புறா பாண்டி
''தென்னையில் ஊடுபயிராக இலைவாழை சாகுபடி செய்யலாமா? இலைவாழைக்கு என்று தனியாக ரகம் உள்ளதா?'
எஸ்.கண்ணன், திருவாரூர்.

திருப்பூர் மாவட்ட முன்னோடி விவசாயி 'ஓஷோ’ பழனிச்சாமி பதில் சொல்கிறார்.
''தென்னையில் ஊடுபயிராக வாழையை சாகுபடி செய்யலாம். குறிப்பாக, இலைவாழை நன்றாக வளரும். வாழை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும் என்றால், தென்னங்கன்றுகள் 30 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான், ஊடுபயிராக உள்ள இலைவாழை நன்றாக விளைச்சல் கொடுக்கும். நான்கு அடி இடைவெளியில், இரண்டு வரிசையாக வாழைக்கன்றுகளை நடவு செய்யலாம். என்னுடைய அனுபவத்தில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்வதால், தென்னை விளைச்சலும் நன்றாகவே இருக்கும்.
இலைவாழைக்கு என்று தனிரகம் கிடையாது. பூவன், நேந்திரன், கதளி, செவ்வாழை... போன்ற நாம் பழத்துக்கு வளர்க்கும் ரகங்கள்தான், இலை வாழைக்கும் பயன்படுகின்றன. இந்த ரகங்களில் இலைகளைத் தொடர்ந்து அறுவடை செய்வதால், வாழைத்தார் உருவாகாது. இந்த ரகங்களில்...நேந்திரன் ரக இலைகள் நீளமாக இருக்கும். இலைகளும் நிறைய உருவாகும். ஆனால், இதில் குருத்து அழுகல் தாக்குதல் ஏற்படுகிறது. எனவே, நோய் தாக்குதல் அதிகம் ஏற்படாத, பூவன் ரகம்தான் இலைவாழைக்கு ஏற்றதாக உள்ளது. இதன் இலைகள் அகலமாக இருக்கும். சாப்பிடும்போதும், பொட்டலம் கட்டும்போதும் கிழிசல் ஏற்படாது.

இலைவாழையை, நடவு செய்தது முதல்... ஐந்தாவது மாதத்தில் இருந்து தொடர்ந்து எட்டு மாதங்கள் வரை இலைகளை அறுக்க லாம். அதற்குள் பக்கக் கன்றுகளும் நன்கு வளர்ந்துவிடும். அதில் மூன்றை மட்டும் நிறுத்திவிட்டு, மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். தொடர்ந்து பக்கக் கன்றுகளில் இருந்தும் இலை அறுக்கலாம். இதுபோல மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இலையை அறுவடை செய்யலாம். பக்கக் கன்று பெரிதாக வளர்ந்த பிறகு, தாய் மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி தோப்பினுள் போட்டு விட்டால், அவை மட்கி நிலத்துக்கு உரமாகி விடும். இலைவாழைக்கு ரசாயன உரமே தேவையில்லை. முற்றிலும் இயற்கைத் தொழில்நுட்பங்களை வைத்தே நல்ல மகசூல் எடுக்க முடியும்.'
தொடர்புக்கு, செல்போன்: 9865707172
''ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்ப்பது லாபம் கொடுக்குமா?'
நடேஷ், வேடந்தாங்கல்
தருமபுரி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப்பேராசிரியர் வெ.மீனலோச்சனி பதில் சொல்கிறார்.

''ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்க்கும் முறை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. நிழல்தன்மை கொண்ட இடத்தில், பிளாஸ்டிக் தட்டுகளில் மக்காச்சோள விதைகளை முளைக்க வைத்து, 10 நாட்களில் பசுந்தீவனமாகக் கொடுக்கிறார்கள். இதைத்தான் ஹைட்ரோஃபோனிக்ஸ் (மண்ணில்லாத) முறை என்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 'இது புதிய தொழில்நுட்பம் அல்ல’ என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வந்துள்ள ஆராய்ச்சி தகவலின்படி இந்த ஹைட்ரோஃபோனிக்ஸ் தொழில்நுட்பம், நமது விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்காது என்று தெரியவந்துள்ளது. காரணம், இந்த முறையில் வளர்க்கப்படும் 100 கிலோ பசுந்தீவனத்தில், 80% அளவுக்கு நீர்ச்சத்துதான் இருக்கிறது. மீதியுள்ள 20% மட்டுமே பிற சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, நார்ச்சத்து அதிகமாக இல்லை. நார்ச்சத்துதான் கால்நடைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. இந்த முறையில் வளர்ந்த தீவனத்தைக் கொடுத்து வளர்க்கப்படும் கறவை மாடுகளின் பாலில் கொழுப்புச் சத்தும், இதரச் சத்துக்களும்... குறைவாகவே இருக்கின்றன. ஆடுகளின் எடையும் கூடுவதில்லை. ஆட்டு இறைச்சியில் கொழுப்பும் இருக்காது.
இந்த ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் தீவனம் வளர்த்துக் கொடுப்பது விவசாயிகளுக்கு லாபமாக இருக்காது. ஹைட்ரோஃபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் ஒரே நன்மை... நிலம் இல்லாதவர்கள்கூட, பிளாஸ்டிக் தட்டுக்களில் தீவனம் வளர்க்கலாம் என்பதுதான். மேலும் இந்த முறையில் தீவனம் வளர்ப்பது செலவையும் அதிகரிக்கும். இதற்கு மாற்றாக, மிக எளிய நுட்பத்தில் அசோலா வளர்க்கலாம். அசோலா அருமையான கால்நடைத் தீவனம். உதாரணத்துக்கு 18 அடி நீளம், 4 அடி அகலம் பரப்பளவு கொண்ட இடத்தில் அசோலாவை வளர்த்தால், தினமும் 4 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு முறை விதை அசோலாவைப் போட்டுவிட்டால் போதும், அது அமுதசுரபி போல பெருகிக் கொண்டே இருக்கும். தொடந்து கறவை மாடுகளுக்கு அசோலா கொடுத்தால், பால் உற்பத்தியும் கூடும், கொழுப்பு மற்றும் இதரச் சத்துக்களும் சரியான அளவில் இருக்கும். அசோலாவை உட்கொள்ளும் நாட்டுக்கோழிகள் ஆரோக்கியத் துடன் இருக்கும். முட்டையிடும் திறனும் கூடும்.'
தொடர்புக்கு, தொலைபேசி: 04342288420, செல்போன்: 9488589029
''இயற்கை முறையில் 'சௌசௌ’ சாகுபடி செய்ய விரும்புகிறோம். நல்ல விளைச்சல் பெற வழிசொல்லுங்கள்?'

பி.ரஞ்சித்குமார், பண்ணைக்காடு.
நீலகிரி மாவட்டம், விஜய நகரத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் செல்வராஜ் பதில் சொல்கிறார்.
''இயற்கை விவசாயத்தில் சௌசௌ சாகுபடி நிச்சயம் செய்ய முடியும். பஞ்சகவ்யா, அமுதகரைசல்... போன்ற இயற்கை இடுபொருட்களை முறையாகக் கொடுத்து வந்தால், சௌசௌ நல்ல விளைச்சலைக் கொடுக்கும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் மட்டுமே சௌசௌ வளரும். சௌசௌவில் உயர் விளைச்சல் ரகங்கள் கிடையாது. வெள்ளை, பச்சை என்ற இரண்டு பாரம்பரிய ரகங்கள் மட்டுமே உள்ளன. இந்த ரகங்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேயிலையில் ஊடுபயிராகவும் சௌசௌவை சாகுபடி செய்யலாம். சௌசௌ, பொதுவாக பந்தலில்தான் படந்து வளரும். கீழ்பகுதி நிலம் காலியாக இருக்கும். அந்த இடத்தில் தேயிலை பயிரிடலாம். நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஓர் ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 கிலோ சௌசௌ காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்தவுடன் தரையில் இருந்து 60 செ.மீ உயரம் விட்டு கொடியை அறுத்துவிடவேண்டும். அப்போது பக்கக்கிளைகள் உருவாகி பந்தலில் படரத் தொடங்கும். இப்படி செய்துவந்தால், 4 முதல் 5 ஆண்டுகள் வரைகூட சௌசௌ கொடியை நன்றாக காய்க்கும் திறனில் வைத்துக் கொள்ளலாம்.

ஜனவரி மாதம் கவாத்து செய்தால், ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை காய்கள் கிடைக்கும். சௌசௌ உட்பட தோட்டக்கலைப் பயிர்களுக்கு இயற்கை இடுபொருட்கள் கொடுப்பது குறித்து சந்தேகங்கள் இருந்தால், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். தகுந்த ஆலோசனைகள் அளிக்க காத்திருக்கிறோம்.'
தொடர்புக்கு, தொலைபேசி: 04232442170
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.