Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ஆள் வர்த்தகம் ஒரு சிறப்புப் பார்வை : முருகப்பா குழுமத்தில் நடந்தது என்ன?

உள்ஆள் வர்த்தகம் ஒரு சிறப்புப் பார்வை : முருகப்பா குழுமத்தில் நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் கூட முருகப்பா குழுமத்தின் உள்ஆள் வர்த்தகம் (இன்சைடர் டிரேடிங்) பற்றி பேசுகிறது. ஆக உள்ஆள் வர்த்தகம்  என்றால் என்ன, முருகப்பா குழுமத்தில் என்ன நடந்தது? இதற்கு முன் இப்படி உள்ஆள் வர்த்தகம் நடந்திருக்கிறதா, உள் ஆள் வர்த்தகத்தால் முதலீட்டாளர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று விரிவாக விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
முதலில் உள்ஆள் வர்த்தகம் என்றால் என்ன என்பதை விளக்குகிறேன் என்று தொடங்கினார் "ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தின் உயர்மட்ட நிர்வாகிகளான இயக்குநர்கள் , பொது மேளாலர்கள் , முதன்மை நிர்வாக அதிகாரிகள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் போன்றவர்கள் தான் அந்த நிறுவனத்தின்  முடிவுகளை தீர்மானப்பவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் மூலம் முதலில் இவர்களே ஆதாயம் அடைய வாய்ப்பு இருக்கிறது. 
 
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையை பாதிக்கக்கூடிய ரகசிய விவரங்களான டிவிடெண்ட் அறிவிப்பு, கையகப்படுத்துதல், இணைத்தல், காலாண்டு முடிவுகள், ஆண்டு முடிவுகள், பங்கு பிரிவினைகள் (ஸ்டாக் ஸ்பிலிட்) போன்றவைகளால் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ஆதாயம் அடையலாம் அல்லது விற்று நஷ்டத்தை தவிர்க்கலாம்.
 
பங்குகளின் விலையை நேரடியாக பாதிக்கக்கூடிய இது போன்ற தகவல்களை தீர்மானித்த உடன்  குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அந்த   பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பின் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் பொது அறிவிப்பாக அந்த நிறுவனங்களே தெரிவிக்கலாம். அதே நேரத்தில் பங்குச் சந்தைகள்  தன் வலைதளத்தில் பொது அறிவிப்பாக அந்த நிறுவனத்தின் முடிவுகளை அறிவிக்கும். இப்படித் தான் ஒரு முடிவு அல்லது தகவல் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். 
 
இந்த தகவல்கள் முதலில் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு தெரிவதால் அவர்களும், அந்த நிர்வாகிகளின் குறிப்பிட்ட உறவினர்களும் செபி குறிப்பிட்டுள்ள காலம் வரை, தகவல் வெளி வந்த நிறுவனத்தின் பங்குகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது.  மீறி அந்த பங்குகளில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் செபியின் தண்டனைக்கு ஆளாவார்கள்.
 
இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு :
பங்கின் விலையை நேரடியாக பாதிக்கக்கூடிய தகவல்கள் மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கு தெரிவதற்கு முன் தகவல் அறிந்தவர்கள் மட்டும் தங்களை வளப்படுத்திக் கொள்ளவோ அல்லது நஷ்டத்திலிருந்து தப்பிக்கவோ வழி இருக்கிறது. இப்படி செய்வது மற்ற முதலீட்டாளர்களை சுரண்டுவதைப் போல ஆகிவிடும்.
 
முருகப்பா குழுமத்தில் என்ன நடந்ததாக செபி சொல்கிறது :
சபேரோ ஆர்கானிக்ஸ் என்கிற நிறுவனம் 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பூச்சிக் கொள்ளிகளுக்கு தேவையான ரசயனங்களை தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமம் 2011ல் கையகப்படுத்தியது.   மும்பை பங்குச் சந்தையில் மே 16 2011 அன்று 58 ரூபாய்க்கு வர்த்தகமான சபேரோ நிறுவனத்தின் பங்குகள் ஜூன் 09 2011 அன்று 127 ரூபாயில் வர்த்தகமானது. அதிலும் குறிப்பாக ஜூன் 06 2011 அன்று அதன் அதிகபட்ச விலையான 130.50 ரூபாய்க்கு வர்த்தகமானது.  அதே போல் தேசிய பங்குச் சந்தையில் மே 13, 2011 அன்று 57.80 ரூபாய்க்கு வர்த்தகமான  சபேரோ நிறுவனத்தின் பங்குகள் ஜூன் 15, 2011 அன்று 126.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிலும் ஜூம் 14, 2011 அன்று இந்த பங்கின் அதிகபட்ச விலையான 130.90 ரூபாய்க்கு வர்த்தகமானது. 
 
