
‘அடியுரமா மட்கின சாணமும் கடலைப்புண்ணாக்கும்தான் போடுறேன். எந்த ஒரு ரசயான உரமும் பயன்படுத்துற தில்லை. பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கிறேன்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி காசி, மலர் சாகுபடியில் அனுபவம் பெற்றவர். இவர் இயற்கை முறையில் செண்டுமல்லி, கோழிக்கொண்டைப்பூ சாகுபடி செய்து, கணிசமான வருமானம் பார்த்து வருகிறார். இவருடைய அனுபவங்களை அறிந்துகொள்ள, ஒரு மாலைப்பொழுதில் இவரை சந்திக்கச் சென்றோம்.
தென்காசி மாவட்டம், வீரசிகாமணியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள அருணாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது காசியின் பூந்தோட்டம். காற்றில் அழகாக அசைந்தாடிக்கொண்டிருந்த பூக்கள், நம் மனதைப் பரவசப்படுத்தியது. பூக்களை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காசி, மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், “நாங்க பூர்வீகமா விவசாயக் குடும்பம். தாத்தா, அப்பா காலத்துல நெல், காய்கறிகள்தான் அதிகம் சாகுபடி செஞ்சாங்க. அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்ச நான், அதுக்குப் பிறகு அப்பாவுக்கு ஒத்தாசையா விவசாயத்துல இறங்கிட்டேன். இதுக்கிடையில பால் வியாபாரமும் செஞ்சு கிட்டு இருந்தேன்.

‘விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும்... நெல், காய்கறிகள் மட்டுமே சாகுபடி செஞ்சா, உழைப்புக்கேத்த லாபம் பார்க்க முடியாது. பூக்கள் விளைவிச்சா, தினமும் வருமானம் பார்க்கலாம். கணிசமான லாபம் கிடைக்கும்’னு இதுல அனுபவம் உள்ள சில விவசாயிகள் சொன்னாங்க.
அவங்க சொன்னதை மட்டுமே நம்பி அவசரப்பட்டு இறங்கிடக் கூடாது. களத்துல உள்ள யதார்த்த நிலையைத் தெரிஞ்சுக் கணும்ங்கறதுக்காக, பூச்சந்தைகளுக்குப் போயி தொடர்ச்சியா பல நாள்கள் கண்காணிச்சேன். எந்தெந்தப் பூக்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு இருக்கு, உத்தர வாதமான விலை கிடைக்குதுனு அங்கவுள்ள வியாபாரிகள்கிட்டயும் விசாரிச்சேன்.
இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் செண்டுமல்லி, கோழிக்கொண்டைப்பூ, அரளி, மாசிப்பச்சை, துளசிக்கு அதிக தேவை இருக்குனு தெரிய வந்துச்சு. அதனால தலா 50 சென்ட்ல ரசாயன முறையில செண்டு மல்லி, கோழிக்கொண்டைப்பூ, அரளி, மாசிப்பச்சை, துளசி சாகுபடி செஞ்சேன். சுழற்சி முறையில தினம்தோறும் பூ பறிக்குற மாதிரி பராமரிச்சேன். அமோகமான விளைச்சல், கணிசமான லாபம் கிடைச்சது. அந்தச் சமயத்துல சந்தைகள்ல பூக்களுக்கு அதிக தேவை இருந்துச்சு. அதனால எங்க ஊர்ல நானே பூ கமிஷன் மண்டி ஆரம்பிச்சு, மற்ற விவசாயிகள்கிட்டயிருந்தும் பூக்களை வாங்கி, பூக்கடைகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். 28 வருஷம் பூ கமிஷன் மண்டி நடத்தினேன். இப்ப வயசாகிப் போனதுனால, கமிஷன் மண்டி தொழிலை கைவிட்டுட்டு, பூ சாகுபடி மட்டும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், இயற்கை விவசாயத்தில் செண்டுமல்லி, கோழிக் கொண்டைப்பூ சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“6 வருஷங்களுக்கு முன்னால எங்க பகுதியில உள்ள ஒரு விவசாயியோட பூந்தோட்டத்துக்குப் போனேன். செண்டு மல்லிப் பூக்கள் திரட்சியா இருந்துச்சு. ‘என்ன உரம் போடுறீங்க’ன்னு அவர்கிட்ட கேட்டேன். ‘அடியுரமா மட்கின சாணமும் கடலைப்புண்ணாக்கும்தான் போடுறேன். எந்த ஒரு ரசயான உரமும் பயன்படுத்துற தில்லை. பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கிறேன். செடிகள் நல்லா ஊக்கமா வளர்ந்து, நல்ல விளைச்சல் கொடுக்குறதுக்காக... பஞ்சகவ்யாவும் மீன் அமிலமும் தெளிக்குறேன். நீங்களும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சுப் பாருங்க. உங்க தோட்டத்துலயும் திரட்சியான பூக்களைப் பார்க்க முடியும்’னு அந்த விவசாயி சொன்னார்.
முதல்கட்டமா 25 சென்ட்ல செண்டுமல்லி, 25 சென்ட்ல கோழிக்கொண்டைப்பூவையும், சோதனை முயற்சியா இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பார்த்தேன். அவர் சொன்னது மாதிரியே பூக்கள் திரட்சியா இருந்துச்சு. நிறமும் நல்லா பளிச்னு பார்வையா இருந்துச்சு. அதுக்குப் பிறகு, முழுமையா இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இந்தத் தோட்டத் தோட மொத்த பரப்பு 3 ஏக்கர். 50 சென்ட்ல செண்டுமல்லி, 50 சென்ட்ல கோழிக்கொண்டைப்பூ பறிப்புல இருக்கு. இதே மாதிரி தலா 50 சென்ட்ல செண்டு மல்லி, கோழிக்கொண்டைப்பூ நாற்று நட்டு 2 நாள் ஆகுது. மீதி ஒரு ஏக்கர் நிலத்துல துளசி நடவு செய்ய நிலத்தைத் தயார்படுத்தி வச்சிருக்கேன்” என்று சொன்னவர், செண்டுமல்லி மற்றும் கோழிக்கொண்டைப்பூக்களுக்கான விற்பனை வாய்ப்பு மற்றும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“செண்டுமல்லியைப் பொறுத்தவரைக் கும் மல்லிகைப் பூ மாதிரி தினப் பறிப்பா பறிக்கணும்னு கட்டாயம் கிடையாது. இரண்டு, மூணு நாளுக்கு ஒரு தடவை பறிக்கலாம். இடைவெளி விட்டுப் பறிக்கிறதுனால பூ பெருவெட்டாத்தான் ஆகுமே தவிர, வாடாது. அதே நேரத்துல ரெண்டு, மூணு நாள்கள் இடைவெளி விட்டுப் பறிச்சு, மொத்தப் பூவையும் மூட்டை மூட்டையா சந்தையில இறக்குனா நல்ல விலை கிடைக்கும்னு சொல்ல முடியாது. இயன்றவரைக்கும் தினமும் பறிச்சு கொண்டு போனாதான், சந்தையில நம்ம பூவுக்குத் தேவை இருக்கும். வியாபாரிங்க நம்மளை எதிர்பார்ப்பாங்க. கோழிக்கொண்டப்பூவை பொறுத்த வரைக்கும் வாரம் ஒருமுறைதான் பறிக்க முடியும்.
என்னோட தோட்டத்துல விளையுற பூக்களைத் தென்காசி பூ மார்க்கெட்லதான் விற்பனை செய்யுறேன். காலையில 6 மணிக்கெல்லாம் பறிக்க ஆரம்பிச்சிடுவோம். 8 மணிக்குள்ள பறிச்சு 9.30 மணிக்குள்ள பூச்சந்தையில மூட்டையை இறக்கிடுவோம். 10 மணிக்குள்ள நடக்குற ஏலத்துலதான் நல்ல விலை கிடைக்கும். கதம்பம், பூ மாலைகள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைப்பூவோட பங்கு அதிகம். செண்டு மல்லி இல்லாத பூமாலையைப் பார்க்க முடியாது. சாதாரண நாள்களைத் தவிர வெள்ளி, செவ்வாய், முக்கியப் பண்டிகைகள், விசேஷங்கள், முகூர்த்த நேரங்கள்ல நல்ல விலை கிடைக்கும்.
நல்லதுக்கு மட்டுமல்லாம துக்க நிகழ்வுகளுக்கும் செண்டுமல்லி, கோழிக் கொண்டைக்குத் தேவை இருக்குங்கிறதுனால, எப்பவுமே விற்பனை வாய்ப்பு நல்லா இருக்கும். செண்டுமல்லி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோழிக்கொண்டைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் கீழ விலை குறைஞ்சதே கிடையாது. அதிகபட்சமா செண்டுமல்லி 120 ரூபாய் வரையிலும், கோழிக்கொண்டைப்பூ 80 ரூபாய் வரையிலும் விலை போகும். அதனால, இதுல நஷ்டம் ஏற்படுறதுக்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.

போன தடவை 50 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்ச செண்டுமல்லியில இருந்து 2,550 கிலோ பூக்கள் மகசூல் கிடைச்சது. இன்னொரு 50 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்ச கோழிக்கொண்டை செடிகள்ல இருந்து 3,600 கிலோ பூக்கள் மகசூல் கிடைச்சது. செண்டுமல்லியில ஒரு கிலோவுக்கு சராசரியா 40 ரூபாய் வீதம் 1,02,000 ரூபாயும், கோழிக்கொண்டைப்பூ விற்பனை மூலமா, ஒரு கிலோவுக்கு சராசரி விலையா 25 ரூபாய் வீதம் 90,000 ரூபாயும் வருமானம் கிடைச்சது.
ஆக, ஒரு ஏக்கர் மலர் சாகுபடி மூலம் மொத்தம் 1,92,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல எல்லாச் செலவுகளும் போக 1,41,500 ரூபாய் லாபம் கிடைச்சது” என முகம் மலரத் தெரிவித்தார்.
தொடர்புக்கு, காசி,
செல்போன்: 97875 38533
எந்தப் பட்டத்திலும் நடலாம்...
இப்படித்தான் சாகுபடி!
தலா 50 சென்ட் பரப்பில் செண்டுமல்லி, கோழிக்கொண்டைப்பூ சாகுபடி செய்ய விவசாயி காசி சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
செண்டுமல்லி, கோழிக்கொண்டைப்பூ சாகுபடி செய்ய வடிகால் வசதியுள்ள மண்வகை ஏற்றது. ஆண்டு முழுவதும் எந்தப் பட்டத்திலும் நடவு செய்யலாம் என்றாலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்யும் என்பதால் அந்த மாதத்தில் நடவு செய்தால், வளர்ச்சி வேகமாக இருக்கும். தேர்வு செய்த பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே 10 நாள்கள் இடைவெளியில், 3 முறை உழவு செய்ய வேண்டும். 3-வது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் மாட்டு எரு போட்டு, 4-வது முறை உழவு ஓட்ட வேண்டும்.

செண்டு மல்லியைப் பொறுத்தவரையில் நாற்றுக்கு நாற்று 1 அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். கோழிக்கொண்டையைப் பொறுத்தவரையில் நாற்றுக்கு நாற்று 1 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் நட்டால்தான் செடி வளரும்போது ஒன்றையொன்று உரசாது. செடி உரசினால் பெருவெட்டான பூக்கள் கிடைக்காது. 18 முதல் 22 நாள்கள் வரையிலான நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. நட்ட அன்றே உயிர் நீரும், பின்னர் ஈரப்பதத்தைப் பொறுத்தும் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும்.
அதிக தண்ணீர் தேங்கினால் நாற்று அழுகிவிடும் என்பதால் தண்ணீர் மேலாண்மையில் கவனம் தேவை. நாற்று நடவு செய்வதற்கு முன்பு, ஒரு பாத்திரத்தில் பஞ்சகவ்யாவை ஊற்றி, அதில் நாற்றுகளின் வேர்ப்பகுதியை நனைத்து எடுத்து நிழலில் 10 நிமிடங்கள் உலர்த்திய பிறகு, நடவு செய்ய வேண்டும். இப்படி நேர்த்தி செய்து நாற்றுகளை நட்டால் வேர் அழுகல் நோய் வராது. 10-வது நாளில் இருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யாவை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலக்க வேண்டும்) கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 15-வது நாளில் இருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 10, 25 மற்றும் 35-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். களை எடுக்கும்போது செடிகளின் தூர்களில் மண் அணைக்க வேண்டும். இதனால் நன்கு வேர் பிடிப்பதுடன், செடியின் தாங்கு திறனும் அதிகரிக்கும். கோழிக்கொண்டைப்பூ செடிகளைப் பொறுத்தவரையில் தேவையைப் பொறுத்து களை எடுக்கலாம்.
செண்டுமல்லியில் 30 முதல் 35-வது நாளில் மொட்டுகள் தென்படும். அந்த நேரத்தில் பயிர் வளர்ச்சியூக்கியாக 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மீன் அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் தரமானதாகவும், பெருவெட்டாகவும் கிடைக்கும். 40 முதல் 45-வது நாளில் பூ பூக்கத் தொடங்கும். 45 முதல் 50-வது நாளில் இருந்து பூக்களைப் பறிக்கத் தொடங்கலாம். 60-ம் நாளில் இருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக மகசூல் கிடைக்கும். கோழிக்கொண்டையில் 75 முதல் 80-வது நாளில் இருந்து பூக்கள் பறிக்கத் தொடங்கலாம். அதைத் தொடர்ந்து அடுத்த 90 நாள்கள் வரை மகசூல் கிடைக்கும்.

பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் செண்டுமல்லி!
வாழை, பப்பாளி, தென்னை, சம்பங்கி, கொய்யா என எந்த ஒரு பயிருக்கும் ஊடுபயிராகச் செண்டுமல்லி சாகுபடி செய்யலாம். முதன்மை பயிரினைத் தாக்கும் நூற்புழுக்களை இவை கட்டுப்படுத்தும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைச் சாப்பிட்டு அழிக்கக்கூடிய வண்டுகளைச் செண்டுமல்லி கவர்ந்து இழுக்கும். இதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எல்லாப் பயிருக்கும் வேலி ஓரங்களிலும் செண்டுமல்லி நடவு செய்யலாம். ஆடு, மாடு சாப்பிடாது என்பதால் கால்நடைகளால் பாதிப்பு இல்லை. ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம் உபரி வருமானமும் பார்க்கலாம்.
புழுத் தாக்குதலுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!
மொட்டு விடும் நேரத்தில் ஒருவித பச்சை நிறப் புழுக்களின் தாக்குதல் இருக்கும். இவை இலைகள், பூக்களில் சாற்றை உறிஞ்சும். இதன் தீவிரம் அதிகமாகும்போது பூக்கள் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த 30-வது நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வேப்பங்கொட்டைக்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைத்து வடிகட்டினால் ‘வேப்பங்கொட்டைக் கரைசல்’ தயார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாற்று நட்ட 20-வது நாளில் இருந்தே 10 நாள் இடைவெளியில் கைத் தெளிப்பானால் தெளித்து வரலாம்.