பொது: இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் குரு பலம் ஓங்கியிருப்பதாலும், ராகுவின் சஞ்சாரம் ஆண்டு முழுவதும் அனுகூலமாக இருப்பதாலும் விசேடமான நன்மைகளைப் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். தெய்வப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். சாதுக்கள், மகான்களின் தொடர்பு கிட்டும். மன உற்சாகம் கூடும்.
5-ல் சனி இருப்பது குறை ஆகும். சனிப் பிரீதி செய்து வருவது நல்லது. வருடம் முழுவதும் கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும்.
ஆரோக்கியம், குடும்பம்: ஜன்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல் நலம் சீராகவே இருந்து வரும். குடும்ப நலம் சிறக்கும். மக்களாலும், தந்தையாலும், உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவை. 5-ல் சனி இருப்பதால் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சனியைக் குரு பார்ப்பதால் அதிகம் சங்கடமிராது. டிசம்பர் 9 முதல் குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் மக்கள் நலம் பாதிக்கும். உடன் பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும்.
பொருளாதார நிலை: 9-12-2008 வரை குரு வலுத்திருப்பதால் பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். வரவேண்டிய பாக்கிப்பணம் வசூலாகும். அதன்பிறகு பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் குறையும்.
நிலபுலங்கள்: ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலும் நிலபுலங்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்களும் சேரும். அதன்பிறகு கேது 4-ல் உலவும் நிலை அமைவதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும்.
தொழில்: 9-12-2008 வரையிலும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அதன் பிறகு விரும்பத்தகாத இடமாற்றம், நிலை மாற்றம் ஆகியவை ஏற்படும். போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தொழில்களில் வளர்ச்சி காணலாம். கலைஞ்ரகளுக்கு மாமூலான வளர்ச்சி பாதிக்காது. தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். பயிர்த்தொழிலில் வளர்ச்சி காண்பது அரிது. நாற்கால் ஜீவன்களுக்குச் சேதம் உண்டாகும். அரசாங்கப் பணியாளர்களுக்கு வளர்ச்சிக்கான மார்க்கம் புலப்படும். வியாபாரத்தில் முழுக் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: 9-12-2008 வரையிலும் அனுகூலமான போக்குத் தென்படும். அதன்பிறகு குரு 10-ஆமிடம் மாறி, பலம் குறைவதால் படிப்பில் முழு அக்கறை செலுத்தினால்தான் வளர்ச்சி காணமுடியும். இல்லையென்றால் படிப்புத் தடைப்படும். மறதியால் பாதிப்பு உண்டாகும்.
மாதர்களுக்கு: சுக்கிர பலத்தால் உற்சாகமான சூழ்நிலை நிலவி வரும். முக்கியமான எண்ணங்களும் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:
திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: செந்நிறம், கறுப்பு, வெண்மை.
எண்கள்: 1, 3, 4, 6, 9.
தெய்வம்: சுப்பிரமணியர், சூரிய நாராயணர், தட்சிணாமூர்த்தி.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு விநாயகரை வணங்கவும். |