மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!

ஓவியம்: ஹரன்

''இப்ப தமிழ் சினிமாக்காரங்களுக்கு விவசாயம், சுற்றுச்சூழல் பத்தியெல்லாம் ஆர்வம் அதிகமா வர ஆரம்பிச்சிருக்கு. இப்பத்தான் 'கத்தி’னு ஒரு படத்தை எடுத்து விவசாயிகளோட கஷ்டநஷ்டங்களை ஊருக்குப் புரியவெச்சாங்க. அடுத்தாப்புல, 'காடு’னு ஒரு படத்தை எடுத்து, மரங்களோட அருமையையும், காடுகளோட தேவையையும் எல்லார் தலையிலயும் குட்டி சொல்ற மாதிரி சொல்லியிருக்காங்க...'' மழையில் முளைத்திருந்த காளான்களைத் தேடியபடியே மாநாட்டை ஆரம்பித்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி.

மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!

 ''எப்பப் பார்த்தாலும் அவன, இவன் வெட்டுறது; இவன, அவன் வெட்டுறது; இவன் பொண்டாட்டியை, அவன் தூக்கிட்டுப் போறது; அவ புருஷன இவ துரத்திட்டுப் போறது; மரத்தைச் சுத்தி சுத்தி வந்து காதலிக்கறதுனு தான் படம் எடுப்பாங்க. இப்ப பிரயோஜன மான விஷயத்தையும் படமா எடுக்க ஆரம்பிச்சிருக்கறது நல்ல விஷயம்தான். படத்தைப் பார்த்துட்டு ஸ்டைல் பண்றது, ஆளை வெட்டுறது, காதலிக்கிறதுனே திரிஞ்ச இளவட்டமெல்லாம், இனி விவசாயத்தையும் காட்டையும் காப்பாத்த வந்தா... தமிழ் சினிமாவுக்கு கோடி கும்பிடு போடலாம்'' என்ற, 'ஏரோட்டி’ ஏகாம்பரம் அடுத்த செய்திக்கு தாவினார்.  

'கோயம்புத்தூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையில 'நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு’ செயல்பட்டுக்கிட்டு இருக்கு. வடவள்ளி, எட்டிமடை, வாளையார், திருமலையாம்பாளையம், குட்டிக் கவுண்டன்பதி, பெரியதடாகம், ஆனைக்கட்டி... மாதிரியான மலை மற்றும் மலைசார்ந்த கிராமங்கள்ல உள்ள கால்நடைகளுக்கு வைத்தியம் பாக்குறதுதான் இந்தப் பிரிவோட வேலை. இதுக்காக தனி வாகனம் இருக்கு. இந்த வாகனத்துல தினமும் மலைக்கிராமங்களுக்குப் போய் டாக்டர்கள் வைத்தியம் பாத்துட்டு இருந்தாங்க.

வாகனங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் பயன்படுத்தணும்னு விதி இருக்கு. இந்தக்கெடு ஒரு மாசத்துக்கு முன்ன முடிஞ்சுட்டதால, இந்த வாகனத்தை ஓரம் கட்டிட்டாங்க. இன்னமும் புது வாகனம் வாங்கல. இதனால, பைக்ல போக வேண்டிய நிலை. பைக்ல ரொம்ப தூரம் போக முடியாதுங்கறதால, அப்பப்ப டாக்டர்கள் வராமப் போயிடுறாங்களாம். இதனால கால்நடைகளுக்குச் சரிவர வைத்தியம் பார்க்க முடியாம அல்லாடுறாங்க விவசாயிங்க. இதைப் பத்தி கேட்கறப்பல்லாம், 'சீக்கிரமே வண்டி வந்துடும்’னு சொல்லி சமாளிச்சுட்டே இருக்காங்களாம் அதிகாரிங்க'' என்றார்.

'அடப்பாவமே' என்ற 'காய்கறி’ கண்ணம்மா, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு கொய்யாக்காய்களை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.

