|  | | அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள். அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப்.
பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், பிசினஸ் புள்ளிகள் என அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று எண்ணுகின்றனர்.
லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கினால் போதாது. பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனம் அது என்பதால், செல்லும் இடங்களில் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்துக்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். எனவே லேப்டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். நாம் லேப்டாப்பை எங்கேயும், எப்போதும் பயன்படுத்தி தங்கு தடையின்றி பல வேலைகளை முடிக்கலாம். இணையதளத்தின் துணையோடு லேப்டாப் ஒன்று இருந்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் உலகையே வலம் வரலாம். ஆகவேதான் இப்போதெல்லாம் லஞ்ச் பேக் சுமப்பவர்களைவிட லேப்டாப் பேக் சுமப்பவர்கள் அதிகம்.
லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, அதைத் தொடர்ந்து எந்த பிரேண்ட், என்ன கான்ஃபிகரேஷன், சாஃப்ட்வேர்கள் தேவை; அவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது போன்ற பல சந்தேகங்கள் எழக்கூடும். கவலையை விடுங்கள். உங்களின் சந்தேகங்களுக்கெல்லாம் விடைகிடைத்து விட்டது. தொழில்நுட்ப ரீதியாக, தெளிவாக பல படங்களுடன் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. லேப்டாப்புடன் எக்ஸ்டர்னல் டிரைவ்கள், கேமரா, மொபைல் போன், ஐபாட், ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்துவது, இன்டர்நெட் இணைப்பை பெறும் விதம் போன்றவையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
பல நுணுக்கமான விஷயங்களை, சுலபமாக கையாள்வதற்கு தகுந்த வகையில் தனித்தனி வழிமுறைகளோடு இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். லேப்டாப் பயன்பாட்டின் அடிப்படை ஞானமே இல்லாதவர்கள்கூட எளிதாக லேப்டாப்பை பயன்படுத்தலாம். மொத்தத்தில் லேப்டாப் குறித்த பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட, அனைவருக்கும் உபயோகமான தொழில்நுட்ப நூல் இது. |
|
|  | | ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் ஆட்டுவிக்கிறான்; மனிதன் ஆடுகிறான்’ - இன்றைய மனித வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்களாகிவிட்டன.
உலக உயிர்களின் தேடலில்தான் அதன் வாழ்வு அமைகிறது. அந்த வரிசையில், ஆறறிவு படைத்த மனிதனும் தன் வாழ்க்கைக்குரிய தேடலைத் தொடங்குகிறான். அதில் சில நேரங்களில் துவளும்போது, கடவுளையோ அதைச் சார்ந்த கொள்கைகளையோ துணைக்கு அழைத்துக் கொள்கிறான். அப்போதும் தோல்வி ஏற்பட்டால், அதையே விதி, கர்மம், பூர்வ ஜென்மத்து பலன் என்று, தன் இயலாமைக்கு தானே காரணம் சொல்லிக் கொள்கிறான்.
அறிவைத் தேடி மனித மனம் பயணிக்கும் பாதைகள்தான் விஞ்ஞானமும் மெய்ஞானமும். தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது, விஞ்ஞானம். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது, மெய்ஞானம். இரண்டுமே அறிவின் பயணங்களே.
நடைமுறை வாழ்க்கையைக் காண நல்லதொரு வாய்ப்பை நல்கும் இந்த நூலில், நாம் யார், இந்த உலகம் எப்படி உருவானது, உலகத்து உயிர்களில் மனிதனின் நிலை என்ன, கடவுள், மனிதன், மதம், ஆன்மா, விதி, ஆவி, மறுபிறவிகள், மோட்சம், நரகம், சடங்குகள், கனவுகள், பேய்-பிசாசு, சகுனங்கள், ஜோதிடம் போன்றவற்றின் பின்னணி என்ன? - இப்படி, மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வினாக்களுக்குரிய விடைகளை அறிவுபூர்வமான நிகழ்வுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் மா.பாபு.
மாய வாழ்க்கையின் திரையை சற்று விலக்கிப் பார்த்தால், நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை உணரலாம். மனித சிந்தனையில் எழும் ஐயங்களுக்கு விரிவான பதில் தரும் சரியான நூல். |
|
|  | | மருத்துவத்துறையிலும் அரிய சாதனை புரிந்தவர்களை உலக அளவில் அங்கீகரிக்கும் பரிசுதான் நோபல் பரிசு. மனிதர்களின் இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிட்ட பல ஆராய்ச்சியாளர்களைக் கண்டுபிடித்து கவுரவப்படுத்தியுள்ளது இந்த உயரிய பரிசு.
1901 முதல் 1950 வரை மருத்துவத் துறையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்களது ஆய்வுகளையும் தொகுத்து, ‘நோபல் வெற்றியாளர்கள் _ பாகம் 3’ என்ற தலைப்பில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்த நான்காம் பாகத்தில், 1951 முதல் 2000 வரை நடந்த மருத்துவ ஆராய்ச்சிகளையும், அதற்கு அடிப்படையாக விளங்கிய சுவாரசியமான நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்பாளர்களைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
|
|
|  | | இன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது.
ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின்
தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது. நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும்
வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. |
|
|  | | நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், புறநகரத்திலேயே டெலிபோன்கள் பத்து பதினைந்துதான் இருந்தன. ஒருவருக்கு போன் செய்யவேண்டும் என்றால், டெலிபோன் இணையத்தைக் கூப்பிட்டு மூன்று எண் நம்பரைச் சொன்னால் இணைப்புத் தருவார்கள்! ஆனால், இன்று இணையம் என்ற தொழில்நுட்பத்தில் இமாலய வளர்ச்சி!
இணையத்தின் பிரமிக்கவைக்கும் வளர்ச்சிதான் இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, சமீபத்திய ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், பிங் போன்ற வலைதளங்களை எவ்வளவு சாதகமாகப் பயன் படுத்தலாம், அவற்றின் பலன், தகவலைப் பரிமாறிக் கொள்ளும்போது தகவல் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது; தகவல்கள் எப்படி திருடப்படுகிறது; அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இணையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன ஆகிய நுணுக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தியர்களாகிய நாம் இணையத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம், எவ்வளவு பயன்படுத்தாமல் இருக்கிறோம், நம் வசதியைக் கொண்டு இன்னும் எவ்வளவு பயன்படுத்த முடியும் போன்றவற்றை விவரிப்பதோடு, ஆபாசப் படங்களோ, எழுத்துகளோ தங்கள் வலைதளங்களில் வராமலிருக்க நிறுவனங்களின் போராட்டம், அந்தப் போராட்டத்தால் நமக்கு முன் விரிந்திருக்கிற வேலை வாய்ப்பு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆண்டன் ஜோ பிரகாஷ் |
|
| |
| 1  | Displaying 1 - 5 of 5 |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |