மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

புறா பாண்டி, படங்கள்: கா.முரளி, சே.சின்னதுரை

''அதிக சத்துக்கள் கொண்ட தீவனப்பயிர்கள் எவை? இதன் விதைகள் எங்கு கிடைக்கும்?''

- எம்.சுந்தரம், பவானி.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தீவனப் பயிர்கள் துறை பேராசிரியர் முனைவர்.ச.பாபு பதில் சொல்கிறார்.

''புல் மற்றும் தானிய வகைத் தீவனப்பயிர்களைவிட, பயறு வகைத் தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைவாக இருப்பினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள்... குறிப்பாக, புரதச்சத்தானது இவற்றில்தான் அதிகமாக இருக்கிறது. இதனால்தான், பயறு வகைத் தீவனப்பயிர்களை, 'இயற்கைப் புரத வங்கி’ என்றும் அழைக்கிறார்கள்.

பயறுவகைத் தீவனப் பயிர்களைப் பொறுத்தவரை குதிரைமசால், வேலிமசால், முயல்மசால், தட்டைப்பயறு, பெர்சீம், சோயாமொச்சை, கொள்ளு, ஆட்டுமசால், கொத்தவரை, நரிப்பயறு, சிராட்ரோ, சங்குப்பூ ஆகியவை தீவனத்துக்கென்றே பயிரிடப்படுகின்றன. இவற்றில் குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், பெர்சீம், சங்குப்பூ ஆகியன நீண்டகாலப் பயிர்களாகும். பொதுவாக பயறு வகைத் தீவனப்பயிர்கள் அதிக வறட்சி, சத்துக்குறைபாடு, நீர்த்தேக்கம், தட்பவெப்ப நிலை மாற்றங்களைத் தாங்கி வளராது. மேய்ச்சலுக்கேற்ற பல்லாண்டு பயறுவகைத் தீவனப்பயிர்களான முயல்மசால், சிராட்ரோ, சங்குப்பூ ஆகியன வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை.

பயறுவகை தீவனப்பயிர்களை கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, பால் அளவு கூடும். ஆடுகளுக்குக் கொடுத்தால் எடை கூடும். பயறுவகைத் தீவனப்பயிர்களைத் தனிப்பயிராகவும் புல், தானியவகைப் பயிர்களோடு கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். தட்டைப்பயறு, சோயாமொச்சை போன்றவற்றை 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். இதனால், மற்றபயிர்களுடன் இவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இவை காற்றில் உள்ள தழைச்சத்தை வேர்முடிச்சுகளின் மூலம் மண்ணில் நிலை நிறுத்துவதால், மண்வளத்தையும் மேம்படுத்தும். அதிக சுவையுடன் இருப்பதால், கால்நடைகளின் உட்கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

பயறு வகைத் தீவனப்பயிர்கள், மற்ற தீவனப் பயிர்களை விட இரண்டு, மூன்று மடங்கு அதிக புரதச்சத்தும், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், தாது உப்புக்களைக் கொண்டுள்ளது. இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் பயறு வகைத் தீவனப் பயிர்களை சாகுபடி செய்து... அடர் தீவனம் கொடுப்பதால் ஏற்படும் செலவைக் குறைக்கலாம். பயறு வகைத் தீவன விதைகள் உட்பட அனைத்து வகையான தீவனவிதைகளும் எங்கள் துறையில் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். தீவனப்பயிர்கள் குறித்த ஆலோசனைகளுக்கும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.'

தொடர்புக்கு, தொலைபேசி: 04226611228.

''மாடித்தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியம் உண்டா? அதை எப்படி பெறுவது?'

எஸ்.குமார், திருச்சி.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

சென்னையில் உள்ள திருவான்மியூர் உதவித் தோட்டக்கலை அலுவலர் டி.செந்தில்குமரன் பதில் சொல்கிறார்.

''தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 'நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்சமயம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகர் பகுதியில் மட்டுமே செயல்படும் இத்திட்டம், இப்பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வீட்டின் மாடி மற்றும் பால்கனி பகுதிகளில் எளிய முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துகிறோம். அதாவது, மாடியில் பத்து வகையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தேவையான 2,650 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் அடங்கிய தளை ஒன்றினை (KIT) 50 சதவிகித மானிய விலையில் 1,325 ரூபாய்க்கு வழங்குகிறோம். ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க, 150 சதுர அடி இடம் போதுமானது. அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 தளைகள் வரை வழங்கப்படுகிறது.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணைவிட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால்தான், தென்னை நார்க்கழிவை செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கிறோம். செடிகளை வளர்க்க நாங்கள் வழங்கும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங்கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில்.... கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளையே, மாடித் தோட்டங்களில் பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறோம்

இந்தத் திட்டத்தில் பயன்பெற சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகர மக்கள் மட்டுமே தகுதியானவர்கள். இருப்பிடச் சான்று நகலுடன், எங்கள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கப்படும். வாடகை வீட்டில் வசிப்பவர்களும்கூட மானியம் பெற்று மாடித்தோட்டம் அமைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.'' இணையதள முகவரி: http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit

தொலைபேசி: 04425554443. செல்போன்: 9841317618.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

 ''அசோலா வளர்த்து வருகிறோம். தொட்டியில் ஒரு மாதம் வரை நன்றாக உள்ளது. பிறகு, நோய்த் தாக்குதல் போல ஏற்பட்டு அசோலா அழிந்து விடுகின்றன. இதிலிருந்து அசோலாவைக் காப்பாற்றுவது எப்படி?''

ர.குமரவேல், கும்மிடிகாம்பட்டி,

திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் கிராமத்தில் அசோலா வளர்த்து வரும் இளம் விவசாயி ப.சதீஷ் பதில் சொல்கிறார்.

 நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?

''ரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தி அசோலா வளர்க்கும்போது, நோய்த் தாக்குதல் இருக்கும். பழைய சாணத்தைப் பயன்படுத்தும் போதும், நோய்த் தொற்று ஏற்படும். முற்றிலும் இயற்கை முறையில் அசோலா வளர்த்தால், நோய்த் தாக்குதல் ஏற்படாது. கடந்த 4 ஆண்டுகளாக அசோலா வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு முறைக்கூட நோய்த் தாக்குதல் ஏற்பட்டதில்லை. அசோலாவில் நோய்த் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் சில யுக்திகளைப் பின்பற்றுகிறேன். மாடு, சாணம் போட்ட ஒரு மணி நேரத்தில், அந்த சாணத்தைப் பயன்படுத்த வேண்டும். இதையும் அப்படியே பயன்படுத்தாமல், கரைத்து, ஊற்ற வேண்டும். இதன் மூலம் அசோலாவுக்கு உடனடியாக உணவு கிடைக்கும். தவறாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தொட்டியில் உள்ள மண்ணை மாற்றி, புதிய மண்ணைப் போட வேண்டும். மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம், தண்ணீரையும் மாற்ற வேண்டும். இத்துடன் அசோலா வளர்ச்சியை ஊக்கப்படுத்த... மாதம் ஒரு முறை முருங்கை இலை, வேப்பந்தழை தலா கால் கிலோ என்ற அளவில், எடுத்துத் தொட்டியில் கலந்து விடலாம். இதனால், அசோலாவில் நோய்த் தாக்குதலும் இருக்காது. அசோலாவின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 9843377470.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.