ஓவியம்: ஹரன்
அடைமழை காரணமாக அன்று, சீக்கிரமே வியாபாரத்தை முடித்துவிட்ட, ‘காய்கறி’ கண்ணம்மா தோட்டத்துக்கு வந்துவிட்டார். அவரிடம் பேசிக்கொண்டே, மாடுகளுக்குத் தீவனங்களைத் துண்டு களாக்கிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.
“என்ன கண்ணம்மா... புதுச்சேலையெல்லாம் உடுத்தி கலக்குறியே... எந்தக் கடையில எடுத்தது? என்று தீபாவளி விசாரிப்பைப் போட்டார், ஏரோட்டி.
அந்தக் கதையை ஏன்யா கேக்குறே... என் வீட்டுக்காரருக்கு சிநேகிதக்காரர் ஒருத்தர் வாடகைக் கார் ஓட்டிட்டு இருக்கார். அவர், மதுரைக்கு துணி எடுக்கப்போறேன்னு சொன்னதும், இவருக்கும் மதுரை டவுன்ல துணி எடுக்க ஆசை வந்துடுச்சு. என்னையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு கிளம்பிட்டார். ஒரே ஜன நெரிசடி. கடைவீதிக்கு, ஒரு கிலோ மீட்டர் முன்னயே காரை நிப்பாட்டிட்டு நடந்து போக வேண்டியதாயிடுச்சு. உள்ளாற துணி எடுத்துக்கிட்டு, இருக்குறப்பவே மழை பிய்ச்சு ஊத்திடுச்சு. கடையைவிட்டு வெளியில வரவே முடியல. ஒரு வழியா நனைஞ்சுக்கிட்டே காருக்கு வந்து, ஊர் திரும்பினோம். ‘கோவில் நகரம்’, ‘தூங்கா நகரம்’னு சொல்றாங்க. அரை மணி நேரம் மழை பேய்ஞ்சா ஊரே நாறிடுது. முழங்கால் அளவுக்கு தண்ணி ரோட்டுல ஓடுது. புதுத்துணி இருக்குற பையை நனையாம தூக்கிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு.
‘ஏண்டா போனோம்’னு ஆகிப்போச்சு என்று புலம்பினார்.
“அதுக்குத்தான் எப்பவும் இந்த மாதிரி கிறுக்குப் பிடிச்சு அலையக்கூடாது. இந்தக் காலத்துல சின்ன ஊர்கள்லகூட, டவுன்ல கிடைக்கிற பொருட்கள் எல்லாம் வந்தாச்சு. என்ன... 5, 10 ரூபா கூடுதலா இருக்கும். இதுக்காக நாம 50, 100 செலவு பண்ணிக்கிட்டு, எதுக்கெடுத்தாலும், டவுன் பக்கம் ஓடிட்டிருக் கிறதா?” என்ற ஏரோட்டியின் கேள்வியைக் காதில் வாங்காத காய்கறி,“ஆமா, நீ புதுத்துணி ஏதும் எடுக்கலையா?’’ என்றார்.

“சம்சாரிக்கென்ன தீபாவளி... நமக் கெல்லாம் பொங்கல் மட்டும்தான். இருந்தாலும் பேரன், பேத்திகளுக்கு துணியும் மத்தாப்பும் வாங்கிக் கொடுத்தேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வந்து சேர்ந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வந்த வேகத்தில் ஒரு செய்தியை ஆரம்பிக்க... மாநாடு மேலும் களைகட்ட ஆரம்பித்தது.
