|  | | ‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்!’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை.
‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்!’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடரின் தொகுப்பே இந்த நூல்.
விசாரணை என்ற பெயரில் முருகனும் அவர் மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்ரவதைகளைப் படிக்கையில், அதிகாரத் தரப்பின் வெறியாட்டம் நெஞ்சில் அறைகிறது. உள்ளத்து உண்மையாக - உணர்வுகளின் கதறலாக முருகன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் இந்த நூல் அப்படியே அம்பலப்படுத்துகிறது.
முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்... என, முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை.
முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல். |
|
|  | | மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல்.
உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார்.
குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். ஓய்வு எடுக்காத அவரது வேலை, சிந்தனை, செயல் என்று நூல் முழுக்க அவரோடு பழகிய, பணியாற்றிய, உடன் இருந்தவர்களின் நினைவு கூர்தல் நெகிழ வைக்கிறது.
மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது. வாழ்வியல் வடிவமாக, வரலாற்று முன்னுதாரணமாக விளங்கும் லெனின் காலாகாலத்துக்குமான வீரிய விதை! |
|
|  | | அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது.
மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையும், கியூபா நாட்டு ரூபாய் நோட்டில் அதிகார கையெழுத்திடும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்ததையும் நினைத்தாலே, இன்றைய இளைஞர்களுக்கு செயல் ஊக்கம் ஏற்படும்.
ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு விடுதலைக்கு, வேற்று நாட்டவரான சே குவாரா மீது நம்பிக்கை வைத்தது, கியூபாவில் அமைச்சராகும் அளவுக்கு அந்த நாட்டு மக்கள் அவர் மீது நட்பு வைத்தது, சொகுசான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும், காடுகளிலும் மலைகளிலும் சீறிப் பாய்ந்து, எதிரிகளை நேருக்குநேர் சந்தித்துப் போராடி தன்னை வருத்திக்கொண்டது, கடைசியாக அமெரிக்க உளவுப் படையால் வேட்டையாடப்பட்டு சுடப்பட்டது... இப்படி, சே குவாராவின் வாழ்க்கையில் ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்ச்சிகளை, எழுச்சிமிகு தமிழில், விறுவிறுப்பான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா.
கியூபாவில் புரட்சி செய்து வெற்றி அடைந்ததையும், காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சி செய்து தோல்வி அடைந்ததையும், சே குவாரா எப்போதும் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. விடுதலைப் புரட்சிக்காக விதைக்கப்பட்ட விதைகள் என்றே அவற்றைக் கருதியிருப்பது, இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்.
மக்கள் விரும்பிய போராளி சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். |
|
|  | | பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்!
வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா!
அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை!
உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல்.
ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி. |
|
|  | | பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது.
குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார்.
மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும்,
ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார்.
ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும். |
|
| |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |