மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!

ஓவியம்: ஹரன்

தோட்டத்துக் குட்டையில் தேங்கியிருந்த நீரை, வயலுக்குக் கொண்டு வருவதற்காக வாய்க்கால் வெட்டிக்கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். அதைப் பார்த்துகொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்றுநேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மா வந்துசேர, மூவரும் ஒரு கல்திட்டில் அமர்ந்தனர்.

மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!

 'தூத்துக்குடி மாவட்டத்துல கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஒட்டப்பிடாரம் பகுதிகள்ல ஆடு வளர்ப்பு அதிகமா இருக்கும். அந்த ஏரியாவுல இருக்குற வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தனி குணமா இருக்கும். இப்போ பலத்த மழை பெய்ததால ஆடுகளுக்கு வாய்ப்புண், கால் புண், துள்ளுமாரி, சளி மாதிரியான நோய்கள் அதிகமாக பரவிட்டு இருக்குதாம். அந்தப் பகுதியில இருக்கிற அரசு கால்நடை மருந்தகங்கள்ல தடுப்பு மருந்துகளும், நோய்களைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும் போதுமான அளவுல இல்லையாம். அதனால, விவசாயிகள், வெளிக்கடைகள்ல மருந்துகளை வாங்கி, அவங்களாவே வைத்தியம் பாத்துக்கிட்டு இருக்காங்களாம். முறையான சிகிச்சை இல்லாததால நிறைய ஆடுகள் செத்துட்டே இருக்குதாம். விவசாயிகள் புலம்பிட்டு இருக்குறாங்க' என்று சோகச் செய்தி ஒன்றுடன் மாநாட்டைத் துவக்கி வைத்தார் ஏரோட்டி.

'இந்த மழையால பயிர் பச்சையெல்லாம் பாழா போயிட்டிருக்கே. திண்டுக்கல் பக்கமெல்லாம் ஏகப்பட்ட இடத்துல வெங்காயம், தக்காளினு மூழ்கிப் போயிடுச்சு' என்று அங்கலாய்த்தார், காய்கறி.

'அந்தக் காலத்துல பருவம் தப்பாம மழை பெய்யும். இப்போ பெய்றதைவிட, அப்போ அதிகமான மழைதான் பெய்ஞ்சிருக்கு. ஆனா, பயிர்களுக்கு பாதிப்பு வரல. ஏன்னா, முழுக்க நாட்டு ரக விதைகளைத்தான் நடுவாங்க. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு பட்டம் இருக்கு. அந்தப்பட்டத்துல விதைக்கிறப்போ அந்தக் காலத்தோட பருவநிலையைத் தாங்கி அது வளரும். மழை பெய்ஞ்சாலும் தாங்குற பயிர்கள், வறட்சியிலும் விளையுற பயிர்கள், பனியில மட்டும் விளையுற பயிர்கள்னு பருவத்துக்கு ஏத்தமாதிரி பயிர் செய்வாங்க. இப்போ, பெரும்பாலான வீரிய விதைகளுக்குப் பட்டம் கிடையாது. வணிக ரீதியில மட்டும் கணக்கு பண்ணி வருஷம் முழுக்க விதைக்கிறாங்க. அப்போ மழை வந்தா அழிஞ்சுதானே போகும். இதுக்கு மழையைக் குத்தம் சொல்லலாமா? இதில்லாம ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் ஆடு, மாடுகளுக்கு நோய் பரவும். அதை நாமதான் சுகாதாரமா பராமரிச்சு சரி பண்ணிக்கணும். இப்போலாம் தடுப்பூசி எல்லாம் வந்துடுச்சு. நாமதான் ஆடு, மாட்டை கூட்டிட்டுப் போய் ஊசி போடணும். முன்னயெல்லாம் விவசாயிகள் ஆடு, மாடுகளை நேசிச்சு வளர்த்தாங்க. இப்போலாம் பெரும்பாலானவங்க வாங்கி வளர விடுறாங்க. எல்லாத்தையும் வணிக ரீதியிலேயே பாக்குறதுதான் நஷ்டத்துக்குக் காரணம்' என்று சற்று கோபமாகவே பேசினார் வாத்தியார்.

'இவ்ளோ விஷயம் இருக்குதா... அது தெரியாம உளறிப்புட்டேன்' என காய்கறி உச் கொட்ட...

