புறா பாண்டிபடங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி
''எனக்கு புறா வளர்க்க ஆசை. ஆனால், இதை வளர்த்தால் குடும்பத்துக்கு நல்லதல்ல. அந்த இடமே பாழடைந்து விடும்' என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?
டேவிட் பிரபாகரன், திசையன்விளை.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் புறா பண்ணை நடத்தி வரும் ஆர்.கே.மைதீஷ்குமார் பதில் சொல்கிறார்.

''புறாக்கள் ஒற்றைக் காலில் நிற்கும். இதனால் அந்தக் குடும்பத்தில் கெட்டது நடக்கும். புறாக்களின் அனத்தல் சத்தம் அபசகுனம்... என்றெல்லாம் நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன. குறிப்பாக, புறாக்கள் உள்ள இடம் இடிந்து, பாழடைந்துவிடும் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால், உண்மை நிலை வேறுமாதிரியாக உள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் புறாக்களுக்கு தனி மரியாதை உண்டு. கடிதப் போக்குவரத்து புறாக்கள் மூலமும் நடந்தன. அரண்மனையின் அந்தப்புரத்தில் புறாக்கள் கட்டாயம் இருக்கும். புறாக்கள் இல்லாத அந்தப்புரத்தில் பெண்கள் வசிக்க விரும்பமாட்டார்களாம். அதாவது, புறாக்கள் இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம்.

இந்தப் பழங்கதைகளை நம்பாவிட்டாலும், மூன்று தலைமுறைகளாக புறா வளர்த்து வரும் நாங்கள், எந்த பாதிப்பும் இல்லாமல்தான் இருக்கிறோம். மிக நல்ல நிலையிலும் வளர்ந்து வருகிறோம். எங்களிடம் புறா வாங்கிச் சென்றவர்களும் பாதிக்கப்பட்டதாக வந்து சொன்னதில்லை. முறையான வளர்ப்பு நுட்பம் தெரியாமல், புறா வளர்ப்பைக் கைவிட்டவர்கள்தான் உள்ளார்கள். சரியான முறையில் புறாவளர்த்து நொடிந்து போனவர்களைப் பார்த்ததில்லை.
ஆடு, மாடு, கோழி போல, புறா வளர்ப்பும் விவசாயத்தின் ஒரு பகுதிதான். புறாக்களை வளர்ப்பதால், வருமானமும் கிடைக்கும். மனம் சோர்வாக இருக்கும்போது, புறாக்களுடன் இருந்தால் புத்துணர்ச்சியும் கிடைக்கும். புறாக்களுக்கு காலையில் மட்டும் கொஞ்சமாக தீனிப் போட்டால் போதும், பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, அடுத்தவேளை உணவை அவையே தேடிக் கொள்ளும். புறா இறைச்சியை பாரம்பரிய மருத்துவ முறையில் மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதனால், விற்பனை வாய்ப்புக்கும் சிக்கல் இருப்பதில்லை. ஆகவே, புறாக்கள் வளர்த்தால்... நமக்கும் வளர்ச்சிதான்.'
தொடர்புக்கு, செல்போன்: 9843180009.
''முருங்கை விதைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்று கேள்விப்பட்டேன். ஏக்கர் கணக்கில் விதைக்காக முருங்கை சாகுபடி செய்யலாமா?'
எஸ்.கந்தசாமி, தேனி.
முருங்கை விதைகள் விற்பனையில் அனுபவம் வாய்ந்த மதுரை ஜெயக்குமார் பதில் சொல்கிறார்.

''முருங்கை விதையிலிருந்து மருந்துப் பொருட்களும், அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கிறார்கள். குடிநீரை சுத்தம் செய்யவும் முருங்கை விதைகள் பயன்படுகின்றன. இதனால் முருங்கை விதைகளுக்குத் தேவை இருக்கிறது, ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்து, விதைக்காக மட்டுமே முருங்கையை சாகுபடி செய்வது அத்தனை லாபகரமானதாக இருக்காது. முருங்கைக்காய்க்கு அதிக விலை கிடைக்கும்போதுதான், விதையின் விலையும் ஏறும். தற்சமயம் முருங்கைக்காய் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்ந்த முருங்கை விதை, கிலோ 350 - 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே, முருங்கைக்காய் விலை சரியும்போது மட்டுமே விதையாக விற்பனை செய்யுங்கள். உதாரணத்துக்கு முருங்கைக்காய் விலை கிலோ 10 ரூபாய்க்கும் கீழே சென்றால், அது லாபகரமாக இருக்காது. இந்த சமயத்தில் மட்டுமே காய்களை முற்றவிட்டு, விதைகளைப் பிரித்து விற்பனை செய்யலாம்.
முருங்கை விதை எடுப்பதற்கு ஒட்டுக் கட்டிய முருங்கை ரகம்தான் ஏற்றது. இதன் விதைகள் தரமானதாக இருக்கின்றன. விரைவாகவும் காய்ப்புக்கு வருகின்றன. ஏக்கருக்கு 160 முருங்கைக் கன்றுகளை வைக்கலாம். நடவு செய்த 7ம் மாதம் முதல் மகசூல் கிடைக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு 7 டன் வரையிலும், முருங்கைக்காய் மகசூல் கிடைக்கும்.

