மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!

பசுமைக் குழு, ஓவியம்: ஹரன்

காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், நெல் வயலில் பசுந்தாள் உரமாக விதைத்து வளர்ந்திருந்த சணப்புப் பயிரைப் பார்வை யிட்டுக் கொண்டிருந்தார். முதல் சுற்று வியாபாரத்தை முடித்துவிட்டு வந்துசேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. பண்பலை வானொலி கேட்டுக் கொண்டே சற்று தாமதமாக வந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ''சமையல் கேஸ் கம்பெனியில ஆதார் அட்டையையும், பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் பதிவு செய்யணுமாம். 'பொறுத்து போலாம்’னு சொன்னா... வீட்டம்மா கேக்காம நச்சரிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதான் ஒரு எட்டு போய் பதிஞ்சுடலாம்னு போனேன். பயங்கரக் கூட்டம். ஒரு வழியா பிதுங்கி நசுங்கி பதிஞ்சுட்டு வந்தேன்'' என்று தன்னிலை விளக்கம் அளிக்க... வானொலியை அமர்த்திவிட்டு மூவரும் வரப்பில் அமர்ந்துகொள்ள... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கிவைத்தார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!

'இப்போ சம்பா பருவத்துல சாகுபடி செய்திருக்கிற நெல், ஜனவரி முதல் வாரத்துல இருந்து அறுவடையாகத் தொடங்குமாம். அதனால, அதுக்கு முன்னாடியே டெல்டா மாவட்டங்கள்ல தேவையான அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குறதுக்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கு. தமிழகம் முழுக்க இப்போதைக்கு 151 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டுல இருக்குதாம். கூடுதலா தேவைப்படுற இடங்கள்ல புதிய கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி கொடுத்திருக்காங்களாம். இந்தப் பருவத்துல கொள்முதல் செய்யுற நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையோட, ஊக்கத் தொகையும் சேர்த்து... சாதாரண ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1,410 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 1,470 ரூபாயும் கொடுப்பாங்களாம். அடுத்த வருஷம் செப்டம்பர் மாசம் 30ம் தேதி வரை இதே விலை நீடிக்குமாம்'' என்றார்.

'எல்லா டிபார்ட்மெண்டும் உறங்கிக் கிடக்குற மாதிரி 'கொள்முதல் நிலையங்களையும் திறக்காம விட்டுடு வாங்களோ’னு விவசாயிகள் பயந்துக்கிட்டு கிடந்தாங்க. நல்லவேளையா உத்தரவு போட்டுட்டாங்க' என்ற வாத்தியார், அடுத்தச் செய்தியை தான் சொல்ல ஆரம்பித்தார்.  

'தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில முருங்கை அதிகளவுல உற்பத்தியாகுது. இந்தப் பகுதிகள்ல போன வருஷம் நிலவின கடும் வறட்சியால பல இடங்கள்ல முருங்கை மரமெல்லாம் பட்டுப்போச்சு. இறவைப் பாசனத்துல சாகுபடி செய்ற முருங்கை மரங்களும் இப்போ ரெண்டு மாசமா பெய்த மழையிலயும், வீசுன காத்துலயும் பூக்கள் கொட்டி விளைச்சல் ரொம்பக் குறைஞ்சு போச்சாம். அதனால, ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுக்கு முருங்கை வரத்து குறையவே, விலை எகிறிப்போச்சாம். ஒரு முருங்கைகாய் 20 ரூபாய்க்கு மேல விலை போகுதாம்' என்றார்.

'ஆமாங்கய்யா இந்த விலை கொடுத்து முருங்கையை வீடுகள்ல யாரும் வாங்காத தால, நான் அதை வாங்குறதேயில்லை' என்று ஆமோதித்தார், காய்கறி.

