப் பின் எம்.ஓ.பி வைஸ்னவா கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் டி.உத்திரா பேசினார் "  இன்றைக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள், வேலைக்கு எடுக்கப்படும் ஆட்கள் என்ன மாதிரியான திறமை உள்ளவர்களாக இருக்க வேண்டும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு வேலை செய்பவராக இருக்க வேண்டும், எந்த மாதியான கூடுதல் திறமை உள்ளவராக இருக்க வேண்டும், எந்த எந்த மொழிகள் தெரிந்திருக்க வேண்டும், என்ன என்ன சாஃப்ட்வேர்கள் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.... என்று தீர்மானித்து விட்டு தான் தேர்வையே நடத்துகிறார்கள்.   
 
இன்று ஒருவர் தன் தனித் தன்மையை அலுவலகத்தில் நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இருவர் செய்யும் வேலையை ஒருவர் செய்வதாகத் தான் குழுவே பிரிக்கப்படுகிறது. ஹார்ட்வோர்க் என்கிற பழைய காலம் போய், ஸ்மார்ட் வோர்க் என்கிற நவீன காலம் வந்துவிட்டது. இப்படி நீங்கள் ஸ்மார்ட் வொர்க்கராக இருக்க வேண்டுமென்றால் உங்களை நீங்களே பட்டை திட்டிக் கொள்ளுங்கள்.
 
நிதித்துறை சார்ந்த வேலைகள் கொட்டிக் கிடக்கின்ற இந்த தருணத்தில் சந்தை சம்பந்தப்பட்ட கோர்ஸ்களில் எதையாவது ஒன்றை உங்கள் பட்டப்படிப்போடு கூடுதலாக படியுங்கள், பல கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நேரடியாக நிறுவனத்தோடு பரஸ்பர உடன்படிக்கைகளை செய்து கொண்டு நிறுவனங்கள் அல்லது வேலைக்கு தகுந்தாற்போல மாணவர்களை தயார் செய்கிறார்கள்.
 
இது தான் என் வேலை என்று ஒதுங்க முடியாத சூழ்நிலை சந்தையில் உருவாகிவிட்டது, நான் ஹெச்ஆர் பிரிவில் பணி புரிகிறேன், நான் எதற்கு ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்காதீர்கள். கிடைக்கும் போதெல்லாம் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ளுங்கள், கற்றுக் கொண்டே இருங்கள், உங்கள் டிமாண்டை மார்க்கெட்டில் எப்போதும் இருக்கும் படி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். 
 
நிறைவாக எல்ஐசியின் முதுநிலை மேளாலர் டாக்டர் சி.வி.கோபால் இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி பேசினார். " உலக அளவில் அக்சுவரிகள் வெறும் 60 - 70 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் தான் ஒரு நிறுவனத்தின் பாலிசிகளை வடிவமைப்பவர்கள். இந்த வேலைக்கு நல்ல ஆழ்ந்த கணித அறிவு மற்றும் இன்ஷூரன்ஸ் துறையில் நல்ல தேர்ச்சி இருக்க வேன்டும். இந்த பணிக்கு நல்ல சமூக மரியாதை, மிக அதிக சம்பளம்  என்று பல வசதிகள் இருக்கின்றன.  இப்படி நிதி சார்ந்த நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகள் பல இருக்கின்றன. என்று கூறி முடித்தார்.
 
இதேல்லாம் ஓகே வங்கித் தேர்வுக்கு அப்ளிகேஷன் போட்டாச்சு தானே...... அப்ளிகேஷன் போட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு வேளை தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை. லட்சக்கணக்கில் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அந்த லட்சம் பேரில் நீங்களும் ஒருவராக இருக்க பாருங்களேன். 
 
மு.சா.கெளதமன்
 
படங்கள் : தி.ஹரிஹரன்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