Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி-பதில்!

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி நேரம் பகுதியில் தொழில் தொடர்பான உங்களது கேள்விகளுக்கு நிதி ஆலோசகர், கேப்பிடல் மார்க்கெட் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.சிவக்குமார் பதில் அளிக்கிறார்.

1. நான் எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். 73% மதிப்பெண் பெற்றிருக்கிறேன். என் எம்பிஏ சான்றிதழை அடகு வைத்து பிசினஸ் கடன் வாங்க முடியுமா? எவ்வளவு கடன் வாங்க முடியும்?


''மிகவும் மகிழ்ச்சி! எம்.பி.ஏ. முதுநிலைப் படிப்பை அடகு வைத்து கடன் வாங்க முடியாது. அதற்கு நம் நாட்டில் வழிமுறை இல்லை. ஆனால், நீங்கள் செய்யக்கூடிய என்னவென்று தெளிவாக ஒரு பிசினஸ் ப்ளான் தயார் செய்து உங்கள் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு வங்கிக்கு சென்றால், எந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்பதை ஆராய்ந்து, உங்களுக்கு கடன் கிடைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது.''
 

2. நான் 10ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். எனக்கு பியூட்டி பார்லரில் ஆறு வருட அனுபவம் இருக்கிறது. தற்போது எனக்கு 10 லட்சம் கடன் கிடைக்குமா. இதற்கு என்ன நடைமுறை?

 ''ப்யூட்டி பார்லரில் உங்களுடைய ஆறு வருட அனுபவம் கணிசமான தொழில் அனுபவம். இதில் ஏதேனும் டிப்ளமாவோ அல்லது தேர்வு நிலை சான்றிதழோ அல்லது தொழில் அனுபவ சான்றிதழ் (நன்றாக நிர்வகித்து வரக்கூடிய ப்யூட்டி பார்லரில் இருந்து) உங்களால் தர முடிந்தால், உங்களுடைய தேவையை வங்கிகள் கணித்து, அதற்கு மூலதன உதவி மற்றும் நடைமுறை மூலதன உதவி எவ்வளவு என்பதை கணித்து, அதற்குத் தேவையான பண உதவி உங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யும்.

 
அதற்குமுன், நீங்கள் ஒரு சிறிய புராஜெக்ட் ரிப்போர்ட் ஒன்றை உங்களுக்கு தெரிந்த அளவில் தயார் செய்து வங்கிக்கு எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது.
ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் என்பது உங்களால் தயார் செய்ய இயலவில்லை என்றால் அரசின் எம்.எஸ்.எம்.இ. டெவலப்மென்ட் சென்டர் உதவி இயக்குநரை அணுகலாம். இந்த அலுவலகம் சென்னையில் இருக்கிறது. மற்ற நகரங்களில் மாவட்ட தொழில் மையத்தை சார்ந்து இருக்கும். இல்லை எனில், நிதி ஆலோசகர்களையோ பட்டயக் கணக்காளர்களையோ அணுகினால், அவர்கள் ஆவண செய்வார்கள்!''
 

3 . நான் விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க உள்ளேன். இதற்கு யாரிடம் சென்று கடன் கேட்பது. நபார்ட் வங்கியை அணுகலாமா?


''நபார்ட் வங்கி ஒரு மத்திய நிதி உதவிக் குழுமம். இவர்கள் தன்னிச்சையாக விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரிக்கத் தேவையான நிதி உதவியை பொதுவாக செய்வதில்லை. ஆனால், அவர்களுடைய புராஜெக்ட் டிவிஷன் உங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்யலாம். 

இதற்கு மாறாக, நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள ஒரு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிக்கு உங்களுடைய புராஜெக்ட் ரிப்போட்டுடன் சென்றால், உங்களுக்கு அவர்கள் உதவ முன்வரலாம்.

மேலும், உங்களுடைய புராஜெக்ட்டின் மதிப்பை பொறுத்து, நீங்கள் ஏதேனும் தொழில்நுட்ப ஆலோசகரை அல்லது நிதி ஆலோசகர்களையோ கலந்தாலோசித்தால், நீங்கள் வங்கியை அணுகும்போது மிகவும் உதவியாக இருக்கும்.''
 

4. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே வியாபாரம் செய்ய கடன் கிடைக்குமா, ஆம் என்றால் எவ்வளவு கிடைக்கும்?