“திண்டுக்கல் பக்கத்துல இருக்குற காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகத்துல, புவி அறிவியல் மையம் செயல்பட்டுட்டு இருக்கு. இந்த மையம் நிலச்சரிவுக்கான காரணங்கள் பத்தி தொலை நுண்ணுணர்வு மூலமாவும் புவி தகவல் அமைப்பு மூலமாவும் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. கொஞ்ச நாளா நீலகிரியில இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் உள்ள மலைச் சாலைகள்ல ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க. பாறைகள் மீது இயற்கையா ஏற்படுற உந்து விசையும், எதிர்விசையும் சமமா இருந்தா நிலச்சரிவு ஏற்படாதாம். உந்து விசை அதிகரிக்கிறப்போதான் நிலச்சரிவு ஏற்படுமாம். மழை அளவு, மழைநீர் ஓட்டம், மண் வகை, மண் ஆழம், பாறைகளோட கடினத்தன்மை, நில அமைப்பு, நிலப்பயன்பாடு, நிலத்தை மக்கள் பயன்படுத்துற விதம்னு உந்துவிசை அதிகரிக்கிறதுக்கு நிறைய காரணங்கள் இருக்குதாம். இப்படி உந்துவிசை அதிகரிக்கிற மலைப்பகுதிகள்ல வெட்டிவேரை இடைவெளி இல்லாம அதிகமா வளர்க்கறப்போ... நிலச்சரிவு வர்றதில்லையாம். இதை ஆராய்ச்சியில உறுதிப்படுத்தியிருக்காங்க” என்று சொன்னார் வாத்தியார்.
“அப்போ... அரசாங்கமே மலைப்பாதைகள்ல வெட்டிவேரை நட்டுடலாமே...” என்று காய்கறி சொல்ல...
“ம்ம்ம்... இதுலயும் கோடிகள்ல கமிஷன் அடிக்கிற மாதிரி இருந்தா சட்டுபுட்டுனு செய்வாங்க. இதுலயும் பெரிய அளவுல கமிஷன் கிடைக்கும்னு வாத்தியாரய்யா கணக்குப் போட்டு ஒரு கதையை எடுத்துவிட்டா... கரைவேட்டிங்க களத்துல இறங்கிடும் என்று சொல்லி சிரித்த ஏரோட்டி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில விவசாயிகளுக்காக ஆரம்பிச்ச குளிர்பதனக்கிடங்கையே, தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்காங்க. இந்த லட்சணத்துல மக்களுக்குப் பலன் உள்ள விஷயங்கள இவங்களாவது செய்றதாவது? என நொந்து கொண்டார் ஏரோட்டி.
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுய்யா..?” என்று காய்கறி கேட்க...
“பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் பகுதிகள்ல மானாவாரியிலும், இறவையிலும் தக்காளி அதிகளவுல விளையுது. இந்த விவசாயிகளுக்கு பாலக்கோடு தக்காளிச் சந்தைதான் பெரிய சந்தை. இங்கிருந்து, சென்னை, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருநெல்வேலினு பல ஊர்களுக்கு தக்காளி போகுது. தக்காளி, சில நேரங்கள்ல அதிக வரத்தால விலை குறைஞ்சுடும். அதுக்காக, ‘ஒரு குளிர்பதனக்கிடங்கு வேணும்’னு ரொம்ப நாளா விவசாயிகள் கேட்டதுல, 2011-ம் வருஷம், பாலக்கோடுல, ஒழுங்கு முறை விற்பனை மையத்தையும் தக்காளி குளிர்பதனக்கிடங்கையும் ஆரம்பிச்சாங்க. ஆனா, இங்க தக்காளியை வைக்கவிடாம வியாபாரிகள் முட்டுக்கட்டை போட்டு, விவசாயிகள மிரட்டினாங்க. இருந்தாலும், விவசாயிகள் பலரும் பயன்படுத்திட்டுதான் இருந்தாங்க. அடுத்தக்கட்டமா அதிகாரிகள ‘சரி’ பண்ணிட்டாங்க போல வியாபாரிங்க. ‘குளிர்பதனக்கிடங்குக்கு கொஞ்ச பேர் மட்டும்தான் தக்காளி கொண்டு வர்றாங்க. இது மூலமா கிடைக்கிற குறைஞ்ச வருமானத்தை வெச்சு குளிர்பதனக்கிடங்கை பராமரிக்க முடியலை’னு சொல்லி, ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு, மாச வாடகைக்கு விட்டுட்டாங்க, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள். அந்த நிறுவனம், விவசாயிகள் கொண்டு வர்ற தக்காளியை வைக்க விடறதில்லைனு புகார் படிக்கிறாங்க விவசாயிங்க. பசுமை விகடன் நிருபருங்க இதைக் கவனத்துல எடுத்துக்கிட்டு விசாரிச்சா நல்லாயிருக்கும் என்றார், ஏரோட்டி.
