பொது: முக்கியக் கிரகங்களான குருவும் சனியும் அனுகூலமாக உலவாததால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் விசேடமான நற்பலன்களைப் பெற வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. ஜாதக பலம் கூடியிருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். மனத்தில் ஏதேனும் கவலை இருந்து வரும். சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். டிசம்பர் 9 முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் சங்கடங்கள் குறையத் தொடங்கும். நீண்ட நாளைய எண்ணங்களில் ஒன்றிரண்டு ஈடேறும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நெடுந்தொலைவுப் பயணம் நலம் தரும். மொத்தத்தில் புத்தாண்டின் பின்பகுதி சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்து வரும். மக்களால் மன அமைதி கெடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக்கொடுத்துப் பழகி வருவது நல்லது. டிசம்பர் 9 முதல் உடல் நலம் சீர்பெறும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலனில் அபிவிருத்தி காணலாம். உடன் பிறந்தவர்கள் உதவ முன்வருவார்கள்.
பொருளாதார நிலை: குரு 6-லும், சனி 2-லும் இருப்பதால் பொருளாதாரநிலை சீராக இராது. தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட வேண்டிவரும். புதிய துறைகளில் ஈடுபட வேண்டாம். டிசம்பர் 9 முதல் பணப் பிரச்னை குறையத் தொடங்கும்.
நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. ஆகஸ்ட் 9 முதல் செவ்வாய் வலுப்பெறுவதால் நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஓரளவு ஆதாயமும் கிடைத்து வரும்.
தொழில்: செய்தொழிலில் அபிவிருத்தி காண அரும்பாடுபட வேண்டிவரும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. அன்றாடப் பணிகளிலும் கூட அதிகம் அக்கறை தேவை. டிசம்பர் 9 முதல் குரு பலம் கூடுவதால் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கூட்டுத் தொழிலிலும் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைஞர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் ஓரளவு நலம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்புக் கூடுமளவுக்குப் பயனிராது.
மாணவர்களுக்கு: கஷ்டப்பட்டுப் படித்தால்தான் முன்னேற்றம் காண முடியும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாதர்களுக்கு: பிரச்னைகள் கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. டிசம்பர் 9 முதல் நல்ல திருப்பத்தைக் காணலாம்.
அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6.
தெய்வம்: பராசக்தி.
பரிகாரம்: செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். துர்க்கையையும் விநாயகரையும் வழிபடுவதன் மூலம் ராகு, கேதுக்களால் விளையக்கூடிய சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம். புற்றுக்குப் பால் ஊற்றுவது நல்லது. வேத விற்பன்னர்களுக்கு உதவவும். ஆஞ்சநேயரை வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கும், ஊனமுள்ளவர்களுக்கும் உதவுவது நல்லது. |