'ரொம்ப நாள் கோரிக்கைக்குப் பிறகு இப்போதான் பால் விலையைக் கொஞ்சம் உயர்த்தியிருக்குறாங்க. அந்த சந்தோஷத்தைக் கொஞ்சநாள்கூட விட்டு வைக்கமாட்டாங்க போலிருக்கு. பால் விலை ஏறுனதால தீவன விலையையும் ஏத்திட்டாங்க.

பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு, கோதுமைத்தவிடு, நெல் தவிடு, மக்காச்சோள மாவு மாதிரியான பொருட்களைத்தான் அடர் தீவனமா மாடுகளுக்குக் கொடுப்பாங்க. இப்போ இது எல்லாத்துக்குமே மூட்டைக்கு (60 கிலோ மூட்டை) நூறு ரூபாயில இருந்து, நூத்தம்பது ரூபாய் வரைக்கும் விலை ஏத்திட்டாங்க. தீவன விலை அதிகமாயிருக்குனு சொல்லித்தான் பாலுக்கு விலையை ஏத்தச்சொல்லி விவசாயிகள் கேட்டுட்டு இருந்தாங்க. இப்போ பால் விலையை ஏத்தினதும் தீவன விலையும் அதிகரிச்சுட்டதால விவசாயிகளுக்கு பெரிய லாபம் இருக்காது. திரும்பவும் விவசாயிகளுக்குக் கஷ்ட காலமே தொடருது' என்றார் வாத்தியார்.

'முன்னாடி போனா கடிக்கும்... பின்னாடி போனா உதைக்கும்கிற கதையால்ல இருக்கு. எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் கடியை யும் உதையையும் வாங்கிட்டு பொழப்பு நடத்தற துனு தெரியலையே!' என்று யாருக்கோ சாபம் விடுவதுபோல கைகளை முறித்தார் காய்கறி.

இதைப் பார்த்து சிரித்துக் கொண்ட வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார். 'கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் சுத்துவட்டாரப் பகுதிகள்ல மாதம்பட்டி, தீத்திப்பாளையம்னு கிட்டத்தட்ட இருபது கிராமங்கள்ல, 3 ஆயிரம் ஏக்கர்ல திராட்சை விளையுது.

இந்தப்பகுதி சீதோஷ்ண நிலை நல்லா இருக்குறதால இங்க விளையுற திராட்சை தனி சுவையோட இருக்கும். அதனால இந்தப்பகுதி திராட்சைக்கு கேரளாவுல நல்ல கிராக்கி இருக்குதாம். ரம்ஜான் சமயத்துல கிலோ 60 ரூபாய் வரைக்கும் விக்குமாம். மத்த சமயங்கள்ல சராசரியா 35 ரூபாய் வரை விற்பனை ஆகுமாம். இங்க விளையுறதுல முக்கால்வாசி கேரளாவுக்குத்தான் போகுமாம். மாதம்பட்டியில் இருக்குற திராட்சை உற்பத்தியாளர் சங்கம், திராட்சையை நல்ல விலைக்கு விற்பனை செய்ய உதவி செஞ்சுக்கிட்டு இருக்குதாம். ரெண்டு, மூணு வருஷமா இருந்த வறட்சியால திராட்சை உற்பத்தி ரொம்ப பாதிச்சுடுச்சாம். இப்போ மழை வந்தும் பெருசா பலன் இல்லையாம். பழம் உடைதல்,

பூ, காய் அழுகல் மாதிரியான நோய்களால திராட்சையோட தரம் குறைஞ்சுடுச்சாம். கிலோ 20 ரூபாய்க்குகூட விற்பனை ஆகமாட்டேங்குதாம். 'இதனால திராட்சை சாகுபடிப் பரப்பு குறைஞ்சுக் கிட்டே இருக்கு. இப்படியே போனா திராட்சை சாகுபடியே இல்லாம போயிடும்’னு புலம்புற விவசாயிங்க, 'போதுமான விலை கிடைக்கறதுக்கு அரசாங்கமும், வேளாண் பல்கலைக்கழகமும் ஏதாச்சும் உதவி செய்யணும்’னு கோரிக்கை வைக்கிறாங்க' என்று சொன்னார்.

