மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

''மண்புழுக் குளியல் நீர் தயாரிப்பது எப்படி?''

 புறா பாண்டி

 ''வங்கிக் கடன் மூலம் கறவை மாடு வாங்கி வளர்த்து வருகிறேன். சமீபத்தில் ஒரு மாடு இறந்து விட்டது. காப்பீடு செய்தபோது மாட்டின் காதில் அணிவிக்கப்பட்ட தோடு (வில்லை) தொலைந்து விட்டதால், 'இறந்த மாட்டுக்கு இழப்பீடு தர முடியாது’ என்று காப்பீட்டு நிறுவனம் சொல்கிறது. இது சரிதானா?''

பொ. மல்லிகா, ராமநாதபுரம்.

தி ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவு அலுவலர் வி. பாஸ்கரன் பதில் சொல்கிறார்.

 நீங்கள் கேட்டவை
##~##

''ஆரம்ப காலங்களில் இந்த நடைமுறை கிடையாது. மாடு இறந்து விட்டால், கால்நடை மருத்துவரிடம் வாங்கப்பட்ட சான்று இருந்தாலே, இழப்பீடு கிடைத்துவிடும். பலர் இதை முறைகேடாகப் பயன்படுத்தத் தொடங்கியதால்தான், 'காப்பீடு செய்யப்பட்ட மாடு இறக்க நேரும்போது அதன் காதில் கட்டாயம் வில்லை இருக்கவேண்டும்' என்பது கட்டாய விதிமுறையாக ஆக்கப்பட்டது. இந்த வில்லையில்தான் மாட்டின் விவரம், காப்பீடு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். காப்பீடு செய்யும்போதே விவசாயிகளிடம் இந்த விதிமுறைகளைக் கட்டாயம் படிக்கச் சொல்வோம்.

சமயங்களில் மரக்கிளைகளிலோ, முள்ளிலோ சிக்கி, வில்லை தொலைந்துவிட வாய்ப்புண்டு. அப்படித் தொலைந்தால், காப்பீடு நிறுவனம் மூலமாக புதிய வில்லையை வாங்கிக் கொள்ள வேண்டும். மாடு இறக்கும்பட்சத்தில், இந்த வில்லையோடு மருத்துவரின் சான்றிதழையும் இணைத்துக் கொடுத்தால்தான் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்வார்கள். ஒருவேளை வெள்ளிக்கிழமை மாலை மாடு இறந்தால், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால், திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதுமாதிரியான சமயத்தில் மட்டும் வில்லை அணிவிக்கப்பட்டிருக்கும் காதை அறுத்து எடுத்து வைக்க வேண்டும்.

உங்கள் விஷயத்தில் வில்லை தொலைந்துவிட்டதால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.''

தொடர்புக்கு, அலைபேசி: 98840-53859.

''பலாப்பழத்தில் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பது பற்றிய விவரங்கள் எங்கு கிடைக்கும்?''

கே. சிவராமன், பண்ருட்டி.

பலாப்பழம் பற்றி பல ஆய்வுகளைச் செய்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்ரீபட்ரே பதில் சொல்கிறார்.

 நீங்கள் கேட்டவை

''பலாவின் சுவையை அறிந்துதான் தமிழர்கள் அதை முக்கனிகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள். இந்தியாவில், பண்ருட்டி, புதுக்கோட்டை பகுதிகளை 'பலாவின் சொர்க்கம்' என்றே சொல்லலாம். நல்ல சுவை தரும் பலா தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. ஆனால், இதன் மகத்துவம், தமிழக மக்களுக்குத் தெரிவதில்லை. பலா சுவையான பழம் என்பதை விடுத்து அதில் நிறைய மருத்துவக் குணங்களும் உள்ளன. ரத்தக்கொதிப்புக்கு இது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதில் பொட்டாஷியம் சத்து அதிகளவில் உள்ளது. பலாக்கொட்டை அதிக வலிமை கொடுக்கக் கூடியது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பலா மரங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், எல்லா விழாக்களிலும் பலா மூலம் தயாரிக்கப்படக்கூடியத்  தின்பண்டங்கள் இடம் பெற்றிருக்கும்.  

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பழங்களின் வரத்து அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் ஒரு பழம் பத்து ரூபாய்க்குக் கூட விற்கும். இதற்குக் காரணம், மற்ற பழங்களைப் போல பலாவை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. ஒவ்வொரு பருவத்திலும் சுமார் 50% பழங்கள் சேமித்து வைக்க முடியாத காரணத்தால் வீணாகின்றன. ஆனால், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பத்தால், இந்த இழப்பைத் தவிர்க்கலாம்.

பலா மற்றும் அதன் கொட்டையிலிருந்து ஜாம், ஊறுகாய், பிஸ்கட், தோசை, ரொட்டி மாவு.... என நூற்றுக்கணக்கானப் பொருட்களைத் தயாரிக்கலாம். பலாவில் இருந்து மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க, கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் பயிற்சி கொடுக்கிறார்கள்.

வியட்நாம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பலா சாகுபடி நடந்து வருகிறது. அங்கிருந்து பலாவில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை உணர்ந்து நாமும் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டால், இழப்பைத் தவிர்ப்பதோடு அதிக வருமானமும் பார்க்கலாம்.''

தொடர்புக்கு: வேளாண் அறிவியல் மையம், பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா. தொலைபேசி: 0469-2662094, 2661821.