''கல்லூரியில் படித்துக்கொண்டே எந்த தொழிலோ அல்லது வியாபாரமோ பகுதி நேரத்தில் செய்யும்போது படிப்பை பாதிக்காத அளவுக்கு அது இருக்கும் காலகட்டத்தில் இந்தியாவைப் பொருத்தவரை எந்தவொரு ஒரு கல்வி நிறுவனமும் அதற்கு தடை செய்யாது. 
 
பொதுவாக, வியாபாரத்தில் அதிகமாக ஈடுபடும்போது படிப்பில் கவனம் குறைவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதால், சில தொழில்முறைக் கல்லூரிகள் தனிப்பட்ட மாணவர் மீது பொது நடவடிக்கைகள் எடுப்பது தவிர்க்க முடியாது.
இதையும் மீறி, வியாபாரம் மற்றும் தொழில் செய்ய உங்களுக்கு திறமையும் ஆர்வமும் மற்றும் படிப்புக் கடன் ஏதும் இல்லை என்கிற பட்சத்தில், தகுந்த ஆதாரங்களை உங்களால் கொடுக்க முடியும் என்றால், அல்லது குடும்ப வியாபாரத்தின் சான்றுகளை சமர்பிக்க முடியும் என்றால், நேர்மையான, சீரிய நோக்கத்துடன் தகுந்த ஜாமின் நபர்களுடன் ஒரு வங்கியை அணுகினால், கடன் உதவி பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.

சில வங்கிகள் முன் ஜாக்கிரதையாக கல்லூரி முதல்வர் அல்லது பேராசியர்களின் ஒப்புதல் சான்றைக் கேட்கலாம். உங்களால் இதையும் தரமுடிந்தால், உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் தொழில் ஆர்வத்துக்கு தொழில் உதவி கிடைக்கும்!''.
 
5. எனக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறேன். இப்போது கடையை சற்று விரிவாக்கம் செய்ய 5 லட்சம் ரூபாய் கடன் கிடைக்குமா?
 
''12  ஆண்டுகளாக மளிகை வியாபாரம் செய்துவரும் உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஒரு குறையே அல்ல. திறமையாக நீங்கள் தொழில் நடத்தி வந்திருந்தால், இதுகாலம் வங்கி உதவி இல்லாமல் எப்படி தொழில் செய்தீர்கள் என்பதை வங்கிக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது. 
உங்கள் கடையை விரிவாக்கம் செய்ய 5 லட்சம் ரூபாய் கடன் என்பது எந்த வங்கியும் கீழ்க்கண்ட ஆவணங்களை நீங்கள் வங்கிக்கு கொடுக்கும்பட்சத்தில், நிச்சயமாக உங்களுக்கு கடன் கிடைக்க வழி உள்ளது.
 
 * உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் விபரங்கள் (KYC - Know Your Customer) முகவரிச் சான்று, வயதுச் சான்று.. இவற்றுடன் ஆதார் அட்டை இருந்தால் நலம்.
 
* மளிகைக் கடையின் வரவு - செலவுக் கணக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு ஆடிட் செய்தோ, செய்யாமலோ 
 
* உங்கள் தொழிலுக்கான விரிவாக்க விவரங்கள் - கொட்டேஷன், இன்வாய்ஸ் அல்லது எஸ்டிமேட்
 
* ரூ.5 லட்சம் விரிவாக்கத்துக்கு உங்கள் மூலதனம் குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 
 
* தனிநபர் ஜாமின் தேவைப்பட்டால்.

உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால், கடையின் கணக்குவழக்குகளை நிர்வகிக்க, ஒரு உதவியாளரை நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது என வங்கிகள் தரப்பில் ஆலோசனை சொல்வார்கள். இதை நீங்கள் பின்பற்றுவது நல்லது!".

6. ஜாமின் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை தொழில் கடன் வாங்கலாம் என்கிறார்களே, இது உண்மையா? உண்மை எனில் இந்த கடனை வாங்க என்ன நடைமுறை?
 
''ஜாமின் மற்றும் அடகு இல்லாமல் ரூபாய் 1 கோடி வரை தொழில் உதவி வங்கிகள் மூலம் பெற முடியும் என்பது உண்மையே! இது எம்.எஸ்.எம்.இ. சி.ஜி.டி (CGT-MSME) என்கிற அமைப்பு எஸ்.எம்.இ.களுக்காக மத்திய அரசால் எந்தவித சொத்து உத்தரவாதம் மற்றும் மூன்றாம் நபர் உத்தரவாதமும் இன்றி 1 கோடி ரூபாய் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு கடன் வழங்க சட்டப்பூர்வமாக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். 
 