நீ சொல்லிட்டா... விசாரிக்காம இருப்பாங் களா! என்று சொன்ன வாத்தியார்,
“கிருஷ்ணன்கோவில்ல இருக்குற கலசலிங்கம் பல்கலைக்கழகத்துல பி.டெக் படிக்கிற எம். விக்னேஷ், எஸ். முத்துராம், பி. முருகன், வேணுகோபாலன்னு நாலு மாணவர்கள் போர்வெல்கள்ல குழந்தைகள் விழாம தடுக்குறதுக்காக ஒரு பிரத்யேக மூடியை கண்டுபிடிச்சுருக்காங்க. வழக்கமா போர் போட்ட உடனே, சாக்கைப் போட்டு கட்டி வெப்பாங்க. இல்லேனா கல்லைப் போட்டு மூடி வெப்பாங்க. இந்த சாக்கு பல சமயங்கள்ல கிழிஞ்சு போயிடும். மூடியிருக்கற கல்லைக்கூட விளையாட்டா சிலர் நகர்த்திடுவாங்க. இதனாலதான் விபத்துகள் அதிகமா நடக்குது. அதனால, குழாயை பத்திரமா மூடுறதுக்காக... தேவைப்பட்டா சாவி போட்டு திறக்குற மாதிரியான மூடியை வடிவமைச்சிருக்காங்க. இதை வெச்சு மூடும்போது இதுல இருக்குற பாகங்கள் மண்ணுக்குள்ள குத்தி இறங்கிடும். அதனால சுலபமா யாரும் திறக்க முடியாது. திரும்பவும் சாவி போட்டுதான் திறக்க முடியுமாம் என்றார்.
“உபயோகப்படாத போர்வெல்களை இப்படி பொறுப்பா மூடி வெச்சுட்டாங்கனா, குழந்தைகள் விழுந்து பரிதாபமா சாகுறது குறையுமே” என்று அக்கறை காட்டிய காய்கறி, “நெல்லிக்குப்பம் நகராட்சி... வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, விஸ்வநாதபுரம் பகுதி களுக்குப் போற சாலைகள் ரொம்ப குண்டும் குழியுமா இருக்குதாம். ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வர்ற வாகனங்கள்தான் இதுல அதிகமா வருது. இதனாலதான் சாலை இப்படி ஆகுதாம். கரும்பு சப்ளை செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கரும்பு அபிவிருத்தித் திட்டத்துக்காக பிடிச்சு தமிழக அரசுக்கு கொடுப்பாங்களாம் ஆலைக்காரங்க. இந்தத் தொகையை இப்படிப்பட்ட சாலைகளை அமைக்க பயன்படுத்தலாமாம். ஆனா, ஈ.ஐ.டி. ஆலை, கண்டுக்க மாட்டேங்குதாம். நகராட்சி அதிகாரிகளோ... எங்ககிட்ட நிதி இல்லைனு கையை விரிக்கிறாங்களாம். இதனால, விவசாயிகளும், பொதுமக்களும்தான் பாதிக்கப்பட்டு பொலம்பிட்டிருக்காங்க, என்றார்.
“வாங்கின கரும்புக்கு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையே ஒழுங்கா கொடுக்கறதில்லை இந்த ஆலைங்க. இதுல சாலையெல்லாம் போட்டுக் கொடுக்கப் போறாங்களாக்கும்...” என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே... கனமழை பெய்ய ஆரம்பித்தது. மூவரும் எழுந்து மோட்டார் ரூமுக்கு ஓட, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
நேரடி நெல் கொள்முதல்... பணப்பட்டுவாடா பிரச்னையா?
தாரளமாக புகார் செய்யுங்கள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக இருக்கிறது. இந்த நெல்லை வாங்குவதற்காக, வழக்கம்போல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் முகம்மது பாதுஷா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கு உரிய ஆதார விலையை உடனுக்குடன் அதாவது, 24 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது. அக்டோபர், 15-ம் தேதி வரை 124 டன் குறுவை நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்வதிலும், பணம் பட்டுவாடா செய்வதிலும் இடர்பாடுகள் மற்றும் காலதாமதம் ஏதேனும் ஏற்பட்டால், தொலைபேசி மூலமாக புகார் தரலாம். தஞ்சாவூர் பகுதிக்கு 04362-235823; கும்பகோணம் பகுதி, 0435-2415207; பட்டுக்கோட்டை பகுதிக்கு 04373-235080 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.