மே 15 2011 அன்று கோரமண்டல் மற்றும் சபேரோ ஆகிய இரன்டு நிறுவனங்களும் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் பற்றி ஒரு சந்திப்பை நடத்தியது.  இந்த சந்திப்பில் கோரமண்டல் நிறுவனத்தின் சார்பாக ஏ.வெள்ளையனும் கலந்து கொண்டார்.  இதே தேதியில் (மே 15  2011) கோரமண்டல் நிறுவனம் சட்ட ஆலோசகர்கள்  (லீகல் அட்வைசர்கள்) மற்றும் நிதி ஆலோசகர்களை (ஃபைனான்சியல் அட்வைசர்ஸ்) நியமித்து அந்த நிறுவனத்தை மதிப்பீடு செய்யவும், கையகப்படுத்துதல் பணிக்கு தேவையான சட்ட ரீதியிலான பணிகளை செய்யவும் தொடங்கியது.  மே 18, 2011 முதல் மே 30, 2011 வரை கையகப்படுத்துதல் பற்றிய விவாதங்களும் சந்திப்புகளும் நடந்து கொண்டிருந்தன. 
 
சரியாக மே 31, 2011 அன்று கோரமண்டல் நிறுவனம்  சபேரோ நிறுவனத்தை கையகப்படுத்தும் செய்தியை கோரமண்டல் நிறுவனமே பங்குச் சந்தைகளிடம் தெரிவித்தது. சபேரோ நிறுவனம் இந்த கையகப்படுத்துதலை பற்றி ஜூன் 2, 2011 அன்று பங்குச் சந்தையிடம் தெரியப்படுத்தியது.  அதே ஜூன் 2, 2011 அன்று கோரமண்டல் நிறுவனம் சபேரோ நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதை பொதுமக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பொது அறிவிப்பு செய்தது. கோரமண்டல் நிறுவனம் சபேரோ நிறுவனத்தை கையகப்படுத்த இருக்கிறது என்கிற தகவல் சபேரோ நிறுவனத்தின் விலையை நேரடியாக பாதிக்ககூடிய தகவல். இந்த தகவல் மே 15, 2011 அன்றே உயர் மட்ட அதிகாரிகளுக்கு தெரியும்.  ஆனால் மே 31, 2011 அன்று தான் பொது அறிவிப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 
 ஏ. வெள்ளையன், ஏ.ஆர்.முருகப்பன், சி.கோபாலகிருஷ்ணன், வி.கருப்பையா ஆகிய நான்கு பேர் மீதும்  புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இவர்கள்  உள்ஆள் வர்த்தகம் செய்ததாக செபி  நடவடிக்கை எடுத்திருக்கிறது.  கோரமண்டல் குடும்ப பாரம்பரியம் மற்றும் மரியாதையை கருத்தில் கொண்டு வெள்ளையன் தன் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். செபி செய்த விசாரணையில் சி.கோபாலகிருஷ்ணன், வி.கருப்பையா மற்றும் சிலர் செய்த வர்த்தகங்களை கண்காணித்திருக்கிறது. 
 
செபி,  கோரமண்டல் நிறுவன உயர் அலுவலர்கள், சபேரோ நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் இந்த இணைப்பில் பங்கெடுத்த சில ப்ரொஃபெஷனல்கள் மூலமாக இந்த தகவல்கள்  வெளியானதா என்று செபி விசாரித்த போது  இல்லை என தெரிய வந்திருக்கிறது.  கோபால கிருஷ்ணன் மற்றும் கருப்பையாவின் கேஒய்சி, வங்கி பண பரிவர்த்தனைகள்,  பங்கு பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அவர்களின் புரோக்கரான நிர்மல் பேங் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் செபி விசாரித்திருக்கிறது.
 