'பரவாயில்லை விடு...' என்ற வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

'மழைக்காலங்கள்ல கறவை மாடுகளுக்கு அதிகமா வர்ற தொத்து நோய்கள்ல ஒண்ணு மடிநோய். இதனால பெரியளவுல விவசாயிகளுக்கு நஷ்டம் வரும். சுத்தமா பராமரிக்காத மாடுகளுக்குத்தான் இந்த நோய் அதிகம் பரவும். இந்த நோய் வந்தா, கறவை மாடுகளோட மடி வீங்கி, கல் மாதிரி ஆகிடும். மடியில கை வெச்சாலே உதைக்கும். பால், மஞ்சள் வண்ணத்துல அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்துல இருக்கும். சில சமயங்கள்ல பால்ல நூல் மாதிரி திரண்டிருக்கும். சிலசமயம் உப்புக் கரிக்கும். அதனால பாலை விற்பனை செய்ய முடியாது. ஆனா, 'தடுப்பூசி போட்டுக்கிட்டா இந்த நோயைத் தடுக்கலாம்’னு திண்டுக்கல்ல இருக்குற கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தோட தலைவர் பீர்முகமது சொல்லியிருக்கார். அதோட, '250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு துண்டா வெட்டி, 50 கிராம் மஞ்சள் தூள், 20 கிராம் சுண்ணாம்பு சேர்த்து அரைச்சு, ரொம்ப கெட்டியா இல்லாத பதத்துல எடுத்து வெச்சுக்கணும். நோய் பாதிச்ச மாடுகளோட மடியை தேங்காய்நார் வெச்சு தேய்ச்சு தண்ணி ஊத்தி கழுவிட்டு, முழுபாலையும் கறந்துடணும். அடுத்து அரைச்சு வெச்சிருக்கிற கலவையை மடியில தடவி விடணும். இதுமாதிரி ஒரு நாளைக்கு 10 தடவைனு, 5 நாளைக்கு பத்து போட்டா... மடிநோய் குணமாகிடும்’னு சொல்லிருக்கார்' என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!

'அய்யோ... கொடுமையான நோய். நமக்கு நஷ்டமாகுங்கிறதுகூட பிரச்னையில்லை. மாடு வலியில துடிச்சுடும்' என்று முகத்தில் அந்த வலியைக் காட்டிய ஏரோட்டி, ஒரு செய்தியை ஆரம்பித்தார்.

''தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்கள்ல நேரடி கொள்முதல் நிலையம் மூலமாத்தான், விவசாயிங்க நெல் விற்பனை செய்றாங்க. போன வருஷம் வரைக்கும் நெல்லுக்கான பணத்தை நேரடியா கொடுத்தாங்க. அதனால, கொள்முதல் நிலையத்துல வேலை பார்க்குறவங்க, 40 கிலோ பைக்கு... 15 ரூபாயில இருந்து 25 ரூபாய் வரை கமிஷன் பிடிச்சு விவசாயிகளோட பணத்தை ஆட்டைய போட்டுட்டு இருந்தாங்க. இந்த லஞ்சத்தைத் தடுக்குறதுக்காக பணத்தை நேரடியா விவசாயிகளோட வங்கிக் கணக்குல செலுத்துற நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்துச்சு. இதனால, 'கமிஷன் இருக்காது’னு விவசாயிங்க சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கொள்முதல் நிலையத்துல வேலை பார்க்குறவங்க, புதுசா ஒரு வழியைக் கண்டுபிடிச்சுட்டாங்க. கமிஷன் பண அளவுக்கு நெல்லாவே வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நெல்லுக்கு, நம்பிக்கையான சில ஆட்களோட கணக்குல பணத்தைக் கட்டி அப்புறமா வாங்கி பிரிச்சுக்குறாங்களாம். அதனால, விவசாயிகள் இந்த வருஷமும் வயித்தெரிச்சலோடதான் கொள்முதல் நிலையத்துல நெல்லை விக்கிறாங்க' என்றார், ஏரோட்டி.

அந்த நேரத்தில் வானம் இருட்டிக்கொண்டு வரவும்... 'மழை வர்றதுக்குள்ளாற வீடு போய் சேந்துடுறேன்’ என்று சொல்லிக்கொண்டே காய்கறி கூடையைத் தூக்க... அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பட்டி, மம்மானியூர், கோம்பை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய ரகமான பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இக்காயை பல் பாகல், பரிபாகல், நெய்பாகல் எனவும் அழைக்கின்றனர். இது கொடி வகைப்பயிராக இருந்தாலும்... பெரும்பாலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுவதால் தனியாக பந்தல் அமைக்கும் செலவில்லை. இது கசப்புச்சுவை கொண்டிருக்காது. இதை காளான் மற்றும் இறைச்சி சமைக்கும் விதத்தில் சமைத்தால் நல்ல ருசியாக இருக்கும். இதற்கு திண்டுக்கல் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு, கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூருவில் இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. இதைப் பெரும்பாலும் இயற்கை முறையில்தான் விளைவிக்கிறார்கள். இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை இது கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.

ஜி. பிரபு