Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புல்லட் ரயில்: இந்தியாவுக்கு வரவே வராதா?

 புல்லட் ரயில்இந்தியாவுக்கு வரவே வராதா?

பிரான்ஸ், ஜப்பான், சீனாவில் ஓடுகிற மாதிரியான அதிவேக புல்லட் ரயில்கள் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிற ஆசை நம்மவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. மக்களின் இந்த கனவை நனவாக்குவோம் என்கிற மாதிரியான வாக்குறுதிகளை தந்து ஆட்சியைப் பிடித்தது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம். 

ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மதிப்பீடுகளை (estimates) வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் புல்லட் ரயில் வரும் என்கிற கனவு இப்போதைக்கு நிறைவேறுவதற்கு எந்த வழியும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. 
அப்படி என்ன மதிப்பீடு வெளியாகி இருக்கிறது? 
ஜப்பானிய நிறுவனமான ஜப்பனீஷ் இன்டர்நேஷனல் கோ-ஆப்ரேஷன் ஏஜென்ஸி (JICA) என்னும் நிறுவனம், மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பைக்கும் குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க எவ்வளவு செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்தது. இந்த நிறுவனம் செய்த மதிப்பீட்டின்படி, சுமார் 70,000 கோடி ரூபாய் செலவாகும் என தெரிய வந்துள்ளது.
 
2010-ம் ஆண்டு சர்வதேச அளவிலான மூன்று நிறுவனங்கள் இணைந்து நடத்திய மதிப்பீட்டின்படி 63,000 கோடி ரூபாய் செலவாகும் என கணித்திருந்தது. இப்போதைய நிலையில் இந்தத் திட்டத்துக்கு 70,000 கோடி ரூபாய் செலவாகும் என்றாலும் இந்தத் திட்டத்தை முடிக்க இன்னும் ஏழு ஆண்டு காலம் பிடிக்கும். அப்போது மொத்த செலவு 90,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிடும் என்று வேறு சொல்கிறார்கள் நிபுணர்கள்.  528 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான புல்லட் ரயில் பாதையை அமைக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 168 கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லி இருக்கிறது ஜப்பனீஷ் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்ஸி.
 
இத்தனைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்று பார்த்தால், பெரிதாக எதுவும் இல்லை. பிரான்ஸில் எஸ்என்சிஎஃப் நிறுவனம் நடத்தும் டிஜிவி புல்லட் ரயில் திட்டம் வெறும் 2.5 சதவிகித வருமானத்தை (Internal rate of return)  தருகிறதாம். ஜப்பனீஷ் இன்டர்நேஷனல் கோ-ஆப்ரேஷன் ஏஜென்ஸி நடத்திய மதிப்பீட்டிலும் சுமார் 3 சதவிகித வருமானம் மட்டுமே கிடைக்கும் என்று கணக்கிட்டிருக்கிறது. இவ்வளவு குறைவான வருமானத்தைத் தரும் இந்தத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று யோசித்து வருகிறார்களாம் ரயில்வே துறை அதிகாரிகள்.
 
இந்த நிதி ஆண்டுக்கான மத்திய ரயில்வே துறையின் மொத்த பட்ஜெட்டே ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்போது, இந்த ஒரு திட்டத்துக்கு மட்டும் இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவழிக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியே தயாரானாலும் இதை வேறு மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ இரு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் எங்களுக்கு என்ன பயன் என்று பல்வேறு மாநிலங்களின் தரப்பில் ஆட்சேபம் எழ வாய்ப்பு இருக்கிறது. 
 
இருபெரும் பிசினஸ் நகரங்கள் என்று சொல்லப்படும் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டம் நடைமுறைப்படுத்த இத்தனை விஷயங்கள் இடையுறாக இருக்கும்போது, சென்னை - பெங்களூர் அல்லது சென்னை - கோவை புல்லட் ரயில் திட்டம் எல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.  இப்போதைய நிலையில், ஏற்கெனவே வேகமாக ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துவதன் மூலமே பிரயாண நேரத்தைக் குறைத்து, பயணிகளுக்கு நல்லது செய்ய முடியும். 
 
தவிர, சென்னை - நெல்லைக்கு இடையே இருவழிப் பாதையை வேகமாக கொண்டுவந்து, அதில் இன்னும் அதிகமான ரயில்களை கூடுதல் வேகத்துடன் இயக்கினாலே, பயணிகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல், பயணம் செய்துவிடுவார்கள்.  நடைமுறைக்கு சாத்தியமான இதை எல்லாம் செய்வதை விட்டுவிட்டு, தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமில்லாத புல்லட் ரயில் கனவுத் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு மூட்டை கட்டி வைப்பதே புத்திசாலித்தனம்!
 
-ஆகாஷ்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