|  | | பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும்,
பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன்.
இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது.
உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது. |
|
|  | | மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை.
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.
அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு! |
|
|  | | இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன.
அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல... பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லைன் சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி.
ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.
எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும் ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன.
ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி! |
|
|  | | இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம்.
விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக்
கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என
கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத்
தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன்.
இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
|
|
|  | | மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்!
‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது.
அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்!
காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.
அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது. |
|
| |
1 2 3 4 5 ... 87 88   | Displaying 1 - 5 of 437 |
|
|
|
You have 0 item in your cart
|
ஷிப்பிங் சார்ஜஸ்: புத்தக விலையுடன் ஒரு புத்தகம் என்றால்
ரூபாய் 20ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ரூபாய் 10ம் சேர்க்கப்படும்.
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |