புறா பாண்டிபடங்கள்: கா.முரளி, எஸ்.சாய்தர்மராஜ்
''சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளோம். இதைச் சேமித்து வைக்க எளிய பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் உள்ளனவா?''

உலகநாதன் இணையதளம் வாயிலாகக் கேட்டுள்ளார் திண்டுக்கல் மாவட்டம், காவேரியம் மாபட்டியில் வெங்காய சாகுபடி செய்து வரும் செல்வராஜ் பதில் சொல்கிறார்.
''பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பாரம்பரியமாக, வெங்காயத்தைச் சேமித்து வைக்க 'பட்டறை’ போடும் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். அதாவது, வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளபோது, பட்டறையில் வெங்காயத்தைச் சேமித்து வைப்போம். நல்ல விலை கிடைக்கும்போது, விற்பனை செய்துவிடுவோம். கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை, இதில் வெங்காயம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

நாற்று விட்டு நடவு செய்வது, நேரடியாக விதைப்பது என்று இரண்டு வகையான நடவு முறைகள் உள்ளன. இதில், நாற்று விட்டு நடவு செய்யும் வெங்காயத்தை பட்டறை மூலம் சேமித்து வைக்க முடியாது. காரணம், இதில், நீர்ச்சத்து வேகமாக வெளியேறும். ஆகையால், உடனடியாக விற்பனை செய்து விட வேண்டும். நேரடி விதைப்பு செய்த வெங்காயம்தான், பட்டறைக்கு ஏற்றது.
பட்டறையில் சேமிப்பது என்று முடிவு செய்துவிட்டால், சில அடிப்படையான நுட்பங்களைக் கையாள வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்யும்போது, ஓர் அங்குலம் அளவுக்கு தாள் இருக்கும்படி விட்டு, அறுக்க வேண்டும். இப்படிச் செய்வதால், தாள்கள் காய்ந்த பிறகுதான், வெங்காயத்தில் உள்ள நீர் ஆவியாகும். தாளை ஒட்ட அறுத்துவிட்டால், வெங்காயம் சீக்கிரமாகக் காய்ந்துவிடும். இரண்டு நாட்கள் நிழலில் காய வைத்து, வெங்காயத்தில் உள்ள மண் முழுவதும் உதிர்ந்த பிறகுதான் பட்டறையில் வைக்க வேண்டும்.
பட்டறையை மேடான பகுதியில், 2 அடி அகலம், 5 அடி நீளம், 5 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் (இது ஒரு டன் அளவுக்கு வெங்காயத்தைச் சேமிக்கப் போதுமானது). தரையில் இருந்து ஓரடி உயரத்துக்கு கற்கள், மரக்கட்டை, குச்சிகளை வைத்து மேடை அமைக்க வேண்டும். நான்கு பக்கமும், மூங்கில் படல் வைத்து, கட்ட வேண்டும். மேல்புறத்தில் பனை ஓலையால் கூரை வேய்ந்து கொள்ள வேண்டும். மழைநீர் பட்டறைக்குள் செல்லாத அளவுக்கு இருக்க வேண்டும். இப்படிப் பாதுகாக்கப்படும் வெங்காயத்தில் கொஞ்சம் கூட சேதம் இருக்காது. இந்த பாரம்பரிய நுட்பத்தைப் பயன்படுத்தி, வெங் காயத்துக்கு நல்ல விலை கிடைக்கும் சமயத்தில் விற்பனை செய்து லாபம் எடுக்கலாம்.''
தொடர்புக்கு, செல்போன்: 9345941301.
''வாழையில் என்னென்ன ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம்?''
ஆர்.கணேசன், பாலக்கோடு.

தருமபுரி மாவட்ட வேளாண்துறை உதவி இயக்குநர் என்.மதுபாலன் பதில் சொல்கிறார்.
''வாழைக்கன்று நடவு செய்யும்போதே ஊடு பயிரையும் சாகுபடி செய்யலாம். பொதுவாக கன்றுக்கு, கன்று 5 அடி இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்தினால், ஊடுபயிரில் நல்ல விளைச்சலை எடுக்க முடியும். குறிப்பாக 90 நாட்களில் அறுவடையாகும், ஊடுபயிர்களைப் பயிர்செய்வது நல்லது. வாழைக்கு ஏற்ற ஊடுபயிர்கள் வரிசையில் தட்டைப்பயறு, செடிமுருங்கை ஆகியவை முன்னிலையில் உள்ளன. வாழைக்கன்றுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தட்டைப்பயறு விதைக்கலாம். செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு, ஒரு வரிசை நடவு செய்யலாம். தட்டைப்பயறும், செடிமுருங்கையும் காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும். தட்டைப்பயறு உயிர்மூடக்காகவும் செயல்படும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும். இந்த இரண்டு பயிர்களையும் வயலில் வாழை உள்ள வரை பயிரிட்டு வரலாம்.