'கம்பம் பகுதி திராட்சை விவசாயிகளும் இதே மாதிரிதான் கையறு நிலையில நிக்கிறாங்க' என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியைச் சொன்னார்.

'ஆடுதுறை43, ஆடுதுறை45, ஆடுதுறை37, ஆடுதுறை36 மாதிரியான விதைகளை, தமிழ்நாட்டுல இருக்கிற வேளாண் விதைப் பண்ணையில் உற்பத்தி செஞ்சு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமா விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு இருந்தாங்க. விதை கிராமத் திட்டத்துல விதை உற்பத்திக்கு 50 சதவிகிதம் மானியம் உண்டு. விதை கிராமத் திட்டத்துல சேராத விவசாயிகளுக்கு, ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் மானியம் உண்டு.

விதை உற்பத்தி செய்ற விவசாயிகளுக்கு பத்து வருஷமா இந்த மானியத்தைக் கொடுத்துட்டு இருந்துச்சு தமிழக அரசு. இந்த வருஷத்துல இருந்து 'புதிய ரக விதைநெல்லை உற்பத்தி பண்ற விவசாயிகளுக்கு மட்டும்தான் மானியம் கிடைக்கும்’னு அரசாங்கம் சொல்லிடுச்சாம். அதனால, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை ஆந்திராவுல இருந்து 'என்.எல்.ஆர்’, '34449 பாப்பட்லா’னு ரெண்டு புது ரகங்களை வரவழைச்சிருக்கு. இந்த விதைநெல்லை வாலாஜாபாத், காஞ்சிபுரம் வட்டாரங்கள்ல உள்ள விவசாயிகளுக்குக் கொடுத்து, விதைநெல் உற்பத்தி செய்யப் போறாங்களாம். இங்க உற்பத்தி பண்ணி தமிழ்நாடு முழுக்க அனுப்பப் போறாங்களாம். இந்த ரகத்துக்கு மானியம் கிடைக்குமாம்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருந்த ஆடு, மாடுகள்... கடலை காட்டுக்குப் பக்கம் செல்வதைக் கவனித்துவிட்ட ஏரோட்டி... ஆடுகளை விரட்ட 'ஹோய்... ஹோய்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே எழுந்து ஓட, மாநாடு முடிவுக்கு வந்தது.

இயற்கையில் கலந்த டேனியல்ராஜ்!

மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!

நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றி தொடர் பயிற்சிகள் கொடுத்து வந்த டேனியல் ராஜ், தனது எழுபத்தைந்தாவது வயதில், காலமானார். இலங்கைத் தமிழரான இவர், இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து திண்டுக்கல்லில் வசித்து வந்தார். திருமண வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொள்ளாத டேனியல்ராஜ், காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளராக சில காலங்கள் பணியாற்றினார்.

இலங்கையில் நாய், பன்றி, கோழி போன்ற சிறுபிராணிகள் வளர்த்த அனுபவத்தின் மூலம்... காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் சார்பில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணை, கொடைக்கானல் தூய இருதய கல்லூரியில் இருந்த பன்றிப் பண்ணை ஆகியவற்றை சில ஆண்டுகள் நிர்வகித்து வந்தார். பிறகு, பல்கலைக்கழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறு பிராணிகள் வளர்ப்புப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தார்.

'பசுமை விகடன்’ ஏற்பாடு செய்திருந்த பல பயிற்சிகளில் 'புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி அளித்த டேனியல்ராஜ், ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு கோழி வளர்ப்பு பற்றிய சந்தேகங்களை செல்போன் மூலம் தொடர்ந்து நிவர்த்தி செய்தும் வந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர், கொஞ்சமும் சளைக்காமல் உழைத்து வந்தார். நவம்பர் 1ம் தேதியன்றுகூட, திண்டுக்கல்லில் ஒரு குழுவினருக்கு கோழிவளர்ப்புப் பயிற்சி அளித்திருக்கிறார். 3ம் தேதியன்று நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு... நுரையீரலும், சிறுநீரகங்களும் செயலிழக்கவே, 5ம் தேதியன்று உயிர் நீத்தார்.

- ஜி.பிரபு