மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!

ஓவியம்: ஹரன், படங்கள்: வீ.சிவக்குமார்

டகிழக்குப்பருவ மழையின் உபயத்தால் மேய்ச்சல் நிலங்களில் பசுந்தாவரங்கள் செழுமையாக வளர்ந்து கிடக்க... ஆடு், மாடுகளை மேய விட்டுட்டு வந்து, சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். மரநிழலில் ஸ்டூலைப் போட்டு அன்றைய பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார், வாத்தியார் வெள்ளைச்சாமி. அப்போது காய்கறி கண்ணம்மா வந்ததை கவனித்த வாத்தியார், ''என்ன கண்ணம்மா இவ்வளவு லேட்டு'' என்று அதிகார தோரணையில் கேட்டார். ''நீங்க மட்டும் சீக்கிரம் வந்துட்டீங் களாக்கும்... டவுன்பஸ்ஸை விட்டு இறங்கி, குறுக்குப்பாதையில வந்ததைத்தான் நான் பாத்தேனே? என்றார் காய்கறி.

 ''இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக செக் போட்டுக் கொடுத்திருந்தேன். செக்ல இருக்குற கையெழுத்தும்... பேங்க்ல இருக்குற என்னோட கையெழுத்தும் ஒத்துப்போகலைனு சொல்லி செக் ரிட்டர்ன் ஆகிடுச்சு. வயசாகுதுல்ல... கை நடுங்குது. அதான் கொஞ்சம் கையெழுத்து மாறிடுச்சு. அதை கம்ப்யூட்டர் கரெக்டா காட்டிக் கொடுத்துடுது. அதனால, பேங்க் வரைக்கும் போய் இப்போ இருக்குற கையெழுத்தைப் போட்டு அப்டேட் பண்ணிட்டு வந்தேன்' என்ற வாத்தியார், 'நம்மள மாதிரி ஆளுங்க 2 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுக்குற செக்ல எல்லாம் கையெழுத்தை கரெக்டா கண்டுபிடிச்சுடுவாங்க. ஆனா, போலி நகையை அடமானம் வெச்சு கோடிகள்ல கொள்ளை அடிக்கிறது, போலி கிரெடிட் கார்டு வெச்சு ஏ.டி.எம்ல பணம் எடுக்குறதையெல்லாம் கண்டுபிடிக்க மாட்டாங்க' என்று அலுத்துக் கொண்டார்.

மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!

'யோவ், ஆடு போகுதுய்யா... நீ பாட்டுக்கு விட்டுட்டு வந்து சைக்கிளைத் துடைச்சிக்கிட்டு இருக்கியே' என்று ஏரோட்டியை எச்சரிக்கை செய்தார், காய்கறி.

'கவலைப்படாத கண்ணம்மா... அதுக்கு ஒரு வழி பண்ணிட்டுதான் வந்திருக்கேன். ஒரு கிடாவை மட்டும் மரத்துல கட்டி வெச்சிருக்கேன் பாரு. அந்த கிடா கண்ணுக்கு மத்த ஆடுங்க தெரியுற வரைக்கும் அது பாட்டுக்கு மேய்ஞ்சிக்கிட்டு இருக்கும். ஆடுக கண்ணை விட்டு மறைஞ்சா, இது விடாம கத்த ஆரம்பிக்கும். உடனே மத்த ஆடுகள் இதுக்குப் பக்கத்துல வந்துடும். இதெல்லாம் ஒரு டெக்னிக்... புரிஞ்சுக்கோ' என்ற ஏரோட்டி, ஒரு செய்தியை எடுத்து விட்டார்.

'கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி பன்னீர் திராட்சைக்குப் பேர் போனது. கிட்டத்தட்ட அம்பது வருஷமா அதிக வருமானம் கொடுத்திட்டிருந்த பணப்பயிர், இந்த திராட்சை. சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஓடைப்பட்டி, ஆனைமலையான்பட்டினு திரும்பின பக்கமெல்லாம் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல திராட்சைப் பந்தல்தான் இருக்கும். இந்தப்பகுதியில மட்டும்தான் வருஷம் முழுக்க திராட்சை காய்க்கும். அதனால, விவசாயிகளுக்கு விற்பனை சுலபமா இருக்குறதுக்காக அரசாங்க உதவியோட தனியார் ஒயின் ஃபேக்டரி ஆரம்பிச்சாங்க. ஆனா, திராட்சை விவசாயத்துல பல பிரச்னைகள் இருக்கிற தால, வேற பயிர்களுக்கு மாறிட்டு இருக் காங்க விவசாயிகள். குறிப்பா, விலை இல்லாததுதான் காரணமாம். ஒயின் ஃபேக்டரி, நேரடியா கொள்முதல் பண்ணாம இடைத்தரகர்கள் மூலமா கொள்முதல் பண்ணுதாம். இடைத்தரகர்கள் சரியான விலை கொடுக்காம கொள்ளை அடிக்கிறாங்களாம். அதனால, அரசாங்கமே திராட்சைக்கு சந்தை அமைச்சு விலை நிர்ணயம் செய்யணுங்கிறதுதான் விவசாயிகளோட கோரிக்கை. இது நிறைவேறலனா... திராட்சை விவசாயத்துக்கே ஆபத்துதான்' என்றார், ஏரோட்டி.

