புறா பாண்டி
‘‘விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். இதற்கு உதவி செய்யும் அமைப்புகள் பற்றி சொல்லுங்கள்?”
ஆர்.எம். சரவணன், ஈரோடு.
பெங்களூருவில் உள்ள அபீடா அமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் பி.பி. வாக்மரே பதில் சொல்கிறார்.
‘‘விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அமைப்பான அபீடா, (APEDA-The Agricultural and Processed Food Products Export Development Authority) 1986-ம்ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ், புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்புக்கு மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கவுகாத்தி, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா... உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ளவர்கள், பெங்களூரு மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.

ஏற்றுமதி எண்ணத்தில் இருப்பவர்களுக்குத் தேவையானத் தகவல்களைக் கொடுத்தும், தேவைப்பட்டால், விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியும் செய்வதுதான், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். காய்கறி, பழங்கள், பூக்கள், பதப்படுத்தப்பட்டப் பழச் சாறுகள், அரிசி, கோதுமை, நிலக்கடலை, வெல்லம்... கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, எருமை இறைச்சி, பால் பொருட்கள், இயற்கைத் தேன்... என்று ஏற்றுமதிக்கு ஏற்றப்பொருட்களையும் அவற்றை எந்த நாடுகளுக்கு, எந்த நிறுவனத்துக்கு அனுப்பலாம் என்றும்கூட, ஆலோசனை வழங்கி வரு கிறோம்.
ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை ‘இரண்டு வகையாகப் பிரித்துள்ளோம். வியாபார ரீதியில் செயல்படு பவர்களை, ‘வியாபார ஏற்றுமதியாளர்கள்’ என்றும், விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளை, ‘உற்பத்தி ஏற்றுமதியாளர்கள்’ என்றும் அழைக்கிறோம். இரு வகையினருமே, முதலில் அபீடா வில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஏற்றுமதியாளர்-இறக்குமதியாளர் குறியீட்டு எண், வருமான வரி கணக்கு எண் (பான்) மற்றும் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரின் சான்று ஆகியவை இதற்குத் தேவைப்படும். குறியீட்டு எண் பெறுவதற்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தை அணுக வேண்டும். இதுகுறித்த விவரங்களை http://dgft.delhi.nic.in/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தனியார் நிதி ஆலோசகர்களை அணுகினால், வருமானவரி கணக்கு எண் பெற்றுத் தருவார்கள். முறைப்படி அபீடாவில் பதிவு செய்துகொண்ட பிறகு, ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் எங்கள் அலுவலகத்திலிருந்து, தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு, Regional Incharge, Agricultural and Processed Food Products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore-560 020 Telephone 080-23343425 / 23368272. Fax 080-23364560.
‘‘மண்புழு உரம் உற்பத்தி செய்ய விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா?”
ஆர். முருகன், செம்மேடு.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் செயல்பட்டு வரும் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலர் முனைவர் பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.
‘‘இயற்கை விவசாயம்தான் இனி எதிர்காலம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், இயற்கை இடுப்பொருட்களை உற்பத்தி செய்ய, அரசும் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, மண்புழு உரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, காதி கிராமத் தொழில் ஆணையம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நேரடியாக வழங்கப்படுவதில்லை. வங்கிகள் மூலமே வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு, 25% மானியம், பெண்களுக்கு 30% மானியம் என்று வழங்கப்படுகிறது.

500 கிலோ உற்பத்தித்திறன் கொண்ட மண்புழு உரக்கூடத்தை அமைக்க, சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகும். இதில் ஆண் களுக்கு ஒரு லட்சமும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமும் மானியமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுதவிர, மத்திய-மாநில அரசுகளும் அவ்வப்போது மண் புழு உர

உற்பத்திக்கு மானியம் வழங்கி வருகின்றன.
இந்த மானியங்களைப் பெற வேண்டும் என்றால், அடிப்படைத் தகுதிகள் அவசியம். சொந்தமான நிலம் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராக, மண்புழு உர உற்பத்திப் பற்றி முறையாகப் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கே.வி.கே என்று அழைக்கப்படும் வேளாண் அறிவியல் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்கள் விவேகானந்தா கேந்திராவிலும், மண்புழு உர உற்பத்தி பற்றிய பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறோம்.
இந்தப் பயிற்சியில், மண்புழு உர உற்பத்தி நுட்பங்கள்... வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுக்கிறோம். விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில், திட்ட அறிக்கையும்கூட தயார் செய்து கொடுக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளோம்.”
தொடர்புக்கு, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கன்னியாகுமரி-629702. தொலைபேசி: 04652-246296, செல்போன்: 82200-22205.

‘‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது என்று கேள்விப்பட்டோம். எந்தெந்தப் பயிர்களுக்கு, என்னென்ன அளவில் மானியம் கொடுக்கிறார்கள்?”
எம். சுந்தரம், திருப்பூர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக் காய்... போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இவை ஒரு ஹெக்ேடர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேற்கண்டவை தவிர, மண்புழு உரம் தயாரிப்பு, டிராக்டர், பவர்-டில்லர், விளக்குப்பொறி, பவர்-ஸ்பிரேயர்... போன்றவற்றுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் சிறுவிவசாயி, பெண்கள்... போன்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்த மானியங்களைப் பெற நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, 3 போட்டோ, மண் மாதிரி முடிவுகளை இணைத்து, அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு, செல்போன்:
98420-07125.