கோபாலகிருஷ்ணனுக்கு, சுப்ரமணியம் (முருகப்பனின் மகன் சுப்ரமணியம்)   மூலம் சென்னையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின், தி.நகர் கிளை வங்கிக் கணக்கு மூலம் மே 28, 2011 அன்று ஒரு கோடி ரூபாய் மற்றப்பட்டிருக்கிறது.  சுப்ரமணியனும் அதே வங்கியில்  தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. கோபாலகிருஷ்ணனுக்கு எந்த வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டதோ அதே வங்கிக் கணக்கிலிருந்து தான் நிர்மல் பேங் புரோக்கிங் நிறுவனத்திற்கும் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதே தேதியில் (மே 28, 2011) சுப்ரமணியனின் தந்தையான ஏ.ஆர்.முருகப்பன் ஐசிஐசிஐ வங்கியின் மயிலாப்பூர் கிளையில் வங்கிக் கனக்கு வைத்திருந்தார். அந்த கணக்கு மூலமாக தான் சுப்ரமணியனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முருகப்பன் தன் ஒரு கோடி ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டை மெச்சூர் ஆவதற்கு முன்பே எடுத்திருக்கிறார். இதுவும் மே 28 2011 அன்றே நடந்திருக்கிறது.  ஆக அனைத்தையும் கோர்த்து பார்த்தால் முருகப்பன் தன் எஃப்.டி தொகையை சுப்ரமணியனிடம் கொடுத்து, கோபால கிருஷ்ணனுக்கு கொடுத்திருக்கிறார். கோபாலகிருஷ்ணன் அந்த பணத்தை நிர்மல் பேங் புரோக்கிங் நிறுவனம் மூலம் சபேரோ பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். 
 
இந்தப் பெரிய பண பரிமாற்றம் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளுக்கு பிறகு சரியாக 24 நாட்கள் கழித்து ஜூன் 21, 2011 அன்று கோபாலகிருஷ்ணன் 1.02 கோடி ரூபாயை சுப்ரமணியனிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறார். சுப்ரமணியத்திடம் வாங்கிய ஒரு கோடி ரூபாயை திருப்பி கொடுத்த பின் கோபால கிருஷ்ணன் சிட்டி யூனியன் வங்கியில் ஒரு வருட எஃப்.டியாக ஒரு கோடி ரூபாய் போடுகிறார்.
 
ஆக 3,19,500 பங்குகளை சராசரியாக ஒரு பங்கின்  விலை 125.96 ரூபாய் என்கிற கணக்கில் 4,02,44,220 ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இந்த 3,19,500 பங்குகளை ஒரு பங்கின் விலை சராசரியாக 85.15 ரூபாய்க்கு  2,72,05,425 ரூபாய் விலை கொடுத்து  வாங்கி இருக்கிறார். மொத்த லாபம் 1,30,38,795 ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார்.
 
செபியின் விசாரணை காலமான மே 15 2011 முதல் ஜூன் 15 2011 வரையான காலத்தில் கோபாலகிருஷ்ணன் வெறும் சபேரோ பங்குகளை மட்டுமே பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்கிறார்.  இந்த விசாரனண காலத்திற்கு முன் ஒரே ஒரு பங்கில் 2 லட்சத்திற்கு தான் பரிவர்த்தனை செய்திருக்கிறார், அதுவும் விசாரணை காலத்திற்கு 2 வருடங்களுக்கு முன்.  கோபாலகிருஷ்ணன் அக்டோபர் 11 2013 அன்று செபிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சபேரோ நிறுவனத்தின் விலை அதிகரித்து வருவதாலும், அதற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கருதியதாலும் வாங்கியதாக பதிலளித்திருக்கிறார். மீண்டும் பிப்ரவரி 3, 2014 அன்று அனுப்பிய மின்னஞ்சலில் சுப்ரமணியத்திடமிருந்து வந்த பணம்  சென்னையில் உள்ள ஃப்ளாட்டை விற்றதால் கிடைத்த பணம் என்று கூறி இருக்கிறார்.
 
இது தவிர வி.கருப்பையா (இந்து கூட்டுக் குடும்பம்) செய்த மொத்த பங்கு பரிவர்த்தனைகளின் மூலம் 15.93 லட்சம் ஆதாயம் அடைந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது.  கருப்பையா முருகப்பனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பன்  மூலம் சபேரோ நிறுவனத்தை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு சபேரோ நிறுவன பங்குகளை பரிவர்த்தனை செய்ததாக செபி குற்றம் சாட்டி இருக்கிறது.
 