ஸ்ரீபட்ரே, தொலைபேசி: 04998-266148.

''வெர்மி வாஷ் என்று அழைக்கப்படும் மண்புழுக் குளியல் நீர் தயாரிப்பது எப்படி? இதைப் பயன்படுத்துவதால் என்ன நன்மை கிடைக்கும்?''

எச். ராஜமோகன், தெம்மாவூர்.

மண்புழுக் குளியல் நீரைத் தயாரித்துப் பயன்படுத்தி வரும், மதுரை மாவட்ட முன்னோடி விவசாயி, சிவசாமி பதில் சொல்கிறார்.

 நீங்கள் கேட்டவை

''மண்புழுக் குளியல் நீர், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. இதில் பயிர்களுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். கடைகளில் விற்பனை செய்யப்படும் 'சைட்டோ சைம்’ தெளித்தால், என்ன வகையான நன்மை கிடைக்குமோ... அதைவிட அதிக நன்மைகள் இதில் கிடைக்கும். யூரியா போட்டவுடன் பயிர்கள் பச்சைக் கட்டி வருவதைப்போல இக்குளியல் நீரை இலை வழி ஊட்டமாகத் தெளித்தவுடனே பயிர்களில் பச்சை கட்டும்.

காய்கறிப் பயிர்களில் உபயோகப்படுத்தும்போது சுவை கூடுவதோடு, நோய் எதிர்ப்புத் தன்மையும் கிடைக்கிறது. பத்து லிட்டர் நீரில் 50 மில்லி மண்புழுக் குளியல் நீரைக் கலந்து தெளித்தால் போதும். பத்து நாட்கள் இடைவெளியில் இதை அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். பலவித நன்மைகள் இதில் இருந்தும் விவசாயிகள் இதைப் பயன்படுத்துவதில்லை, என்பதுதான் வேதனை.

இதைத் தயாரிப்பது சுலபம். 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதன் அடிப்புறத்தில், சிறிய நீர்த் திறப்புக் குழாய் அமைக்க வேண்டும். டிரம்முக்குள் சிறிய ஜல்லி கற்களை ஒரு அடுக்கு போடவும். அடுத்து, 3 கிலோ அளவுக்கு மணலைப் போட்டு, அதன் மீது 10 கிலோ மட்கிய சாணத்தைப் போட வேண்டும். மட்கிய சாணம் மற்றும் மணல் ஆகியவை நன்றாக நனையும்படி தேவையான அளவுக்கு நீர் ஊற்ற வேண்டும். பின்பு, காய்ந்த இலை தழைகளை போட வேண்டும். பிறகு, ஒரு கிலோ அளவுக்கு மண்புழுக்களை விட வேண்டும். இந்த டிரம்மின் மேல்புறம் இருந்து சொட்டு சொட்டாக நீர் விழும்படியான அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நீர் மண்புழுவின் உடலிலும், கழிவுகளின் மீதும் பட்டு, ஏறத்தாழ பத்து நாட்கள் கழித்து, கீழ் உள்ள குழாய் மூலமாக வெளியேறும். இதுதான் மண்புழுக் குளியல் நீர். இதை ஆறு மாதங்கள் வரை சேமித்துப் பயன்படுத்தலாம்.''

தொடர்புக்கு, அலைபேசி: 99947-98312.

''இந்தியாவில் உள்ள கறவைமாடு ரகங்களில் அதிகப் பால் கொடுப்பவை எந்த ரகம்?''

 நீங்கள் கேட்டவை

கே.எஸ். கார்த்திக் பிரபு, கும்மக்கல்பாளையம்.

பெங்களூரு, தேசிய பால் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர். ஏ.ஓ.பி. ரெட்டி பதில் சொல்கிறார்.

''என்னுடைய ஆராய்ச்சியின்படி சாஹிவால், கிர், தார்பார்க்கர்... போன்ற நமது நாட்டு ரக மாடுகள் தினமும் 8 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பால் கறக்கின்றன. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த (சுதந்திரத்துக்கு முன் பஞ்சாப் மாநிலம்) சாஹிவால் ரகம் 15 லிட்டர் கறவைத்திறன் கொண்டது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இந்த ரகம் பரவலாக உள்ளது. இந்த ரக மாடு ஒன்று 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏறத்தாழ இதே அளவுக்குப் பால் கொடுக்கக் கூடிய கிர், தார்பார்க்கர்... போன்ற ரகங்கள் 25 ஆயிரம் ருபாய் விலையில் இருந்து கிடைக்கின்றன. இந்த மாடுகள், இந்தியாவில் எந்த மூலையிலும் வளரும் தன்மை கொண்டவை. கலப்பின மாடுகளைக் காட்டிலும், இந்த மாடுகளின் பால் தரமானது. தவிர, பால் கூடுதல் விலைக்கும் விற்பனையாகிறது.’

''தேனீ வளர்ப்பு பற்றி பயிற்சி பெற விரும்புகிறோம். யாரைத் தொடர்பு கொள்வது?''

கே. கண்மணி, திருச்சி.

''கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள, பூச்சியியல் துறையில் இதற்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது.''

தொடர்புக்கு: தொலைபேசி: 0422-6611214.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2

என்ற முகவரிக்கு தபால் மூலமும்

Pasumai@vikatan.com என்ற முகவரிக்கு

இ-மெயில் மூலமும்  PVQA(Space) உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.

படங்கள்: க. நாகமணி, வீ. சிவக்குமார்