பொதுவாக முருங்கை சாகுபடி செய்ப வர்கள், காய்களின் மகசூலை மட்டுமே பார்க்கிறார்கள். முருங்கை இலை அருமை யான உணவு. காய்ந்த முருங்கை இலை இன்றைய நிலவரப்படி கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் விலை குறைந்தாலும், நஷ்டம் ஏதும் வந்துவிடாது.'
தொடர்புக்கு, செல்போன்: 9952380304.
குங்கிலியம் வேறு... சாம்பிராணி வேறு!
25.11.2014 தேதியிட்ட இதழில், சாம்பிராணி மரம் பற்றிய கேள்விக்கு, பதில் தந்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை அலுவலர் ராம்சுந்தர், 'குங்கிலிய மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் கோந்துதான் சாம்பிராணி ஆகும். இதை டாமர் என்பர். குங்கிலியத்தில் சீமைக்குங்கிலியம், வெள்ளைக்குங்கிலியம், கருங்குங்கிலியம், பூனைக்கண் குங்கிலியம் என்று பலவகைகள் உள்ளன’ என்கிற தகவலையும் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூதநத்தம் கிராமத்தில் வசிக்கும் தமிழக வனத்துறையின் முன்னாள் வனச்சரகர் ர.ராம்நாத் சேகர், நமக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
'சாம்பிராணியும், குங்கிலியமும் வேறு, வேறானவை. சாம்பிராணியை ஆங்கிலத்தில் 'டாமர்’ என்று சொல்வோம். ஆனால், டாமர் என்ற சொல் சாம்பிராணியை மட்டும் குறிப்பிடுவதில்லை. வாசனை வெளியிடக்கூடிய அனைத்து வகையான பிசின்களும் டாமர் என்றே குறிப்பிடப்படுகிறது. இது ஒரு பொதுச்சொல்லாகும். இதன்படி குங்கிலியம், பச்சைக் கிளுவை மரத்திலிருந்து கிடைக்கும் 'குகுள்’ எனும் பிசின் போன்றவைகளும் டாமர் என்றே குறிப்பிடப்படுகிறது. வாசனை எனும் குணத்தில் இவையனைத்தும் ஒரே தன்மையைப் பெற்றிருந்தாலும், அடிப்படைப் பண்பிலும், தாவரவியல் பிரிவின்படியும் சாம்பிராணியும், குங்கிலியமும் வேறு வேறானவை.
சாம்பிராணியை முற்காலத்தில் சீமைக்குங்கிலியம் என்று குறிப்பிட்டிருந்தனர். சாம்பிராணி முதன்முதலாக தமிழகத்துக்கு வந்தபோது, குங்கிலியம் போன்ற வாசனையோடு இருந்ததால், சீமைக்குங்கிலியம் என்று அழைத்திருக்கலாம். காலப்போக்கில் இது குங்கிலியத்திலிருந்து மாறுபட்டது என்பதை உணர்ந்து, சாம்பிராணி என்று பெயரிட்டிருக்கக்கூடும்.
தாவரவியலின்படி சாம்பிராணியானது 'சாய்மரூபேசேயி’ என்கிற குடும்பத்தைச் சேர்ந்தது. 'சாய்மரூபா’ என்றால், கிரேக்க மொழியில், 'கசப்புச் சுவையுடைய மரத்தண்டு’ என்று பொருள்படும். இதன் தாவரவியல் பெயர் 'எயிலாந்தஸ் மலபாரிக்கம்’ என்பதாகும். பீநாரி, பெருமரம் என்று தமிழில் அழைக்கப்படும் மரத்தின் தாவரவியல் பெயர், 'எயிலாந்தஸ் எக்ஸேல்சா’ என்பதாகும். இவையிரண்டும் எயிலாந்தஸ் பேரினத்தில் அடங்கும். மலத்தைப் போன்ற வாசனையைத் தருகின்ற பீநாரி மரமும், சுகந்த, நறுமண வாசனயைத் தருகின்ற சாம்பிராணியும் ஒரே குடும்பத்தையும், ஒரே பேரினத்தையும் சேர்ந்த சகோதரர்கள் என்பது இயற்கையின் அதிசயமாகும்.'
தொடர்புக்கு, செல்போன்: 9486082995
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.