'கடலூர் மாவட்டத்துல 5 ஒன்றியங்கள்ல 'ஒருங் கிணைந்த நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்’ செயல்பாட்டுல இருக்கு. இந்தத் திட்டம் மூலமா 100 சதவிகித மானியத்தில் 'அஸ்ட்ராஜி -12’ங்கிற கம்பெனியோட இயற்கை உரத்தை விவசாயிகளுக்குக் கொடுத் திருக்காங்க. அந்த உரத்தை நிலத்துல போட்டப்போ அது கரையவேயில்லையாம். அந்த உர மூட்டையில கம்பெனி பெயர், உற்பத்தித் தேதி, காலாவதித் தேதி, எந்தெந்தப் பயிருக்குப் பயன்படுத்தலாம், அதுல கலந்திருக்குற பொருட்கள் பத்தின எந்த விவரமும் இல்லையாம். விற்பனை சட்டப்படி இந்த விவரங்களைக் கட்டாயம் அச்சடிச்சிருக்கணுமாம். இதைக்கூட பார்க்காம அரசு அதிகாரிகள் கொள்முதல் பண்ணி, விநியோகமும் செய்திருக்காங்க. இந்த விஷயத்தை கலெக்டர் சுரேஷ்குமார் காதுக்கு விவசாயிகள் கொண்டுபோகவே, விசாரணை செய்ய உத்தரவு போட்டிருக்காராம்' என்று சொன்னார் ஏரோட்டி.

அவரைத் தொடர்ந்து ஒரு செய்தியைச் சொன்னார் காய்கறி. 'பொள்ளாச்சி, சீனிவாசபுரம் பகுதியில ரயில்வே பாலம் அமைக்கிற வேலைக்காக, சாலை ஓரமா இருந்த வேப்ப மரம், புளிய மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டிடுச்சாம். அதுல நிறைய மரங்கள் நூறு வயசு ஆன மரங்களாம். இதைக் கேள்விப்பட்ட ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல படிக்கிற பசங்க 'மரத்தை வெட்டாதீங்க’னு கோஷம் போட்டுக்கிட்டே ஊர்வலமாகப் போய் வெட்டப்பட்ட மரங்களுக்கு, மாலை போட்டு அஞ்சலி செலுத்தி, அவங்களோட எதிர்ப்பைக் காட்டியிருக்காங்க' என்று சொல்ல,

''பிஞ்சுங்க மனசுல நல்ல விஷயங்கள் பதிஞ்சு கிடக்கு. ஆனா, பெருசுங்க மனசு முழுக்க நஞ்சு பரவிக்கிடக்கு. இது, இந்த நாட்டோட சாபக்கேடு'' என்று கோபம் பொங்கச் சொன்னார் வாத்தியார்.

இந்த நேரத்தில், வயலை உழவு செய்ய டிராக்டர் வந்துவிட... எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!

உரத்துக்கு நேரடி மானியம்!

மத்திய அரசு, உரத்துக்கு வழங்கும் மானியத்தை உரம் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது. அதை மாற்றி, 'இனி, உரத்துக்கான மானியத்தை விவசாயிகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலம், உர மானியத்தில் நிலவும் மோசடிகள், குறைபாடுகள், அக்கறையின்மை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்’ என நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் பரிந் துரைத்துள்ளது.

நிகழ்ச்சி

'நம்ம ஊர் நம்மாழ்வார்!’

மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றுவதுடன், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள், பலரும். இவர்களில் பலரையும், 'நம்ம ஊர் நம்மாழ்வார்’ என்று கௌரவப்படுத்தி வருகிறார்கள், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள். இதைப் பற்றி பேசும் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேசு கருப்பையா, 'நினைவில் வாழும் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், இயற்கை விவசாயத்துக்காகவும், மாசு இல்லாத சுற்றுச்சூழலுக்காகவும் பாடுபட்டார். அவர், இளைஞர்கள் மனதிலும், விவசாயிகளின் மனதிலும் விதைத்த விதைகள், தற்போது விருட்சமாகத் தளைக்கத் துவங்கி இருக்கின்றன.

மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!

நம்மாழ்வார் ஐயா நினைத்த விஷயங்களை நடைமுறைப்படுத்துவது ஒன்றுதான் அவருக்கு நாம் செலுத்தும் நிஜமான அஞ்சலியாக இருக்கும் என்பதால்தான், அவருடைய வழியில் உழைப்பவர்களை 'நம்ம ஊர் நம்மாழ்வார்’ என்று நம்மாழ்வாரின் மறைவைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சியின்போது கௌரவவித்தோம். தற்போது ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் இயற்கை விவசாயி, சித்த மருத்துவர், பொது இடங்களில் மரங்களை நட்டு வளர்ப்பவர், மூலிகை வளர்ப்பை மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள் என்று பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த சிலரை கௌரவப்படுத்த இருக்கிறோம்' என்றார்.