பொது: குரு பலம் கூடியிருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மன உற்சாகம் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். ஜன்மச் சனியின் காலமிது என்றாலும் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையவே செய்யும். ராகு 6-ல் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். டிசம்பர் 9 முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பிரச்னைகள் கூடும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். பொதுவாக இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் முன்பகுதி விசேடமானதாகும். பின்பகுதியில் விழிப்புடன் இருப்பது நல்லது.
ஆரோக்கியம், குடும்பம்: தலை, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. குடும்ப நலம் சீராகவே இருந்து வரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை ஒருநாள் போல் மறுநாளிராது.
பொருளாதார நிலை: குரு 5-ல் இருப்பதால் பண நடமாட்டம் திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். டிசம்பர் 9 முதல் குரு 6-ஆமிடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
நிலபுலங்கள்: செப்டம்பர் 25 முதல் டிசம்பருக்குள் சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். ஜனவரி 27 முதல் மார்ச் 6 வரையிலும் உள்ள கால கட்டமும் நிலபுலங்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் ஈடுபட்டு வெற்றி பெறச் சிறப்பான காலமாகும்.
தொழில்: உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள், அறப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற இனங்கள் ஆக்கம் தரும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். டிசம்பர் 9 முதல் குரு பலம் குறைவதால் சொந்தத் தொழில் செய்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஜன்மத்தில் சனி இருப்பதால் சோர்வுக்கு இடம் தரலாகாது.
மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புத்தாடை, அணிமணிகள் சேரும். மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும்.
அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், சிவப்பு, கறுப்பு.
எண்கள்: 1, 3, 4, 6, 9.
தெய்வம்: தட்சிணாமூர்த்தி, முருகன்.
பரிகாரம்: சனிக்கிழமை சாயங்கால நேரத்தில் சனீஸ்வரரை வழிபடுங்கள். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். ஏழை, எளியவர்களுக்கும் ஊனமுள்ளவர்களுக்கும் உதவி செய்யுங்கள். |