வாழை நடவு செய்த 4 மாத காலம் வரை காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்யலாம். தருமபுரி பகுதியில் வாழையுடன், தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. இப்படி ஊடுபயிராக சாகுபடி செய்த தக்காளி மூலம் ஏக்கருக்கு 10 டன் வரைகூட மகசூல் கிடைத்துள்ளதைப் பார்த்துள்ளேன். முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், மிளகாய், கத்திரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி மற்றும் செண்டுமல்லி... போன்றவையும் சாகுபடி செய்யலாம். சமவெளிப்பகுதிகளில் காலிஃபிளவர், முட்டைக்கோஸ்... போன்ற மலைப்பிரதேச காய்கறிகளும் வாழை யில் ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது நல்ல விளைச்சலைத் தந்து வருகின்றன. எனவே, வாழை சாகுபடி செய்யும்போது, கூடவே ஊடுபயிர் சாகுபடி செய்வது நல்லது. ஊடுபயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை சாகுபடிச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.''
தொடர்புக்கு, செல்போன்: 9751506521.
''பட்டுப்புழு வளர்க்க மல்பெரி சாகுபடி செய்துள்ளேன். இதை முற்றிலும் இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஆலோசனை சொல்லுங்கள்?''
ஆர்.கஜேந்திரன்,மண்டையூர், புதுக்கோட்டை
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள கதிரிபுரம் கிராமத்தில் இயற்கை முறையில் மல்பெரி சாகுபடி செய்யும் தேவராஜ் பதில் சொல்கிறார்

''பொதுவாக ரசாயன முறையில் விளையும் மல்பெரி இலைகளைக் கொடுத்து பட்டுப்புழுக்களை வளர்க்கும்போது... 100 முட்டைகள் மூலம் 6080 கிலோ வரையில் மட்டுமே பட்டுக்கூடு கிடைக்கும். இயற்கை முறையில் வளரும் மல்பெரியை உணவாகக் கொடுத்தால், 100 கிலோ வரையிலும் கூட கூடு கிடைக்கிறது.
மல்பெரிச் செடிகளுக்கு தொழுவுரமும், அமுதக்கரைசல் மட்டும் கொடுத்தால் போதும். மற்றபடி புழுக்கள் சாப்பிடாமல் கழிக்கும் கழிவுக் குச்சிகளை செடிகளின் மத்தியில மூடாக்காகப் போட்டு உரமாக பயன்படுத்தலாம். வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சும்போது அமுதக்கரைசலைக் கலந்து விடலாம்.
இப்படி சாதாரணமாகப் பராமரித்தால், மல்பெரிச் செடிகள், வெற்றிலை இலைபோல செழிப்பாக வளரும். மல்பெரியில் நோய் தாக்குதல் அதிகமா இருக்காது. அப்படியே வந்தாலும், 10 லிட்டர் தண்ணீரில், ஒரு லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தெளித்தால் போதும். அமுதக்கரைசல் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
மாடு ஒரு தடவை போட்ட சாணம், ஒரு தடவை பெய்த சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ் டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை, 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைத்தால், அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன்
10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒரு முறை தெளிப்பதற்கான அளவு இது.
ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்குத் தெளிக்க வேண்டியிருக்கும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம். ஒரு முறை நடவு செய்த மல்பெரியை முறையாகப் பராமரித்தால் பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.''
தொடர்புக்கு, செல்போன்: 9489287550.
இதுதான்... பீக்களா செடி..!
பசுமை விகடன் 25.11.14 தேதியிட்ட இதழில், 'மண்புழு மன்னாரு’ பகுதியில் 'முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி!’ பற்றி செய்தி வெளியாகியிருந்தது. ''பீக்களா செடி எப்படி இருக்கும், இதன் தாவரவியல் பெயர் என்ன, இதற்கு வேறு பெயர்கள் உள்ளனவா?'' என்று நிறைய வாசகர்கள் கேட்டுள்ளனர்.

பீக்களா செடியின், பொதுவான பெயர் 'சங்கம்’. இதில் முள்சங்கம், பீச்சங்கம் என்று இரண்டு வகை உண்டு. பீச்சங்கம் என்பதன் இலைகளை கசக்கினால், துர்நாற்றம் வீசும். இதுதான் பீக்களா செடி என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர், 'க்லெரோடெண்ட்ரம் இனெர்ம்’(Clerodendrum Inerme). பாரம்பரிய மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். பூச்சிவிரட்டி தயாரிக்கவும் இதன் இலைகள் ஏற்றவை.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.comஎன்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.