இந்தக் கடன் வாங்குபவர்கள்,
 
* எந்தவொரு தனிநபர் கடனை பெற்றிருக்கக் கூடாது.
 
* தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ, சிட்பி மற்றும் கோ-ஆபரேட்டிவ் வங்கிகளோ இந்தக் கடனை, எந்தவொரு தொழில் மற்றும் பிசினஸ் கடன்களுக்கான பிசினஸ் பிளான் நிதிநிலை அறிக்கைகள் போன்றவற்றை கொடுத்து, வங்கிகளின் ஆராய்தலுக்கு உட்பட்டு, ஜாமினைத் தவிர, மற்ற அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு பெறலாம்.
 
* உங்கள் கடன் தொகை 1 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இதற்கு உத்தரவாதக் கட்டணம் கடன் தொகையில் 1% அல்லது 1.5% மற்றும் வருடாந்திர சேவைக் கட்டணம் 0.5-லிருந்து 0.7.5 சதவிகிதம் வரை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும்.
 
* உங்கள் கடன் 18 மாதங்களுக்குப்பிறகு சரியாக நீங்கள் கட்டத் தவறும்போது, உங்களுக்கு கடன் கொடுத்த வங்கிக்கு 65 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை உத்தரவாத க்ளெய்ம் வங்கிகளுக்கு திருப்பி செலுத்தப்படும். ஆனால், உங்கள் மீது சட்டப்படி வங்கிகள் தொடர்ந்து வசூல் நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். 
 
வங்கிகளுக்கான உத்தரவாதத்தைத் தவிர, இந்தத் திட்டத்தில் சிறப்பு ஏதுமில்லை. அப்படி இருந்தும் இன்று வங்கிகள் இந்த கடனை வழங்குவதில் பெரும்பாலும் தயக்கம் காட்டுகிறார்கள். அதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இந்தக் கடனை வாங்கும்போது தொழில்முனைவோர்கள் இதற்குத்தான் உத்தரவாதம் உள்ளதே, நாம் ஏன் கடனை திரும்பக் கட்ட வேண்டும் என்கிற மனப்பான்மையில் இருந்துவிடுகிறார்கள்.
 
எனவே, இந்தக் கடனை நீங்கள் பெறும்போது வங்கிகளிடம் சற்று அதிகமாகவே உங்களைப் பற்றி உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நேரம் பிடிக்கலாம் என்பதால் பொறுமை சற்று தேவை. (இது தொடர்பாக நாணயம் விகடன் 13.7.2014 தேதியிட்ட இதழில் விரிவாக கட்டுரை எழுதி இருக்கிறேன். கூடுதலாக தெரிந்துகொள்ள நினைக்கும் வாசகர்கள் இந்த இதழை படிக்கலாம்!)
 

7. நான் இதுவரை வருமான வரித் தாக்கல் செய்வதில்லை. எனக்கு வங்கியில் கடன் கிடைக்குமா?

''1. விவசாயம் பயிர்கடன் மற்றும் விவசாயம் சார்ந்த குறுகில கால உற்பத்திக் கடன்கள் வாங்குவதற்கு வருமான வரித் தாக்கல் தேவை இல்லை. ஏனென்றால், விவசாய வருமானத்துக்கு வருமான வரி இன்று வரை இல்லை. 
மற்ற தொழில்களுக்கோ வீடு மற்றும் நுகர்வ்வோர் பொருள் கடன்களுக்கோ வருமான வரித் தாக்கல் மிக அவசியம். உங்களுடைய பணம் திரும்ப செலுத்தும் திறன், உங்கள் வருமான வரித் தாக்கலில் இருந்தே பெறப்படும்''.
 

8. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். எனக்கு வங்கியில் கடன் கிடைக்குமா?

''நண்பரே, ரியல் எஸ்டேட் பிசினஸ் என்பது ஒரு பெரிய கடல். அதில் கீழ்க்கண்ட தொழில் அணுகுமுறைகள் அடங்கும். 
 
* நிலம் வாங்குதல் விற்றல்,
* நிலம் வாங்கி கட்டடம் கட்டுதல்
* கட்டடம் வாங்கி விற்றல்
* கட்டடங்களை கட்டி வாடகைக்கு விடுதல் 
* மால் மற்றும் மல்ட்டி பிளக்ஸ் கட்டி விற்றல்
* ரியல் எஸ்டேட் மதிப்பீடு மற்றும் கையப்படுத்துதல் என பல வகை வேலைகள் உண்டு.
 
