Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தை பணமாக்கும் திட்டம்..!

இந்தியாவில் வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. மேலும் மேலும் மக்கள் தங்கம் வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் தங்கம் இறக்குமதி செய்வது அதிகரித்து அன்னிய செலாவணியும் அதிகரிக்கிறது.  இதை குறைப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் தங்கத்தை  பணமாக்கும் திட்டம். மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கும் தங்கத்தினால் எந்த வருமானமும் கிடைப்பதில்லை.
இந்த திட்டத்தை 2015-16 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட்டாக வைக்கலாம். அந்த டெபாசிட்டுக்கு வட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இந்த திட்டம் குறித்த வரைவை  மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அனுப்பி வைத்தது. இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் எப்படி செயல்படுகிறது?, இதனால் யாருக்கு என்ன பயன் என்பது குறித்துப் பார்ப்போம்.

திட்டம் எப்படி செயல்படும்?

தேவைக்கு அதிகமாக இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். இதில் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய முடியும். வங்கிகள் ஆபரண தங்கமாக ஏற்காது. தங்கத்தை டெபாசிட் செய்ய விரும்பினால் அதை முதலில் வங்கிக்கு நேரில் சென்று தெரியப்படுத்த வேண்டும். அதன் பின் வங்கி தங்கத்தை பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் வழங்கும். தங்கத்தின்  தரத்தை பரிசோதனை செய்து, தங்கத்தை உருக்கி அதன்  எடை மற்றும் தரத்தை ஹால்மார்க் சென்டர் வாடிக்கையாளரிடம் கூறும். 

அதை வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டால் ஹால்மார்க் சென்டர் தங்கத்தின் எடை மற்றும் மதிப்புக்கு சான்றிதழ் வழங்கும். இந்த வேலை முடிவதற்கு 3-4 மணி நேரம் ஆகும். அதன் பின் அந்த சான்றிதழை வங்கியில் கொடுத்து, வங்கி கேட்கும் கே ஒய் சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஹால்மார்க் சென்டர்

 இதை செய்வதற்கு அரசு 350 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 57 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில்தான், மக்கள் தங்கத்தை அதிகமாக வாங்குகிறார்கள். அதனால் இந்த மாநிலங்களில் அதிகமான ஹால்மார்க் சென்டர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சென்டரில் தங்கம் உருக்கும் செயல்முறையை வாடிக்கையாளர் நேரடியாக பார்க்க முடியும்.

தங்கம் சேமிப்பு கணக்கு  துவக்கம்!

வாடிக்கையாளரின் பெயரில் தங்கத்தை வரவு வைப்பதற்காக தனியாக ஒரு கணக்கு துவங்கப்படும். இதில் தங்கத்தின் எடையை, மதிப்பாக மாற்றி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு 0.75-1 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படலாம். இந்த வட்டிவிகிதம்  இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

தங்கத்தை டெபாசிட் செய்த 30-60 நாட்களுக்கு பிறகு வட்டி வழங்கப்படும் .  100 கிராம் தங்கம் முதலீடு செய்தால் சுமார் 101 கிராம் தங்கமாக கிடைக்கும்.

திரும்ப எடுப்பது எப்படி?

பணம் அல்லது தங்கமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.  அதாவது டெபாசிட்டை  எடுப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் டெபாசிட் பணமாக வேண்டுமா அல்லது தங்கமாக வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.

டெபாசிட் காலம்!

குறைந்தபட்சம் ஒரு ஆண்டு டெபாசிட் வைக்கலாம். 2,3 என எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைக்கலாம். இடையில் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ள முடியும். அந்த காலத்துக்கு மட்டும் வட்டி கணக்கிடப்படும்.

வரிச் சலுகை!

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்க டெபாசிட்டுக்கும் அதன் மூலமாக கிடைக்கும் வட்டிக்கும் மூலதன ஆதாய வரி, செல்வ வரி, வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

யாருக்கு பயன்!

வங்கிகள் டெபாசிட்டாக வாங்கும் தங்கத்தை, சிஆர் ஆர்,எஸ் எல் ஆர் ஆகியவற்றுக்கு தங்க இருப்பை கணக்கு  காண்பித்துக் கொள்ளலாம்.

பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தங்க டெபாசிட்டை மறுசுழற்சி முறையில் தங்க வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் தங்க காசுகள்  மற்றும் பிஸ்கட்டுகளாக பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

சிக்கல் என்ன?

தங்க டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்கத்துக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது தங்க டெபாசிட்டுக்கு 0.75-1 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும். அதே தங்கத்துக்கு ஈடான பணத்தை வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட்டாக முதலீடு செய்யும் போது 8-9 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். 

இந்தியா போன்ற நாட்டில் அதுவும் தமிழகத்தில் தங்கம் சென்டிமென்ட் சார்ந்த விஷயமாகும். இங்கு பெரும்பாலானவர்கள் தங்கத்தை சொத்தாக பார்ப்பதில்லை. கெளரவம் சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். மேலும் அவசர நேரத்தில் பணம் தேவைப்படும் போது கையிலிருக்கும்  தங்கத்தை எளிதாக பணமாக்கி கொள்வார்கள். அதாவது அடமானம் அல்லது நகையை விற்று பணமாக்க முடியும்.

குறைந்தபட்சம் 30 கிராம் வரைக்கும்  டெபாசிட் வைக்கும் விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டம். . 30 கிராம் தங்கம் என்பது 4 சவரனுக்கு குறைவானது இந்த அளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கவே பொதுமக்கள் விரும்புவார்கள். இந்தியாவில் கருப்பு பணம் பெரும்பாலான இடங்களில் தங்கமாக உள்ளது. தங்கத்தை டெபாசிட்டாக கொண்டு வரும்போது கணக்கில் வந்துவிடும் என்பதால் இதில் முதலீடு செய்ய மக்கள் தயங்கவே செய்வார்கள்.

இரா. ரூபாவதி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close