முருகப்பனின் ஐசிஐசிஐ வங்கியின், சென்னை மயிலாப்பூர் கிளையில் முருகப்பனுக்கும், வெள்ளையனுக்கும் சில பண பரிமாற்றங்கள் நடந்ததை தெரிவிக்கிறது. செபி இந்த கேள்வியை எழுப்பியதற்கு முருகப்பன் டிசம்பர் 20, 2013 அன்று கடிதம் மூலம் செபிக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் " ஒரு சொத்தை வங்குவதற்கு முன் பணமாகத் தான் வெள்ளையனுக்கு அந்த ஒரு கோடி ரூபாய் கொடுந்ததாக  கூறி இருக்கிறார்.  அந்த பணத்தை திரும்ப தந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முருகப்பன்.
 
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கோபாலகிருஷ்ணனுக்கு பணம் கொடுப்பதற்காக ஜோடிக்கப்பட்டதாக செபி தெரிவித்திருக்கிறது.  இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, வெள்ளையன் பிப்ரவரி 9, 2015 அன்று செபிக்கு தெரிவித்த தகவலில் முருகப்பனின் தாயின் சகோதரர்  தான் தன் தாத்தா என்று குறியிட்டிருக்கிறார். அதே போல் முருகப்பன் நவம்பர் 26, 2014 அன்று கருப்பையா தன் மருமகன் என்பதையும் தெரிவித்திருக்கிறார். இது இன்னும் விஷயத்தின் வீரியத்தை கூட்டுகிறது.
 
செபி சந்தேகிக்க முன் வைக்கும் காரணங்கள் : 
சொத்தை வாங்க செய்யபட்ட ஒப்பந்தத்தில் சொத்தின் மதிப்பு 1.20 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் அட்வான்ஸாக 83% தொகை ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டிருக்கிறது . 
கருப்பையா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்குமே முருகப்பனுடன் தனிப்பட்ட உறவுமுறை இருந்திருக்கிறது.
 
இருவருமே செபின் விசாரனை காலமான மே 15 2011 முதல் ஜூன் 15 2011 வரையான சபேரோ நிறுவன பங்குகளை வாங்கி இருக்கிறார்கள்.  ஆனால் இதற்கு முன் இவர்கள் இருவருமே சபேரோ நிறுவன பங்குகளில் வர்த்தகம் செய்யவில்லை. கோபாலகிருஷ்ணனின் பங்கு பரிவர்த்தனைகளில் 100% சபேரோ நிறுவனத்திலும், கருப்பையாவின் மொத்த போர்ட்ஃபோலியோவில் 64.15% சபேரோ நிறுவனத்தின் பங்குகள் இருந்திருக்கிறது.
 
எனவே மொத்தத்தில் கோபாலகிருஷ்ணன் சட்டத்திற்கு புறம்பாக 1,30,38,795 + 12% வட்டி 61,68,411 ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.  கருப்பையா சட்டத்திற்கு புறம்பாக 15,93,325+12% வட்டி 7,49,894 ரூபாய் சம்பாதித்திருக்கிறார். என்று செபி அறிவித்திருக்கிறது.  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மே 21 2015 அன்றிலிருந்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் பதில் அளிக்கலாம் என்று செபி தெரிவித்திருக்கிறது.  
 
இதற்கு முன் கூட இந்தியாவில் பல நிறுவனங்கள்  இதை விட பல மடங்கு பெரிய தொகையை  உள்ஆள் வர்த்தகம் செய்திருக்கின்றன. ஆனால் முருகப்பா குழுமம் பாரம்பரியமிக்க நல்ல நிறுவனம் என்பதால் இந்த செய்தியை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.  இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயார் என்றும், செபியின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார் வெள்ளையன். எனவே என்ன நடக்கும்  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் "  என்று முடித்தார் நாகப்பன்.
 
இந்த பிரச்னை பற்றி சென்னையின் பிரபல ஆடிட்டர்  எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்ட போது "செபி அமைப்பு இந்த நிறுவனத்தின் மீது ஒரு ஊகத்திலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சரியான அணுகு முறை அல்ல. ஒரு நல்ல பாரம்பரிய மிக்க நிறுவனத்தின் மீதே இப்படி நிரூபிக்க இயலாத அல்லது சரியான ஆதாரங்கள் இல்லாத ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறது என்றால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எப்படி இந்தியா மீது நம்பிக்கை வரும் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
 
இந்த அபத்தமான குற்றசாட்டை கூடிய  விரைவில் செபி மற்றும் செக்யூரிட்டிஸ் அப்பிளெட் டிரிபியூனல் பின் வாங்க வேன்டும். அது தான் இந்திய பங்குச் சந்தைக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் நல்லது"  என்றார்.
 
 மு.சா.கெளதமன்
 
 
 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