விகடனின் வாசக நெஞ்சங்களுக்கு... அன்பும் பிரியமும் 'தானே' புயல் தாக்குதலில் சிக்கி உருக்குலைந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டலாம் என்ற எண்ணத்தை விகடன் தெரிவித்ததுமே... உங்களில் ஆயிரக்கணக்கானோர் மளமளவென நிதி அனுப்பிக் குவிக்கத் தொடங்கினீர்கள். விகடன் குழுமம் தன் பங்காக ` 10 லட்சம் அளித்துத் தொடங்கிவைத்த நிவாரண உதவிக் கணக்கு, உங்களின் இதயம் நிறைந்த நன்கொடையால், 1 கோடியே 35 லட்சத்து 71 ஆயிரத்து 288 ரூபாயாக உயர்ந்து நின்று பிரமிக்கச் செய்தது. அதோடு, தாயுள்ளம்கொண்ட ஓவியக் கலைஞர்கள் தங்களின் படைப்புகளைத் தானமாகத் தர... அவற்றைக் கண்காட்சியாக்கி விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை ` 63 லட்சத்து 29 ஆயிரத்து 593. நிதி அளித்த நல் இதயங்கள் பற்றிய விவரங்களை www.vikatan.com/thane என்ற இந்த இணையதளத்தில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், வந்து குவிந்த நிதியில் 18 லட்சத்து 2 ஆயிரத்து 319 ரூபாயை அளித்தோர் பற்றிய விவரங்களை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. இதில், நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் செலுத்தப்பட்ட தொகை ` 1,59,557. இவ்வாறு செலுத்திய வாசகர்கள் 51 பேர். இதுபோக, ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் ஆன்லைன் மூலமாக வாசன் அறக்கட்டளைக்கு டிரான்ஸ்ஃபர் செய்யயப்பட்ட தொகை ` 16,42,762. இவ்வாறு மாற்றம் செய்தவர்கள் 258 பேர். 'தயவுசெய்து உடனே உங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பிவையுங்கள் என்று மீண்டும் மீண்டும் இங்கே நாங்கள் வேண்டுகோள் வைத்த பிறகும், இந்த 309 வாசகர்களைப் பற்றிய தகவல் இதுவரை எங்களை வந்து சேரவில்லை. எனவே, அன்பு வாசகர்களே... நிவாரண நன்கொடை அனுப்பியும் அந்தப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தயவுசெய்து இங்கே அளிக்கப்பட்டு பட்டியலைப் பாருங்கள். நீங்கள் அனுப்பிய தொகை மற்றும் தேதி ஆகியவை இங்கே அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் எங்கே பொருந்துகிறதோ... அந்த இடத்தில் 'க்ளிக்' செய்தால், உங்களைப் பற்றிய விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கான சுருக்கமான ஒரு ஆன்லைன் படிவம் தோன்றும். அதைப் பதிவு செய்து 'சப்மிட்' செய்தால் போதுமானது. சிறப்புமிக்க சாதனைப் பங்களிப்பின் அணிவகுப்பில் உங்கள் அனைவரின் விவரங்களும் இடம்பெற்றால்தான், தானே மீட்பு நடவடிக்கைகளை உங்கள் சார்பில் எடுத்து நிறைவேற்றி வரும் விகடனுக்கு முழுமையான நிறைவு ஏற்படும். உங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அது குறித்து info@vasancharitabletrust.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் எழுதிக் கேட்கலாம். கடந்த ஓர் ஆண்டாக வாசகர்கள் அளித்த நிதியைக்கொண்டு விகடன் நிறைவேற்றி வரும் நலத் திட்டங்கள் குறித்த செய்திகளை விகடன் குழும இதழ்கள் மூலம் நீங்கள் அறிந்து வந்திருப்பீர்கள். நமது இந்தக் கூட்டு முயற்சிக்கான சிலிர்ப்பூட்டும் கிளைமாக்ஸ் ஒன்றும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதுபற்றிய விவரம்... விரைவில்!
அதுவரை நன்றியுடன்.....