Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியல் எஸ்டேட் மசோதா நிறுத்தி வைப்பு

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த, ரியல் எஸ்டேட் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு  கொண்டு வந்தது. அந்த மசோதா, கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமானது. சொத்து வாங்குபவர்களுக்கு பாதகமானது என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


கடந்த ஏப்ரல் 29 ம்தேதி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, அந்த மசோதா தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய் கிழமை (நேற்று) டெல்லி மேல் சபையில், ரியல் எஸ்டேட் மசோதா, பரிசீலனைக்கும், நிறைவேற்றுவதற்கும் பட்டியலிடப்பட்டு இருந்தது.


ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அக்ரவால் பிரச்சினை எழுப்பினார். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, ரியல் எஸ்டேட் மசோதா கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி அளித்திருப்பதால், மசோதாவை இப்போது கொண்டுவரக்கூடாது என்று அவர் கூறினார்.


அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்தும் குரல் கொடுத்தார். மசோதாவை சபையின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் அதே கோரிக்கையை விடுத்தார்.


அதற்கு, மத்திய வீட்டுவசதித் துறை  அமைச்சர் மந்திரி வெங்கையா நாயுடு, ''அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை முடிவடையும்வரை, மசோதாவை எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். இப்போது ஆலோசனையை தொடங்கி விட்டேன். இடையில் விடுமுறைகள் வந்ததால், ஆலோசனை முடிவடையவில்லை. அது முடிவடையும் வரை, மசோதாவை எடுத்துக் கொள்ள மாட்டேன். தேர்வுக் குழுவுக்கு அனுப்பினாலும், அனுப்பாவிட்டாலும், இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள், இந்த மசோதாவை சபை பரிசீலிக்க வேண்டும்." என்றார். 


அப்போது  எதிர்க்கட்சி எம்பிக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே, அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘ஆலோசனை முடிவடையும்வரை, மசோதாவை எடுத்துக் கொள்ள மாட்டோம். மசோதா பட்டியலிடப்பட்டதற்காக, அதை ஏற்குமாறு வற்புறுத்த மாட்டோம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன். மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் யோசனையையும் கவனத்தில் கொள்வேன்’ என்று கூறினார்.
தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படுவதால், ரியல் எஸ்டேட் மசோதா, இப்போதைக்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