மேற்கண்ட எந்தத் தொழிலையும் செய்வதற்கு வங்கியில் தற்போது கடன் கொடுப்பது முன்னுரிமை பின்தள்ளப்பட்டு இருக்கிறது.  ஆனால், ஆறாம் எண் தொழில் பரபரப்பாக நடந்துவருகிறது. ஏனெனில், வங்கி மூலம் மேற்கண்ட தொழில்களுக்கு கடன் வாங்கியவர்கள் வங்கிக்கு பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதில் முதல் 10 பெரிய நிறுவனங்களும் அடங்கும். எனவே, ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு வங்கியில் இப்போது கடன் கிடைப்பது கொஞ்சம் சிரமமான காரியமே!''
 

9. நான் சமீபத்தில் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். அதை விரிவாக்கம் செய்ய கடன் தேவைப்படுகிறது. இது மாதிரி விரிவாக்கம் செய்யும்போது, வங்கிக் கடன் சிறந்ததா அல்லது வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து நிதியைத் திரட்டலாமா? 

''ஆன்லைன் ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்கள் கிடைப்பது மிகவும் சிரமம். வென்ச்சர் கேப்பிட்டல் மூலம் விரிவாக்கத்துக்கு முதலீட்டை ஒரு சிறந்த நிதி ஆலோசகர் மூலம் நீங்கள் தேடினால், உங்களுக்கான தொழில் முதலீடு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது''.
 

10. என் சொந்த ஊர் திருச்சி, நான் ஒரு விவசாயி. நாங்கள் சில புதிய ரக வாழைப்பழங்களை விளைவிக்கிறோம். இந்த பழங்கள் வீணாகாமல் இருக்க ஒரு குடோன் இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி ஒரு குடோன் கட்ட கடன் கிடைக்குமா?

''கோல்டு செயின் மேனேஜ்மென்ட் மூலம் குடோன் கட்ட அரசு மானியத்துடன் நிதி உதவி கிடைக்கும் திட்டம் உள்ளது. ஒரு சரியான புராஜெக்ட் ரிப்போர்ட்டுடன், ஒரு நிதி ஆலோசகரின் உதவியுடன் வங்கியை அணுகினால், உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புண்டு!''
 

11. என் தந்தை ஒரு லேத் பட்டரையை நடத்தி வந்தார். இந்த பட்டரையை அமைக்க என் தந்தை 5 வருடங்களுக்கு முன் 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார். இதற்கு தவறாமல் இ.எம்.ஐ கட்டி வருகிறோம். இன்னும் 50,000 ரூபாய் பாக்கி இருக்கிறது. தற்போது போதுமான பணிகள் கிடைக்காததால் பட்டரையை மூடிவிட்டு ஒரு சிறிய டூவீலர் மெக்கானிக் ஷாப் திறக்க இருக்கிறேன். இதற்கு ஒரு 2 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுகிறது. பழைய கடன் திரும்ப செலுத்தாத நிலையில் புதிதாக கடன் கிடைக்குமா? 

''பழைய கடனை திரும்ப செலுத்தாத நிலையில் புதிய கடன் வாங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால், பழைய கடனை முடிக்க ரூ.50,000 மட்டும் பாக்கி இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். இந்தக் கடனை நீங்கள் எப்படியாவது கட்டிமுடித்துவிட்டால், புதுக் கடன் வாங்குவது சாத்தியம்.''
 

12. நாங்கள் மும்பையில் உள்ள டப்பாவாலாக்களை போன்று சென்னையில் ஒரு புது தொழிலை தொடங்க இருக்கிறேன். இதற்கு வட்டியே இல்லாமல் எங்காவது கடன் கிடைக்குமா?

''வட்டியே இல்லாமல் கடன் இங்கு கிடைக்காது.''

13. நான் சிறிய அளவில் தோல் தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வெறும் 3 சதவிகித வட்டியில் தொழில் கடன் கிடைப்பதாக சொல்கிறார்களே! எனக்கு அந்த கடன் கிடைக்குமா?

''உங்கள் தோல் தொழிற்சாலை லாபகரமாக மற்றும் சீரிய முறையில் நடந்துகொண்டிருக்கும்பட்சத்தில் வெளிநாட்டுக் கடன் குறைந்தபட்சம் ரூபாய் 6 கோடி வரை குறைந்த வட்டியில் பெற வாய்ப்புகள் உள்ளது. ஒரு நிதி ஆலோசகரை அணுகி, தகுந்த புராஜெக்ட் ரிப்போர்ட்டுடன் வங்கிகளை அணுகினால், இது சாத்தியமாகும்!''.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