'மூணு, நாலு வருஷமா தண்ணியில்லாம காய்ஞ்சு கிடந்துச்சு. இப்போ கிடைச்ச மழையால அந்தப் பிரச்னை ஓரளவுக்கு சரியாச்சு. உடனே, அடுத்த பிரச்னை ஆரம்பமாயிடுச்சு. பாவம்யா சம்சாரிகள்' என்று 'உச்’ கொட்டிய வாத்தியார், 'கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பக்கத்துல நிறைய விவசாயிகள் மானாவாரியா வேர்க்கடலை பயிர் பண்ணிருக்காங்க. அங்க நிறைய பேர் களைகளை அழிக்கிறதுக்காக கடலை விதைச்ச மூணாம் நாள், தனியார் உரக் கடையில களைக்கொல்லியை வாங்கித் தெளிச்சிருப்பாங்க போல. கடலைச்செடிகள் எல்லாம் கருகிப்போச்சாம். விவசாயத்துறை ஆபீசரை அழைச்சுட்டு வந்து காட்டினப்போ, 'அந்தக் களைக்கொல்லி நெல்லுக்கு அடிக்கறது. அதை கடலைக்கு அடிக்கக் கூடாது’னு சொல்லியிருக்கார். முதலுக்கே மோசமாகிப் போய் கவலையில இருக்காங்க கடலை விவசாயிகள்' என்று தானும் ஒரு, 'உச் கொட்டும்’ சம்பவத்தையே சொன்னார்.

''உரலுக்கு ஒரு பக்கம் இடி... மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடினு சொல்லுவாங்க. அது சம்சாரிகளுக்குத்தான் சரியா இருக்கு'' என்ற கண்ணம்மா, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசிய வாத்தியார், 'போன வாரம் ஒரு சோலியா திருநெல்வேலி போயிருந்தேன். ஊர் முழுக்க தண்ணி ஓடுதுய்யா. குளம், கண்மாயெல்லாம் நிறைஞ்சு பாக்கவே சந்தோஷமா இருந்துச்சுய்யா. பல இடங்கள்ல கிணறுகள்லகூட எட்டி மோக்குற அளவுக்கு தண்ணி நிக்குது. 'கிட்டத் தட்ட மூணு வருஷத்துக்கு தண்ணிக்கு கவலை இருக்காது’னு விவசாய நண்பர்கள் சொன்னாங்க. சில இடங்கள்ல வாய்க்கால்ல அயிரை மீன் பிடிச்சுட்டு இருந்தாங்க. இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் பாத்தே ரொம்ப நாளாகிப்போச்சுய்யா'' என்று குதூகலமாகச் சொன்னார்.

'ஆமாய்யா மதுரை, சிவகங்கை பக்கம்கூட அயிரை மீன் இப்போ விற்பனைக்கு வருதாம். கம்மா பெருகி தண்ணி ஓடும்போதுதான் இந்த மீன் வரும். அதை நினைக்கிறப்பவே வாய் ஊறுதுய்யா. இப்போலாம் அதிகமா வரத்து இல்லாததால ஒரு கிலோ ஆயிரம் ரூபா வரைக்கும் விற்பனை செய்றாங்க. இதுக்கே பயங்கர டிமாண்டாம். ஏற்கெனவே பறவைக் காய்ச்சல் பீதியால கோழிகள் விற்பனை குறைஞ்சு, மீனுக்கு கிராக்கி ஆகிப்போச்சு. எல்லா மீனுக்குமே கிலோவுக்கு நூறு ரூபாய்க்கு மேல விலை கூடிப்போச்சு. இந்த நிலையில, அபூர்வமான அயிரை மீன் கிடைச்சா விடுவாங்களா என்ன!' என்ற ஏரோட்டி,''வெயில் ஏறுது... ஆடு, மாடுகளை இடம் மாத்திக் கட்டிட்டு வர்றேன்' என்று எழுந்து செல்ல, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.

திண்டுக்கல்லில் காய்க்கும் சிலோன் ஆப்பிள்!

மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்தியாகு என்பவர், சிறுமலை அடிவாரத் தில் ஏ.வெள்ளோடு கிராமத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர், இலங்கையில் இருந்து கொண்டு வந்த, 'முட்டைப்பழம்’ என்று அழைக்கப்படும் 'சிலோன் ஆப்பிள்’ விதைகளை விதைக்க, மூன்று மரங்கள் முளைத்துள்ளன.

மழைக்காலங்களில் மட்டும் காய்க்கும் தன்மை உடைய இந்த மரங்கள் நடப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது காய்கள் காய்த்திருக்கின்றன. மாம்பழ வடிவில் பச்சை நிறத்தில் காய்கள் உள்ளன. இவை பழுக்கும்போது மஞ்சள் நிறமாக மாறுகின்றன. தோலை நீக்கினால், முட்டையின் மஞ்சள் கருபோல் இருப்பதால் இதை 'முட்டைப்பழம்’ என்கிறார்கள். மாவுச்சத்து மிகுந்த இப்பழம் சிறுநீரகக் கோளாறுகள், மனநிலை பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறதாம்.

- ஜி.பிரபு